செய்திகள்

2019-ம் ஆண்டு உலக கோப்பையில் டோனி ஆடுவார்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி

Published On 2017-09-14 06:58 GMT   |   Update On 2017-09-14 06:58 GMT
2019-ம் ஆண்டு உலக கோப்பையில் டோனி விளையாடுவார் என இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி.

இரண்டு உலக கோப்பையை (2007-ல் 20 ஓவர், 2011-ல் 50 ஓவர்) இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்த அவர் தற்போது ஒருநாள் போட்டியிலும் 20 ஓவர் போட்டிக்கான அணியிலும் வீரராக ஆடி வருகிறார்.

36 வயதான டோனி 2019-ம் ஆண்டு உலக கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்பது தான் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கேள்வியாகும்.

ஏற்கனவே யுவராஜ்சிங்கை தேர்வு குழு கழற்றி விட்டுவிட்டது. அவர்களுக்கு அடுத்த இலக்கு டோனியாக இருக்கலாம். ஆனால் டோனி இலங்கை தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி அனைவரது நம்பிக்கையையும் பெற்றார். அவர் 4 ஆட்டத்தில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 162 ரன்கள் எடுத்தார். மேலும் ஒருநாள் போட்டியில் 100 முறை ஸடம்பிங் செய்த முதல் வீரர் என்ற வரலாற்று பெருமையையும் பெற்றார்.

இந்த நிலையில் 2019 உலக கோப்பையில் டோனி விளையாட வேண்டும் என்று அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

டோனி தற்போது உடல் தகுதியிலும், ஆட்டத்திலும் நல்ல நிலையில் உள்ளார். இதனால் அவர் அணிக்கு தேவைப்படுகிறார். 2019 உலக கோப்பை வரை டோனி அணிக்கு தேவைப்படுகிறார். அவர் சிறப்பாக செயல்படும் போது மாற்று வீரர் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.

உலக அளவில் டோனி சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்கிறார். ஒருநாள் போட்டியில் அவர் தான் மிக சிறந்த வீரராக இருக்கிறார். இதனால் அவருக்கு மாற்று என்ற எந்த கேள்வியும் எழுப்ப தேவையாகாது. கவாஸ்கர், தெண்டுல்கர் ஆகியோர் 36 வயதில் ஆடும் போது மாற்று வீரர் குறித்து நாம் சிந்திக்கவில்லை. அவர்கள் அந்த அளவுக்கு சிறப்பாக ஆடினர். அதேபோல் தான் டோனியின் செயல்பாட்டிலும் நம்பிக்கை இருக்கிறது.

ரெய்னா, யுவராஜ்சிங் அணியில் இடம் பெறுவார்களா? என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் வீரர்களுக்கான கதவு மூடப்படவில்லை. அவர்கள் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே இடம் பெற முடியும்.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற விரும்புகிறோம். அதே நேரம் சுழற்சி முறையில் ஒவ்வொரு வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் உலக கோப்பைக்கு முன்பு திறமையான அணியை தேர்வு செய்ய வேண்டும்.

வீராட் கோலியின் ஆக்ரோ‌ஷம் அணிக்கு நல்ல நிலையை ஏற்படுத்துகிறது. நேரிடையாக பேசாதவர்களை அவர் விரும்ப மாட்டார். கோலி தற்போது முழுமையாக தேர்ச்சி அடைந்துவிட்டார். அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் அவர் இன்னும் ஏராளமாக கற்றுக் கொள்வார்.

என்னை பொறுத்தவரை வீரர்கள் தேர்வில் ஒரு போதும் தலையிடமாட்டேன். அணியை சிறப்பாக தயார் செய்வதே எனது பொறுப்பு.

இலங்கை தொடரில் முழுமையாக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தோம். எங்களது அடுத்த தொடர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானது. இதிலும் திறமையை வெளிப்படுத்த இந்த வீரர்கள் போராடுவார்கள்.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
Tags:    

Similar News