என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது.
- முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்றும் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது. சதுர்த்தியும், கிருத்திகையும் இணைந்து வரும் இன்று முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் வணக்கம்! திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென நாம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக, சதுர்த்தியும் கிருத்திகையும் இணைந்து வரும் சிறப்பான நன்னாளான இன்று அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதியன்று, அருள்மிகு முருகப்பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை நாம் பாராயணம் செய்ய வேண்டுமென உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
அதே போல வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பௌர்ணமியன்று, மாலை வேளையில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கும் மக்கள் முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீர தண்டாயுதபாணிக்கு அரோகரா!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
- 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக திட்டவட்டம்.
வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் நண்பகல் 12 முதல் 3 மணிவரை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் QR Code உடன் நுழைவுச்சீட்டு பெற்ற 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக திட்டவட்டம்.
தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு கர்ப்பிணி, முதியோர், மாணவ- மாணவியர் உள்ளிட்டோர் கட்டாயமாக வரவேண்டாம் என தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
- சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதி.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
அவருக்கு தொடர் காய்ச்சல் நீடித்து வந்ததால், உடனடியாக அவரை சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம் தேறியவுடன் ஓரிரு நாட்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு.
- இந்த கூட்டம் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு.
இந்த கூட்டம் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
- மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.
நீக்கப்பட்ட 97.37 லட்சம் பெயர்களில், உயிரிழந்த வாக்காளர்கள் 26 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என கணக்கிடப்பட்டது.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.
பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.
அதேபோல், இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தமாக 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி கடந்த 10-ந்தேதி நிறைவடைந்தது.
வரைவு வாக்காளர் பட்டியலில், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் என்று காட்டப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால் சுமார் 23 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி கணக்கிடும்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.
மாவட்டங்களில் நாளை காலை 10 மணிக்கு மேல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலம் முழுவதும் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் தரவுகளை வெளியிடுவார். voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணைய செயலியில் வாக்காளர் பெயர்களை சரிபாரக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்தை படிப்படியாக அளிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்
- 2029-ல் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்குவோம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து பாத யாத்திரை திருவட்டார் பேருந்து நிலையம் முன்பு தொடங்கியது.
திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மகாத்மா காந்தி திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பாதயாத்திரையை துவக்கி வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது,
இங்கு வந்திருக்கும் காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் அன்பான வணக்கம், இந்த கொட்டும் மழையிலும் நமது பேரியக்கத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஒன்று கூடி இந்த பாத யாத்திரையில் கலந்து கொளும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை முடக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. முதலில் வேலை நாட்களை குறைவாக கொடுத்தனர்.பின்னர் ஊதியத்தை நிறுத்தினார்.
தற்போது பெயரை மாற்றி திட்டத்திற்கு வேறு பெயரை வைத்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு நூறு சதவீதம் நிதியை வழங்கி வந்தது. தற்போது பாஜக அரசு 60% நிதியையும் மாநில அரசு 40% நிதியையும் வழங்க வேண்டுமென கூறுகிறது.
இந்தத் திட்டத்தை படிப்படியாக அளிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம், இது மட்டுமல்ல பல திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது போலவும், அந்தத் திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தது போன்றும், அல்லது அவர்கள் புதுப்பித்தது போன்றும் செய்கின்றனர்.
இதனை நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்கிறார். நாம் எல்லோரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். மத்தியில் இருக்கும் பாஜக அரசை தூக்கி எறிவோம், 2029-ல் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் குமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் , முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செலின் மேரி, முன்னாள் வட்டார தலைவர் தங்க நாடார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் . நடைபயணம் திருவட்டார், ஆற்றூர், வீயன்னூர் வழி வேர்கிளம்பி-யை சென்றடைந்தது.
- பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 5 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.
- முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தடாபெரும்பாக்கம், பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எழுச்சியுரை மேற்கொண்டார்.
அப்போது இபிஎஸ் பேசியதாவது, ''இன்னும் இரண்டு மாதம் தான்… ஏப்ரலில் தேர்தல் வரும். இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித் தரவேண்டும். நம் கூட்டணி வலிமையானது அதிமுக தான் தலைமை. வெற்றி பெற்று அதிமுக தான் ஆட்சி அமைக்கும், அதிமுக தலைவர் தான் முதல்வர்.
திமுக கூட்டணி அப்படியா இருக்கிறது? காங்கிரஸ் பங்கு கேட்கிறது. எப்போதும் உங்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடம் என்று பிரச்னை. தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.
இரண்டு மாதம் முன்பு ஸ்டாலின் என்ன பேசினார்..? இபிஎஸ் கடையை விரித்து வைத்திருக்கிறார், யாரும் வரவில்லை என்றார். பலமான கூட்டணி அமைந்துவிட்டது. இது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்கு உருவான கூட்டணி. உங்கள் கூட்டணி அப்படியில்லை சுயநலம் நிறைந்த கூட்டணி. அதனால் தான் திமுகவின் நிலை தெரிந்து காங்கிரஸ் பங்கு கேட்கிறது, விசிக பட்டும் படாமலும், பங்கு இருந்தால் பரவாயில்லை என்று கேட்கிறார்கள்.
இப்போது புதிதாக ஒரு கட்சி சேர்ந்திருக்கிறது. அந்தம்மா மாநாடு நடத்தியபோது, அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கிறது. அப்படிப்பட்ட கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன.
நம் கூட்டணி ஒரே நிலைப்பாடு அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும், மக்கள் விரோத திமுகவுக்கு நிரந்தர விடுதலை கொடுக்க வேண்டும். இதுதான் நம் கூட்டணிக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். லேட்டாக கூட்டணி அமைத்தாலும் லேட்டஸ்டா அமைத்த கூட்டணி.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா..? நாட்டு மக்களை ஏமாற்றும் திமுகவுக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும். பல வாக்குறுதிகளைக் கொடுத்து இன்னும் பலவற்றை நிறைவேற்றவே இல்லை. திமுக வாக்குறுதியில் நான்கில் ஒரு பங்கு தான் நிறைவேற்றினர், வெள்ளை அறிக்கை கேட்டேன், பதிலில்லை.
இது கிராமங்கள் நிறைந்த பகுதி. விவசாயத் தொழிலாளிகள் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்று சொன்னார்கள் செய்யவில்லை. நாம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததால் மத்திய அரசு 125 நாளாக உயர்த்தியது. ஆனால் திமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள்.
பணிப் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இதை ரத்துசெய்ய முடியாது. ஊராட்சிக்கு பணியை தேர்வுசெய்ய அதிகாரம் கொடுத்துள்ளனர். ஊழியர்களுக்கு 15 நாளில் பணம் பட்டுவாடா செய்யப்படும். இதெல்லாம் செய்துகொடுத்தது மத்திய அரசு. அதிமுகவின் வேண்டுகோளை ஏற்று. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 125 நாள் 150 நாளாக உயர்த்தப்படும்.
10 அறிவிப்புகளை நான் அறிவித்தேன். குடும்பத் தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்போம். நாங்கள் அறிவித்ததால் பயந்துபோய் அவர் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார், ஏன் கோடை காலத்துக்கு முன்பு கொடுக்கவில்லை.? மக்களை பற்றி சிந்தித்தார்களா? தேர்தல் வருவதால் வாக்கு தேவை அதனால் கொடுத்தனர். 2022, 23, 24, 25 நான்கு கோடைக் காலம் முடிந்தது, அப்போதெல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லை, உங்களுக்கு சும்மா கொடுக்கவில்லை, வாக்குக்கு விலை பேசி கொடுத்துள்ளனர்.
உரிமைத் தொகையை 28 மாதம் கழித்து, அதிமுகவின் அழுத்தத்தால் தான் கொடுத்தனர். சட்டமன்றத்தில் பேசினோம் வேறு வழியின்றி கொடுத்தார். தாய்மார்கள் கஷ்டத்தைப் பார்த்துக் கொடுக்கவில்லை. இப்போது தேர்தல் வருவதால் ஆயிரம் ரூபாய் நிறுத்தப்படும் என்கிறார், அப்படியென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா..? நிறுத்தவில்லை. மக்களிடம் பொய் சொல்லி ஓட்டுகளைப் பெறுவதற்கு தந்திரமாக ஸ்டாலின் சொல்லும் காரணம். தொடர்ந்து நடைபெறும் திட்டத்தை எந்த அரசும் நிறுத்த முடியாது. இந்த 3 மாதம் உங்களுக்கு பணம் வராது. மே மாதம் அதிமுக ஆட்சியில் 2 ஆயிரம் ரூபாய் வரும்.
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் கொடுக்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். கணவன், மனைவி இருவரும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம். பட்டியலின மக்கள், ஏழை மக்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டி தரப்படும். தனிக்குடித்தனம் சென்றாலும் பட்டியலின மக்களுக்கு வீடு கட்டித்தரப்படும். ஒவ்வொரு தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச் சேலை வழங்கப்படும். பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 5 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.
முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மாணவர் கல்விக் கடன் ரத்துசெய்யப்படும். ஜல்லிக்கட்டு வீரர் மரணம் அடைந்தால் 10 லட்சம் குடும்பத்துக்கு கொடுக்கப்படும். சிறுபான்மை மகளிர் தொழில் தொடங்க கடனுதவி வழஙப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் தள்ளுபடி, புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.
உதயநிதி இன்று இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார். எடப்பாடி பாஜகவுக்கு முரட்டு அடிமையாம். புதிதாக கண்டுபிடித்திருக்கிறார், இதற்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். உதயநிதி சிந்தியுங்கள், எனக்கு முரட்டு அடிமை என்றால் உங்க தாத்தாவுக்கு என்ன பட்டம் கொடுப்பது..? வாஜ்பாயோடு கூட்டணியில் இருந்தாரே, அவருக்கு என்ன பட்டம் கொடுக்கப்போறீங்க..? கத்துக்குட்டி நீங்க, வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. நீங்க கூட்டணி வைத்தால்
பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் கெட்ட கட்சியா?
அரசியலில் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுகள் சிதறாமல் இருக்க கூட்டணி வைப்போம். அதிமுகவோடு கூட்டணி வைத்தவர்கள் தான் திமுகவோடும், திமுகவோடு கூட்டணியில் இருந்தவர்கள் அதிமுகவோடும் கூட்டணி வைத்துள்ளனர். தேர்தலுக்கு தேர்தல் இது மாறுபடும். இதை வைத்துக்கொண்டு உதயநிதி பேசுகிறார். நான் முரட்டு அடிமை இல்லை, உங்கள் தாத்தாதான் முரட்டு அடிமை.
தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். ஊழல் நடக்காத துறையே இல்லை.
ரெய்டை கண்டு பயப்பட மாட்டேன், ஆட்சி போனால் போகட்டும் என்கிறார், ஆட்சி போகத்தான் போகிறது, மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஆக ஆட்சி போகப்போகிறது என்று ஸ்டாலினே முடிவுசெய்து அறிவித்துவிட்டார். ஸ்டாலின் கட்டுப்பாட்டில் எந்த துறையும் இல்லை, எல்லா அமைச்சர்களும் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
சமீபத்தில் தீர்ப்பு வந்தது, நகராட்சி நிர்வாகத்துறையில் ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கு ஒவ்வொரு பணியிடத்துக்கும் லட்சக்கணக்கில் பணம் வாங்கியும், டெண்டர் விட்டு கமிஷனும் வாங்கி இருக்கிறார்கள். அதெல்லாம் ஆதாரத்தோடு அமலாக்கத்துறை அனுப்பியது. அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்தோம் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர், ஆக, லஞ்சம் வாங்குவது உண்மையாகிவிட்டது.
திட்டங்களை கொண்டுவர நிதி இல்லை, எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க 82 கோடி. தேவையா? எழுதும் பேனாவை அரசு மாணவர்களுக்கு கொடுத்தால் பாராட்டுவார்கள். காலுக்கு செருப்பே இல்லாமல் இருக்கிறார்கள். நான் விவசாயிகள் கஷ்டத்தை அனுபவ ரீதியாக உணர்ந்தவன், இவர்கள் கஷ்டத்தை அனுபவிக்காதவர்கள். சென்னையில் கார் ரேஸ் நடத்துகிறார். ஏழை மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவிடும் அரசு தேவையா?
ஒவ்வொரு ரூபாயும் மக்களின் வரிப்பணம். கருணாநிதியின் குடும்ப பணம் இல்லை. ஊழல் அரசை வீட்டுக்கு அனுப்ப தேதி நெருங்கிவிட்டது, குடும்ப ஆட்சி தேவையா வாரிசு அரசியல் தேவையா? இரண்டுக்கும் முடிவுகட்டும் தேர்தல். மிகப்பெரிய பணக்கார குடும்பம் ஸ்டாலின் குடும்பம். இப்படியே விட்டுவிட்டால் குடும்ப ஆட்சியைக் கொண்டுவந்து நாட்டை குட்டிச்சுவராக்கி விடுவார்கள். அதனால் விழிப்புடன் இருந்து அதிமுகவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும்.
மின்கட்டணம், வரி உயர்வு, குப்பைக்கும் வரி, வரிமேல் வரி போடும் அரசு வேண்டுமா? வாக்குறுதி நிறைவேற்றவில்லை, எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டக்களமாகிவிட்டது. மக்களை ஏமாற்றும் ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல். கொரோனா காலத்தில் விலைவாசி உயரவில்லை, ஓராண்டு விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், ஆயிரம் ரூபாய் கொடுத்தோம், தைப்பொங்கல் அன்று 2500 ரூபாய் கொடுத்தோம். அற்புதமான ஆட்சி கொடுத்தோம். மாணவர்கள் மன உளைச்சலில் இருந்தனர், ஆல்பாஸ் போட்டோம். மாணவர்கள் குறைகளையும் போக்கினோம்.
ஏரி குளம் குட்டை குடிமராமத்து திட்டம் மூலம் தூர் வாரினோம். விவசாயத்துக்கு, குடிப்பதற்கு தேவையான நீர் கொடுத்தோம். மும்முனை மின்சாரம் கொடுத்தோம். ஒரே ஆண்டில் இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம். நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்துகொடுத்தோம்.
7.5% இடஒதுக்கீடு, ஏழை அரசு பள்ளியில் படிக்கிறார்கள், அவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க இடஒதுக்கீடு கொடுத்தோம். 3 ஆயிரம் பேர் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் மருத்துவம் படித்தனர். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி, 68 கலை கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம், 4 பொறியியல் கல்லூரி, 4 வேளாண்மை கல்லூரி, 7 சட்டக்கல்லூரி ஏழை மாணவர்களுக்கும் பட்டப்படிப்பு படிக்கும் சூழல் உருவாக்கினோம்.
இளைஞர்கள் சிந்திக்க வேண்டும், யார் யாரோ புதுப்புது கட்சி நடத்துகிறார்கள். அவர்களா இதெல்லாம் செய்தார்கள்? ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு சூழல் உருவாக்கி தந்தது அதிமுக. கல்விச்செல்வம் அழியாச்செல்வம், உயிர் இருக்கும் வரை ஒரே செல்வம் கல்வி செல்வம். அதை கொடுத்தது அதிமுக அரசு. இளைஞர்கள் அதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் தே.ஜ.கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மீனவ மக்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் நிவாரண நிதி உயர்த்தினோம். இப்போது 8 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள், அந்த தொகை அதிமுக ஆட்சி அமைந்ததும் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற நற்செய்தியை சொல்லிக்கொள்கிறேன். அதிமுக வேட்பாளர் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால் அவர்களின் சின்னத்துக்கும் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின். வந்திருக்கும் அனைவரும் பாதுகாப்பாக வீடுபோய் சேர வேண்டும்…" என்று முடித்தார்.
- தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியை கொண்டு வர முயல்கிறார் ஸ்டாலின்
- 10 ஆண்டுகள் எங்கள் ஆட்சியின் திட்டங்கள் குறித்து நான் பொதுவெளியில் பேசுகிறேன்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்குட்பட்ட பி.டி.மூர்த்தி நகர், பாடியநல்லூரில் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா என இருபெரும் தெய்வங்களை வணங்கி துவங்குகிறேன். மாதவரம் மக்கள் அனைவரும் இங்கு குழுமியிருப்பதால் மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சியளிக்கிறது. அதிமுக வேட்பாளர் இத்தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டார், இது வெற்றி விழா பொதுக்கூட்டம் போல் காட்சியளிக்கிறது.
ஸ்டாலின் துரோகத்தைப் பற்றி பேசுகிறார். துரோகத்தின் மொத்த அடையாளமே ஸ்டாலின்தான். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் தான் துரோகி. உண்ணாவிரத நாடகம் நடத்தி ஈழத்தமிழர்களுக்கு துரோகம், கட்சத்தீவை தாரை வார்த்த துரோகி, டெல்டாவில் மீத்தேன் கொண்டுவந்து நிலத்தை பறிக்க முயன்ற துரோகி, 2021 தேர்தலில் பொய் வாக்குறுதி அள்ளி வீசிய துரோகி ஸ்டாலின்.
73 ஆண்டுகள் 2021 வரை 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி தான் கடன். 5 ஆண்டில் பல்வேறு திட்டங்கள் என்று சொல்லி கொள்ளையடித்த துரோகி ஸ்டாலின். 100 நாள் வேலையை 150 நாட்கள் உயர்த்துவேன் என்று சொல்லி ஏமாற்றிய துரோகி. ஆட்சியே போனாலும் பரவாயில்லையாம், போகத்தான் போகுது. இப்பதான் ஸ்டாலினுக்கு பயம் வந்திருக்கு. எடப்பாடி பழனிசாமி பயந்தாங்கோலி என்கிறார், நான் மட்டுமல்ல என் தொண்டர் கூட பயப்பட மாட்டான், வீரம் நிறைந்த மறவர் கூட்டம். சொந்தக் காலில் நிற்கும் கட்சி. திமுக போல பல கட்சிக் கூட்டணியில் முதுகில் சவாரி செய்யும் கட்சியல்ல, மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி, உழைப்பை நம்பியிருக்கும் கட்சி.
எங்களைப் பொறுத்தவரை மக்கள்தான் எஜமானர்கள். உங்களுக்கு குடும்பம் தான் முக்கியம். மக்களைப் பற்றி கவலைப்படாதவர். அதிமுக மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி. அதனால் தான் கடுமையான வறட்சியில் காப்பாற்றினோம், தடையில்லா குடிநீர் கொடுத்தோம். புயலை எதிர்கொண்டு நிவாரணம் கொடுத்தோம். கொரோனா கடுமையான பிரச்னை. காற்றில் பரவியது. அப்படிப்பட்ட காலத்தில் திறமையாக செயல்பட்டு விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணம் அதிமுக அரசு.
உங்கள் அரசு கொள்ளை அடிக்கும் அரசு. அரசு இருக்குதா இல்லையா என்று மக்கள் கேட்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொரோனாவில் விலைவாசி உயரவில்லை. ஏழைகளுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு கொடுத்தோம். ரேஷன் கடையில் ஓராண்டு பொருட்கள் விலையில்லாமல் கொடுத்தோம், ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். அரசுக்கு ஒரு ரூபாய் வரி வருவாய் இல்லை. டாஸ்மாக், பத்திரப்பதிவு, பெட்ரோல் டீசல், ஜிஎஸ்டி எதுவும் இல்லை, வரியே இல்லாமல் ஆட்சி செய்தோம்.
திமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன். மக்களை கடனாளியாக்கிவிட்டார். இதுக்கு ஸ்டாலின் தான் காரணம். அப்படிப்பட்டவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா? அந்த கடனை நீங்கள் தான் கட்டணும். உங்கள் தலை மீதுதான் கடன் விழுகிறது.
525 வாக்குறுதிகள் கொடுத்தனர், 100 நாள் வேலைதிட்டம் 150 நாளாக உயர்த்தவில்லை, சம்பளம் உயர்த்தவில்லை. கேஸ் மானியம் 100 ரூபாய் கொடுக்கவில்லை. கூடுதல் சர்க்கரை ஒருகிலோ கொடுக்கவில்லை, பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. மாணவர் கல்விக் கடன் ரத்து செய்யவில்லை.
ஆனால், எப்போதும் ஸ்டாலின் உரிமைத் தொகை பற்றி பேசுகிறார். இவர் சொந்தப் பணத்தை கொடுப்பது போல சொல்கிறார். ஸ்டாலின் டிரஸ்ட்டில் 8 ஆயிரம் கோடி பணம் இருக்கிறது. அதெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதா?
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் நிறைவேற்றவில்லை. செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யவில்லை, சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி ஊழியர்கள், விவசாயிகள், மருத்துவர்கள் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. கொள்ளை அடித்தது தான் மிச்சம்.
மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள், தேர்தல் மிஷின் ஸ்தம்பிக்கும் வகையில் ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்கள் ஆட்சியில் 2011-21 வரை குறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
10 ஆண்டுகள் எங்கள் ஆட்சியின் திட்டங்கள் குறித்து நான் பொதுவெளியில் பேசுகிறேன். 2021-26 வரை திமுக ஆட்சி திட்டங்கள் குறித்து நீங்கள் விளக்குங்கள் பொதுமக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும் என்று அழைத்தேன். இதுவரை பதிலில்லை.. குடும்ப ஆட்சி வேண்டுமா? வாரிசு அரசியல் தொடர வேண்டுமா?
அந்தக் காலத்தில் அரசர் தனக்கு பின் மகனுக்கு முடிசூட்டுவார்.. அதுபோல ஸ்டாலின் முயற்சிக்கிறார். கருணாநிதி தலைவர், முதல்வர், அதன் பின்னர் ஸ்டாலின், அதன் பின்னர் எந்த உழைப்புமே இல்லாமல் உதயநிதியை பிரச்சாரம் செய்ய வைத்து துணை முதல்வர் ஆக்கிவிட்டார். திமுகவுக்கு உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டுவிட்டார்கள். துரைமுருகன் உழைப்பு கொடுத்திருக்கிறார். அதிக நாள் எம்.எல்.ஏவாக இருந்தவர், அவர் கருணாநிதி குடும்பத்தில் பிறக்காததால் துணை முதல்வர் கிடைக்கவிலை.
அதிமுக ஜனநாயகப்படி செயல்படும் கட்சி. விசுவாசமாக செயல்பட்டால் உயர்ந்த பதவி கிடைக்கும். இல்லை என்றால் நான் எல்லாம் உங்கள் முன்பு வந்து பேச முடியுமா? கனவிலும் நடக்காது. அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளர், முதல்வர் ஆக முடியும். ஸ்டாலினால் ஒரு வார்த்தையாவது இப்படி பேச முடியுமா..? திமுகவில் உழைத்தவர்களுக்கு தலைவர், முதல்வர் பதவி கிடைக்கும் என்று அவரால் சொல்ல முடியுமா? முடியாது.
திமுக ஆட்சியில் கஞ்சா விற்காத இடமே இல்லை. இளைஞர்கள் அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. நீங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அது நல்ல முடிவாக இருக்க வேண்டும்.
அதிமுக பாஜகவை கண்டு நடுங்குகிறதாம். எப்போதும் யாரைக் கண்டும் அதிமுக நடுங்கியது இல்லை. திமுகவும் காங்கிரசும் மத்தியில் இருந்தபோது அறிவாலயத்தில் ரெய்டு கூட்டணிப் பேச்சு நடந்தது. அதிமுக அப்படியல்ல, காவிரி நீர் பிரச்னைக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தும் கூட, உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கி விவசாயிகள் உரிமையை பாதுகாத்தோம்.
நீட் தேர்வு ரத்து என்றார், செய்தாரா? ரகசியம் தெரியும் என்று உதயநிதி சொன்னார். ஆனால், ஸ்டாலின் எங்களால் விதிவிலக்கு பெறமுடியவில்லை என்று கைவிரித்து விட்டார். திமுக.வுக்கு 39 எம்.பிக்கள் இருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்தார்கள்? தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டம் நிதி பெற்றீர்களா? நீட் தேர்வு ரத்துக்கு முயற்சி எடுத்தீர்களா? பேசினால் ரெய்டு வந்துவிடும், அத்தனை பயம்.
வெளியில் வீரப்பாகப் பேசுறது, ஆனால் உள்ளே பயம். பிரதமர் மோடிக்கு கருப்பு பலூன் விட்டார், இன்று மோடி சென்னை வந்ததும் வெள்ளைக் குடை பிடித்தார். மக்களுக்கு எதுவும் தெரியாதா? எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருமாதிரி, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரி என்பதை மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு. காவல்துறை இருக்கிறதா என்பதே கேள்வி. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட ஆட்சி மீண்டும் வரவேண்டுமா? நல்லாட்சி மலர தே.ஜ.கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். நல்ல கல்வி, உணவு, இருப்பிடம், தடையில்லா மின்சாரம், விவசாயம், நீர், சுகாதாரம் எல்லாம் கிடைக்க வேண்டும், அதெல்லாம் அதிமுக ஆட்சியில் கொடுத்தோம் அதனால் தான் அதிமுக நிலைத்து நிற்கிறது. மீண்டும். அப்படிப்பட்ட ஆட்சி தொடரவேண்டும்.
பல வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். குடும்பத் தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் கொடுப்போம். உடனே ஸ்டாலின் பயந்துபோய் 5 ஆயிரம் கொடுத்தார். அதிமுக அழுத்தத்தினால் தான் ஸ்டாலின் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஆண்களுக்கும் கட்டணமில்லா நகரப் பேருந்து பயணம். ஏழைகள் அனைவருக்கும் வீடு, பட்டியலின மக்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டித்தரப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 5 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மாணவர் கல்வி கடன் அரசே செலுத்தும். ஆண்டுக்கு குடும்பத்துக்கு 3 கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு வீரர்கள் மரணம் அடைந்தால் 10 லட்சம் ரூபாய், காயம் அடைந்தால் 2 லட்சம் இன்சூரன்ஸ், காளைகளுக்கு இன்சூரன்ஸ். சிறுபான்மை பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன், மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். பொங்கல் தோறும் வேட்டி, சேலை வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச் சேலை வழங்கப்படும். தரமான பொங்கல் பரிசு வழங்கப்படும்.
மக்கள் மனம் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு அதிமுக கொடுக்கும். அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக் கட்சி நின்றால் அவர்களின் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின். பத்திரமாக வீடு போய் சேருங்கள்" என்று தெரிவித்தார்.
- பா.ஜ.க.வின் கலவர அரசியல் ஒருபோதும் எடுபடாது.
- சங்கிக்கூட்டத்தின் முகத்தில் மக்கள் கரி பூசுவது உறுதி
கோவை, கருமத்தம்பட்டியில் தி.மு.க இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு எழுச்சியுடன் தொடங்கியது.
இந்த மாநாட்டில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
மாநாட்டில் பேசிய உதயநிதி, "இன்றைக்கு மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பில் கோவையில் உங்களையெல்லம் சந்தித்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே திருவண்ணாமலையில் டிசம்பர் மாதம் வடக்கு மண்டல நிர்வாகிகளைச் சந்தித்தோம். அதன் பிறகு விருதுநகரில் தெற்கு மண்டல நிர்வாகிகளை எல்லாம் சந்தித்தோம். அந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நம் கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்கள் வந்து நிர்வாகிகளைச் சந்தித்து வாழ்த்துச் சொன்னார்கள். இன்றைக்குப் பல்வேறு பணிச்சூழல் காரணமாக கழகத் தலைவர் அவர்களால் வர முடியவில்லை. அதனால் உங்களையெல்லாம் சந்திப்பதற்காக நான் வந்திருக்கிறேன்.
நிச்சயம் உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுப்பேன். நம் கழகத் தலைவர் அவர்கள் மீண்டும் முதல்வராக வென்று இந்த மேற்கு மண்டலத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில், வெற்றி விழாவில் நிச்சயமாகக் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திப்பார். இன்றைக்குத் தலைவர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றாலும் அவரின் எண்ணம் முழுவதும் இந்த இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு எப்படி நடந்துகொண்டிருக்கும் என்பதுதான் தலைவர் அவர்கள் யோசித்துக்கொண்டிருப்பார்.
இந்த மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை இவ்வளவு சிறப்பாகக் கிட்டத்தட்ட ஒரு மாநாடு போல நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மண்டலப் பொறுப்பாளர் அண்ணன் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், மாநாட்டின் வெற்றிக்காகக் கடந்த பத்து பதினைந்து நாட்களாகக் கடுமையாக உழைத்த அனைத்து மாவட்ட கழகச் செயலாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அனைத்து அமைப்பாளர்களுக்கும் இந்தப் பகுதியின் மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் தளபதி முருகேசன் அவர்களுக்கும், செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அண்ணன் தொண்டாமுத்தூர் ரவி அவர்களுக்கும் அனைத்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைத்து நிர்வாகிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள 16 கழக மாவட்டங்கள், 39 தொகுதிகளில் இருந்து சுமார் 80 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களின் எழுச்சியைப் பார்க்கும்பொழுது ஒன்று மட்டும் உறுதி, வெஸ்டிலும் தி.மு.க தான் பெஸ்ட் என்பதை இந்தக்கூட்டம் நிச்சயம் நிரூபித்துக் காட்டும். அதற்கு உங்களின் எழுச்சியே உதாரணம், சாட்சி.
இன்றைக்கு இந்தியாவிலேயே எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத ஒரு பணியை இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பை மாநாடு போலத் தொடர்ந்து நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்றைக்குப் பல கட்சிகள் தமிழ்நாட்டில் எத்தனை வாக்குச்சாவடிகள் இருக்கின்றன என்று தெரியாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள், இப்பொழுதுதான் கணக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் வாக்குச்சாவடிகளுக்கு என்று இத்தனை நிர்வாகிகளை நியமனம் செய்து, தரவுகளுடன் களப்பணியில், கட்சிப்பணியில், இளைஞர் அணி பணியில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இளைஞர் அணியில் மட்டும் ஐந்து லட்சம் நிர்வாகிகளை நாம் பெற்றிருக்கிறோம். ஐம்பது லட்சம் உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறோம். தமிழ்நாட்டில் இல்லை, இந்தியாவிலேயே எந்த இயக்கத்தின் ஒரு அணிக்கும் இப்படிப்பட்ட சிறப்பு கிடையவே கிடையாது.
நம் இளைஞர் அணியைக் கழகத்தின் இராணுவம் என்று தலைவர் சொல்வது போல ஒரு கட்டுப்பாட்டோடு நடத்திக் கொண்டிருக்கிறோம். உதாரணமாகக் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் களப்பணிகளை, கழகப் பணிகளை, மக்கள் பணிகளைச் செய்திருக்கிறோம். கடந்த ஆறு ஆண்டுகள் மட்டும் எடுத்துக்கொண்டோம் என்றால் நீர்நிலைகளைத் தூர்வாரியது, சிறுபான்மையினர் நலன் காக்க சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டத்தை எதிர்த்தது, கொரோனா காலத்தில் மக்களைக் காப்பதற்கு உதவி எண் தொடங்கியது, மாணவர்களின் கல்வி உரிமையை காக்க நீட் ஒழிப்பு உண்ணாவிரதம், தொகுதிதோறும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், தொகுதிதோறும் பயிற்சி பாசறைக் கூட்டங்கள், 200-க்கு அதிகமான இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்தது, வாசிப்பை மேம்படுத்த முத்தமிழறிஞர் பதிப்பகம், கழக வரலாற்றைச் சொல்கின்ற முரசொலி பாசறைப் பக்கம், கொள்கை உணர்வைக் கொண்டாட அறிவுத் திருவிழா - இப்படி எத்தனையோ பணிகளை நம் இளைஞர் அணி வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது என்றால், இங்கே வந்திருக்கக்கூடிய இளைஞர் அணி நிர்வாகிகள் அந்த வெற்றியின் உழைப்புக்கு முழு காரணம்.
மெயின் மேட்ச் விளையாடுவதற்கு முன்னால் எல்லாம் நெட்டில் பயிற்சி செய்வார்கள். கழகத்தில் பணியாற்றுவதற்கு இன்று இளைஞர் அணி ஒரு பயிற்சிக் களமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை ஏன் நான் இன்றைக்குச் சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் இவர்கள் எல்லாம் இளைஞர் அணியில் பயிற்சி எடுத்துத் தாய்க்கழகத்திற்குச் சென்றவர்கள். அதற்கு இந்த மேடையே ஒரு சிறந்த உதாரணம்.
இன்றைக்கு அமைச்சராக, கழகத்தின் துணை பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய அண்ணன் மு.பெ.சாமிநாதன் அவர்கள், தலைவர் இளைஞர் அணி செயலாளராக இருக்கும்போது தலைவருக்குத் துணையாக இருந்தவர். அதன் பிறகு அவரும் இளைஞர் அணியின் செயலாளராகப் பணியாற்றியவர். அதேமாதிரி நம் அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் இளைஞர் அணியில் பயிற்சி எடுத்தவர். நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்கள், கோவை மாநகர பொறுப்பாளர் அன்புச்செல்வன், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் சகோதரர் ராஜேஷ் இப்படி இங்கே இருக்கக்கூடிய ஏராளமானவர்கள் இளைஞர் அணியில் பயிற்சி எடுத்தவர்கள். இன்னும் சொல்லப்போனால் இன்றைக்குத் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரையும், முதலமைச்சரையும் கொடுத்தது கழக இளைஞர் அணி என்று சொன்னால் அதுதான் இளைஞர் அணியின் பெருமை.
அப்படிப்பட்ட இளைஞர் அணி தந்த நம் தலைவர் அவர்கள் இன்றைக்கு ஆட்சி, அரசியல் என இரண்டிலுமே இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டக்கூடிய ஒரு தலைவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அரசியல் என்று எடுத்துக்கொண்டால் இன்றைக்கு இந்திய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிரான ஒரு ஜனநாயகப் போரை நம் தலைவர் தலைமையில் நடத்த வேண்டும் என்று இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலத் தலைவர்கள் எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் நம் தலைவர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.
ஒரு சில திட்டங்களை மட்டும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். 2021-இல் ஆட்சிக்கு வந்ததும் நம் தலைவர் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். அடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்காக புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம். 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குகின்ற திட்டம். இவை அனைத்தையும் விட இன்றைக்கு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நம் முதலமைச்சர் அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக இந்த மாதம் நம் முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கெல்லாம் மிகப்பெரிய ஒரு சர்ப்ரைஸ் (Surprise) கொடுத்தார். எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய ஓர் ஷாக்கை (Shock) கொடுத்தார். மகளிரின் வங்கிக் கணக்கில் காலையில் 6 மணிக்கு எழுந்து பார்த்தால் திடீரென்று 5,000 ரூபாய் வரவு வைத்துவிட்டார். இது மகளிருக்கு மிகப்பெரிய ஆச்சரியம், அடிமைகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. என்ன காரணம்? பா.ஜ.க, அதன் அடிமைக் கூட்டம், பாசிசக் கூட்டம் சட்டமன்றத் தேர்தல் வருகிறது, அதைக் காரணம் காட்டி நீதிமன்றத்திற்கு சென்று எப்படியாவது அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த உரிமைத் தொகையை நிறுத்திவிடலாம் என்று முயற்சி செய்தார்கள். நம் தலைவர் 'என்னுடைய தமிழ்நாட்டு மகளிருக்கு நான் கொடுக்கக்கூடிய 1,000 ரூபாயை நீ தடுக்க முயற்சி செய்கிறாயா? இதோ நான் கொடுக்கிறேன் ஒவ்வொருவருக்கும் 5,000 ரூபாய்' என்று கொடுத்திருக்கிறார் நம் தலைவர் முதலமைச்சர் அவர்கள். அதுமட்டுமல்லாமல் கோடைக்கால சிறப்பு நிதியாக 2,000 என்று 5,000 ரூபாய் சேர்த்துத் கொடுத்திருக்கிறார்.
இன்னொரு வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடனே, நம் தலைவர் முதலமைச்சர் ஆனவுடன் மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்திக் கொடுப்பேன் என்கின்ற வாக்குறுதியையும் இன்றைக்குக் கொடுத்திருக்கிறார். இதுதான் நம் ஆட்சிக்கும் சங்கிக் கூட்டத்திற்கும் இருக்கக்கூடிய ஒரு வித்தியாசம்.
அதிலும் தலைவர் 7 மணிக்கு வரவு வைத்தார். நம் தமிழ்நாட்டு மகளிர் 9 மணிக்கெல்லாம் வங்கிக்குப் சென்று பணத்தை எடுத்துவிட்டார்கள். அந்த அளவுக்கு ஒன்றிய அரசு மீது தமிழ்நாட்டு மக்களுக்கு, மகளிருக்கு பயம். குறிப்பாக நீங்கள் ஒன்று நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் அவ்வப்போது தொலைக்காட்சியில் வருவார். அவர் எப்போது தொலைக்காட்சியில் வந்தாலும், டிவியில் வந்தாலும் மக்கள் ஒரு விதமான பயத்திற்குச் சென்றுவிடுவார்கள். இந்த முறை என்ன சொல்லப் போகிறாரோ என்று மக்கள் பயந்துவிடுவார்கள்.
ஏனென்றால் 2020-இல் உங்களுக்கு ஞாபகம் இருக்கும், ஒரு நாள் திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றி 'கொரோனா வரப்போகிறது, அதைச் சமாளிப்பதற்கு ஒரே வழிதான், எல்லாரும் வீட்டுக்குள் ஒரு மாதம் ஒளிந்துகொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டுப் சென்றுவிட்டார். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு இன்னொன்று ஞாபகம் இருக்கும், 2016-ஆம் ஆண்டு இதே மாதிரி திடீரென்று டிவியில் வந்தார். 'பண மதிப்பிழப்பு' என்று சொல்லி எல்லாரிடமும் இருக்கின்ற 500 ரூபாய் 1,000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அன்றைக்கு எவ்வளவு மக்கள், நூற்றுக்கணக்கான மக்கள் வெயிலில் நின்று இறந்தார்கள். இதுதான் நம் தலைவர் தொலைக்காட்சியில் வந்தால் மக்கள் மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். இதுதான் நம் தலைவருக்கும் ஒன்றிய பிரதமருக்குமான வித்தியாசம்.
அதுமட்டுமல்லாமல் மக்களிடம் இருப்பதைப் பிடுங்குகின்ற ஆட்சி ஒன்றிய பா.ஜ.க ஆட்சி. மக்களுக்கு எப்போதுமே கொடுக்கின்ற ஆட்சி நம் திராவிட மாடல் ஆட்சி. இப்படிப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதனால்தான் இன்றைக்கு நம் முதலமைச்சர், நம் தமிழ்நாடு 11.19 சதவிகித வளர்ச்சியோடு இன்றைக்கு இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக இருக்கிறது. அதற்கு என்னவெல்லாம் இடைஞ்சல் செய்யலாம் என்று இன்றைக்குத் திட்டம் போட்டு ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மொழியுரிமை, கல்வியுரிமை, நிதியுரிமை என்று ஒவ்வொரு உரிமையையும் பறிக்கப் பார்க்கிறார்கள். 'புதிய கல்விக் கொள்கை' என்று கொண்டு வந்து தமிழ்நாட்டிற்குள் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் நுழைக்கப் பார்க்கிறார்கள். இதுவரைக்கும் தமிழ்நாடு பக்கமே எட்டிப் பார்க்காத திரு. அமித்ஷா அவர்களும் திரு. மோடி அவர்களும் தேர்தல் வருகிறது என்ற உடனே வர ஆரம்பித்து இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மட்டும்தான் வருவார்கள், தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் வராது, எந்தத் திட்டமும் வராது.
சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது. அந்தத் பட்ஜெட்டை பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டத்தையும் ஒதுக்கவில்லை. ஆனால் அவர்கள் பட்ஜெட்டை முழுமையாக வாசித்து முடிப்பதற்கு முன்னாலேயே தமிழ்நாட்டிலிருந்து ஒரு பாராட்டுக் குரல். யாரு? எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள். அதனால்தான் 'பட்ஜெட் சிறப்பு' என்று 'டயர் புகழ்' பழனிசாமி இன்றைக்கு பயர் விட்டிருக்கிறார். அதனால்தான் அடிக்கடி சொல்வேன், அரசியலில் நாம் பல முரட்டு பக்தர்களைப் பார்த்திருப்போம், முரட்டுத் தொண்டர்களைப் பார்த்திருப்போம், ஆனால் இன்றைக்கு ஒரு முரட்டு அடிமையாகத் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் திரு. மோடி அவர்களுக்கு மாறியிருக்கிறார்.
நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள், மூன்று நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கிறார். திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த படம். பார்த்துவிட்டு அப்படியே கண்கலங்குகிறார், அழுகிறார். நான் யோசித்துப் பார்த்தேன், இந்நேரம் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், இவரைப் பார்த்து 'என் கட்சியை இப்படி ஆக்கிவிட்டீர்களே' என்று பார்த்து எப்படி அழுதிருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன். 2019-இல் அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுக்கு அடகு வைத்தார். 2021-இல் அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுக்கு குத்தகைக்கு விட்டார். இப்போது 2026-இல் அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுக்கு மொத்தமாக விற்றுவிட்டார். தன் சுயநலத்திற்காக எடப்பாடி பழனிசாமி அவர்கள் அ.தி.மு.க-வை அழிவுப் பாதையில் கொண்டு செல்கிறார்.
ஆனால் நம் தலைவர் அவர்கள் நம் தமிழ்நாட்டை அறிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். அதனால்தான் சங்கிகளுக்குத் தமிழ்நாட்டைப் பார்த்தாலே எப்போதுமே ஒரு வயிற்றெரிச்சல். ஒரு இயக்கத்தை எப்படியாவது மிரட்டலாம், உருட்டலாம் என்று ஈடி (ED), சி.பி.ஐ (CBI) இப்படிப் பல்வேறு அமைப்புகளை வைத்து மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் நம் தலைவர் அவர்கள் நேற்று மதுரையில் தெளிவாக ஒரு பதில் சொன்னார்கள். 'என்ன வழக்குதானே போடுவீர்கள்? தி.மு.க உடன்பிறப்புகள் பார்க்காத வழக்குகளா? மொழிப்போரில் இராணுவத்தையே எதிர்த்து நின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். மிசாவை பார்த்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம், நம் தலைவர் அவர்கள். உயிரே போனாலும் எங்களின் சுயமரியாதையை நாங்கள் என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமைகளை என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதனால்தான் அடிக்கடி நான் சொல்வேன், நாங்கள் ஈடிக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். மோடி அல்ல, மோடியின் டாடி வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
இந்த லட்சணத்தில் திரு. மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பேசுகிறார், என்ன? டபிள் என்ஜின் சர்கார் வேண்டுமாம். தமிழ்நாட்டின் இன்ஜின் பலமான ஒரு திராவிட மாடல் என்ஜின். இது எப்போதுமே தனிப் பாதையில் முன்னேறிப் போய்க்கொண்டிருக்கிற இயந்திரம். நம்மிடம் இருக்கின்ற என்ஜின் வளர்ச்சி என்ஜின், நம்மிடம் இருக்கின்ற இயந்திரம் மேம்பாட்டு என்ஜின், நம்மிடம் இருக்கின்ற இயந்திரம் முற்போக்கு என்ஜின். இன்றைக்கு மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தைத் திரு. மோடி அவர்கள் விமர்சனம் செய்கிறார்.
'மகளிர் எல்லாரும் பேருந்தில் போய்விடுகிறார்களாம், அதனால் மெட்ரோவுக்குக் கூட்டம் வருவதில்லை என்று சொல்கிறார் திரு. மோடி அவர்கள். ஆனால் அதே மெட்ரோவுக்கு நாம் நிதி கேட்கும்போது கோயம்புத்தூருக்கும் மதுரைக்கும் நிதி கேட்டோம், அந்த மெட்ரோ நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. இதில் மகளிர் விடியல் பயணத்தை எப்படியாவது ரத்து செய்ய வேண்டும் என்று திரு. மோடி அவர்கள் விமர்சனம் செய்கிறார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஒரு பழமொழி, 'ஜாடிக்கு ஏற்ற மூடி' என்று சொல்வார்கள். அது மாதிரி இன்றைக்கு மோடிக்கு ஏற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் கிடைத்திருக்கிறார்.
இன்றைக்கு பா.ஜ.க-வின் நோக்கம் மக்களை எப்படியாவது தொந்தரவு செய்து வெறுப்பைப் பரப்ப வேண்டும். அதனால்தான் ஒவ்வொரு மாநிலமாக வெறுப்பு அரசியலைப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாலாட்டலாம் என்று முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் நம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் என்ற மகத்தான தலைவர் இருக்கின்ற வரைக்கும் பா.ஜ.க-வின் கலவர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உள்ளே நுழைய விடமாட்டார்கள். சென்ற வாரம் காரைக்காலுக்கு வந்த திரு. அமித்ஷா அவர்கள், ஒரு சுவரில் பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார். நீங்கள் எவ்வளவுதான் பெயிண்ட் அடித்தாலும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களின் சங்கிக் கூட்டத்தின் முகத்தில் கரியைத் தான் பூசுவார்கள்.
இப்போது நடப்பது எட்டு கோடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஒரு போர். பாசிஸ்டுகள், அடிமைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டை எப்படியாவது சீரழிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு இளைஞர் அணி நிர்வாகிகள் உங்களின் கைகளில் இருக்கிறது. நிர்வாகிகளுக்கெல்லாம் ஒரு அன்பு வேண்டுகோள். உங்களின் வீட்டை முதலில் அரசியல் படுத்துங்கள். தினமும் உங்கள் வீட்டில் இருப்பவர்களோடு அரசியல் பேசுங்கள், விவாதம் செய்யுங்கள். டெல்லி பாசிஸ்டுகளும் உள்ளூர் அடிமைகளும் தமிழ்நாட்டிற்கு என்னவெல்லாம் துரோகம் செய்திருக்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லுங்கள். உங்களின் வாழ்க்கையை முதலில் நீங்கள் நன்றாக உறுதியாகப் புரிந்துகொள்ளுங்கள். குடும்பம் மிக மிக முக்கியம். அதைவிட முக்கியம் உங்களின் அடுத்த தலைமுறையினர். அதனால்தான் நாம் இத்தனை விஷயங்களையும் போராடிச் செய்துகொண்டு இருக்கிறோம்.
வீடு நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இளைஞர் அணி நிர்வாகிகள் நீங்கள் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வீடாகப் போய்க் கழகத்தின் கொள்கைகளையும் அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துக் கூறுங்கள்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் வெறும் 50 நாட்கள்தான் இருக்கின்றன. இந்த 50 நாட்களுக்கு நீங்கள் கொடுக்கப்போகின்ற உங்களின் உழைப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டைக் காப்பாற்றப்போகிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு உங்களின் பணிகளைச் செய்யுங்கள்.
இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையே நடக்கின்ற ஒரு ஜனநாயகப் போர். இந்தப் போரில் தமிழ்நாடு நிச்சயம் வெற்றிப் பெற்றுக் காட்டும். டெல்லிக்கு என்றைக்கும் அவுட் ஆப் கண்ட்ரோல் தமிழ்நாடு என்பதைத் தமிழ்நாட்டு இளைஞர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டிய நேரம். அதற்கு இளைஞர் அணி நிர்வாகிகள் உங்களின் உழைப்பு மிக மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்.
நான் அடிக்கடி சொல்வது உண்டு. இளைஞர் அணியில் சரியாக உழைத்தீர்கள் என்றால் உங்களுக்கான அங்கீகாரத்தை நம் தலைவர் அவர்கள் நிச்சயம் சரியான நேரத்தில் கொடுப்பார். இந்தத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தலைவரிடம் என் வேண்டுகோளைப் பலமுறை வைத்திருந்தேன். நிச்சயம் தலைவர் அவர்கள் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் உற்சாகமாக வேலை செய்யுங்கள். இன்றைக்குச் சில பேர் நம் இயக்கத்தை அழித்துவிடலாம் என்று பகற்கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். நம்மை யாராலும் எந்த நேரத்திலும் அழிக்க முடியாது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்கனவே இதற்கான ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா சொன்னது: "எங்களை அழித்துப் புதைக்கலாம் என்று நீங்கள் நான்கு அடிக்கு ஒரு குழியை வெட்டுவீர்கள். நீங்கள் குழியை வெட்டுவதற்குள் நாங்கள் ஆறு அடி வளர்ந்திருப்போம். உடனே எங்களுக்காக ஆறு அடிக்கு ஒரு குழியை வெட்டுவீர்கள். நீங்கள் குழியை வெட்டுவதற்குள் நாங்கள் எட்டு அடி வளர்ந்திருப்போம். உடனே எங்களுக்காக எட்டு அடிக்கு ஒரு குழியை வெட்டுவீர்கள். அதற்குள் நாங்கள் பதினாறு அடி வளர்ந்திருப்போம். நீங்கள் எங்களை வெட்ட நினைத்தீர்கள் என்றால் நாங்கள் வளர்ந்துகொண்டே இருப்போம்." என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் நம் கழக இளைஞர் அணியைப் பார்த்துச் சொன்னார். அதேபோல உங்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் இத்தனை லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கின்ற வரை நாங்கள் வளர்ந்துகொண்டே தான் இருப்போமே தவிர உங்களால் எங்களை அழிக்கவே முடியாது. இங்கே கூடியிருக்கக்கூடிய லட்சக்கணக்கான இளைஞர் அணி தம்பிமார்கள் சார்பாக நான் மீண்டும் சொல்கிறேன்.
எங்களின் உதயசூரியன் என்பது வெறும் ஏதோ சுவரில் வரைந்து வைக்கின்ற சின்னம் கிடையாது. கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இரத்தத்திலும் ஊறிப்போன சின்னம் உதயசூரியன். அண்ணா கண்டெடுத்த சின்னம் உதயசூரியன். கலைஞர் கட்டி காத்த சின்னம் உதயசூரியன். தலைவர் அவர்களால் வெற்றியை மட்டுமே பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சின்னம் உதயசூரியன். உயிர் போனாலும் போகுமே தவிர உதயசூரியன் எங்களை விட்டுப் போகாது. எத்தனை பேர் வந்தாலும் யார் எங்களை எதிர்த்து நின்றாலும் களத்தில் ஜெயித்து மீண்டும் ஆட்சி அமைக்கப் போவது உதயசூரியன்தான்.
நம் தலைவர் அவர்கள் நமக்கு ஒரு இலக்கு கொடுத்திருக்கிறார்கள் 'வெல்வோம் 200, படைப்போம் வரலாறு' என்று. நம் இளைஞர் அணி தம்பிமார்கள் அடுத்த 50 நாட்கள் களத்தில் இறங்கிப் பிரச்சாரத்தை மேற்கொண்டீர்கள் என்றால், நம் பணிகளைச் சரியாகச் செய்தீர்கள் என்றால் 200 அல்ல, 200-க்கும் அதிகமான தொகுதிகளில் நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகம், நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
எனவே அந்த இலக்கை மனதில் வைத்துக்கொண்டு ராக்கெட் வேகத்தில் நம் வேலைகளை நாம் செய்ய வேண்டும். ஆகவே 10 தோல்வி பழனிசாமியையும் மொத்த தோல்வி மோடியையும் மீண்டும் நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும். கழக அணியின் வெற்றிக் கணக்கு இந்த மேற்கு மண்டலத்திலிருந்து தொடங்க வேண்டும். கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். நம் தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்றால் நீங்கள் ஒவ்வொருவரும் இரவு பகல் பார்க்காமல் பணியாற்றுங்கள். மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் உங்களிடம் இருக்கின்ற உற்சாகத்தைப் பார்க்கும்பொழுது நம் வெற்றி நிச்சயம் உறுதி என்பதை இங்கே சொல்லிக்கொள்கின்றேன்.
சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இளைஞர் அணியின் பங்கு மிக மிக முக்கியக் காரணமாக இருக்க வேண்டும். உங்கள் அத்தனை பேருடைய பணிகளும் சிறக்கட்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல்வேறு தூரங்களில் இருந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கிறீர்கள். நான் உங்களிடம் தயவுசெய்து கேட்டுக்கொள்வதெல்லாம் திரும்பிப் போகும்போது மிகுந்த பாதுகாப்போடு கவனமாக உங்களின் பயணத்தை நீங்கள் அமைத்துக்கொள்ளுங்கள். அடுத்த பிரச்சாரத்திலும் கழகத்தின் வெற்றி விழாவிலும் மீண்டும் உங்களை எல்லாம் சந்திக்கிறேன். வெல்வோம் ஒன்றாக, தலைவர் தொடரட்டும். தமிழ்நாடு வெல்லட்டும்" என்று தெரிவித்தார்.
- விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி கொல்லமங்கலம் பகுதியில் நாளை நடைபெற உள்ளது.
- QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் நாளை விஜய் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 23ஆம் தேதி) திங்கள்கிழமை, வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லமங்கலம் பகுதியில் மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையிலான வாகனங்களிலோ பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும்.
காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஊடகவியலாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேரலை இணைப்பு (Live Feed) வழங்க உள்ளதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் ட்ரோன்களுக்கு அனுமதி இல்லை.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள கழக நிர்வாகிகளுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிர்வாகிகளின் வசதிக்காக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரை கப்பலூரில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 140 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனார் சிலை அமையவுள்ளது.
- மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
மதுரையில் வ.உ.சிதம்பரனார் சிலை அமைக்க குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
மதுரை கப்பலூரில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 140 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனார் சிலை அமையவுள்ளது.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜயகுமார், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆர். டி. சேகர் உள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒருவேளை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டால் வெற்றி பெறமுடியுமா?
தற்போது பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆர். டி. சேகர் உள்ளார். 2021 தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி 52.93% வாக்குகள் பெற்று ஆர். டி. சேகர் அபார வெற்றி பெற்றார்.
1962க்கு பிறகு பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற 14 தேர்தல்களில் 1991, 2001, 2011,2016 ஆகிய தேர்தல்களை தவிர மற்ற 10 தேர்தல்களில் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது.
ஆகவே திமுகவின் கோட்டையான பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சற்று சிரமம் தான் என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.






