செய்திகள்

இந்தியா - இலங்கை முதலாவது டெஸ்ட்: சவாலை சமாளிக்க தயார் - ஹெராத்

Published On 2017-07-26 04:11 GMT   |   Update On 2017-07-26 04:11 GMT
இந்திய அணி உடனான டெஸ்ட் தொடர் சுவாரஸ்யமாகவும், அதே சமயம் எங்களுக்கு சவால் நிறைந்ததாகவும் இருக்கும் என்று இலங்கை அணியின் பொறுப்பு கேப்டன் ஹெராத் கூறியுள்ளார்.
இலங்கை அணியின் பொறுப்பு கேப்டன் ஹெராத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடைசியாக நாங்கள் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் 380 ரன்களுக்கு மேலான (ஜிம்பாப்வேக்கு எதிராக) இலக்கை சேசிங் செய்து அசத்தினோம். ஆனால் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் வெவ்வேறான பலம் கொண்டவை. இருப்பினும் அதுவும் சர்வதேச போட்டி தான். அந்த வகையில் இந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கை வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும். தற்போது உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியா திகழ்கிறது. எனவே இந்த தொடர் சுவாரஸ்யமாகவும், அதே சமயம் எங்களுக்கு சவால் நிறைந்ததாகவும் இருக்கும். இதை சமாளிக்க நாங்கள் சிறப்பு வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

சன்டிமால் இல்லாதது எங்களுக்கு இழப்பாகும். அவர் எப்போதும் 100 சதவீத பங்களிப்பை அளிக்கக்கூடியவர். புதுமுக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மலின்டா புஷ்பகுமாராவினால் என்னை மிஞ்சி விட முடியும். முதல்தர கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறார். அவரது சாதனைகளே சிறந்த பவுலர் என்பதை பறைசாற்றும். நான் ஓய்வு பெறுகிறனோ இல்லையோ, நிச்சயம் அவர் அணியின் 2-வது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் வாய்ப்பில் இருப்பார். இந்த டெஸ்டில் அவரை சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

கடந்த காலங்களில் நடந்த டெஸ்ட் தொடர்கள் முடிந்து போன விஷயம். இது புத்தம் புதிய தொடர். இதை நாங்கள் சிறப்பாக தொடங்க வேண்டியது முக்கியம். ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கு எதிராகவும் தனித்தனியாக திட்டம் வகுத்துள்ளோம்.

இவ்வாறு ஹெராத் கூறினார்.
Tags:    

Similar News