சிறப்புக் கட்டுரைகள்

குஷ்பு


குஷ்பு என்னும் நான்... சந்தித்ததும் சிந்தித்ததும்... உழைப்புக்கு வாய்ப்பு தருவது பா.ஜனதா- 48

Published On 2022-06-27 11:25 GMT   |   Update On 2022-06-27 11:25 GMT
  • நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை மாலைமலர் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
  • பாரதிய ஜனதாவில் உழைப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. உழைப்புக்கு மரியாதை இருக்கிறது.

பா.ஜனதாவில் என்ன பதவி கிடைக்கும்? என்று நான் நினைக்க வேண்டுமென்றால் இதற்கு முன்பும் அவ்வாறு எதிர்பார்த்து இருக்க வேண்டும்.

நான் எந்த கட்சியிலும் எதையும் எதிர்பார்த்து சென்றது இல்லை. எனவே எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லையே என்ற எண்ணமும் ஏற்பட்டது கிடையாது.

அரசியலில் ஈடுபடுவது சும்மா பெயர் வாங்குவதாக இருக்க கூடாது. உழைத்து பெயர் பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு.

பாரதிய ஜனதாவில் உழைப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. உழைப்புக்கு மரியாதை இருக்கிறது. முக்கியமாக 'ஈகோ' இல்லை.

குஷ்பு எல்லோருக்கும் தெரிந்த நடிகை. அவரை பார்க்க கூட்டம் கூடும். எங்கே நம்மை விட பெயர் வாங்கி விடுவாரோ என்ற எண்ணமும், பயமும் யாரிடமும் இல்லை.

எல்லோருமே உழைப்பது கட்சிக்காக மட்டுமே. தேர்தலுக்கு முன்பே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டேன்.

நான் எதிர்பாராத வகையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டேன்.

தேசிய செயற்குழு உறுப்பினர் என்ற பதவியும் தந்தார்கள். அதுமட்டுமல்ல இந்தியாவில் ஓசையின்றி ஒரு மகத்தான திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதாவது பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது? என்ன சத்து குறைவாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்னென்ன ஊட்டச்சத்துக்கள் வழங்க வேண்டும் என்பதையெல்லாம் கிராமம் கிராமமாக கண்டெடுத்து அந்த குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குவது தான் அந்த திட்டம்.

பிரதமர் மோடியின் நேரடி மேற்பார்வையில் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, அந்தமான்-நிக்கோபர், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேன்.

தொடர்ந்து வேலை கொடுக்கிறார்கள். வேலை வாங்குகிறார்கள். அதனால் உழைக்கிறோம் என்ற சந்தோசம் இருக்கிறது.

பணம், புகழ் எல்லாவற்றையும் வாழ்க்கையில் சந்தித்து விட்டேன். இனி நாம் சார்ந்து இருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அதற்கு அரசியல் தளம் தான் ஏற்ற தளம் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் அரசியல் தளத்தில் பயணிக்கிறேன்.

நிறைய கனவுகள் இருக்கிறது. நாடு முன்னேறுவதாக கூறுகிறோம். ஆனால் எல்லா மட்டத்திலும் சமமான வளர்ச்சி அடைந்து இருக்கிறோமா என்றால் இல்லை.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் கூட ஒரே சீரான வளர்ச்சியை அடையவில்லை. என்ன காரணம்? மக்களுக்கு போய் சேர வேண்டியது போகவில்லை. 100 ரூபாய்க்கு ஒரு திட்டத்தை போட்டால் அதில் 90 ரூபாயாவது பயனாளிகளான மக்களுக்கு போய் சேர வேண்டும்.

ஆனால் அவ்வாறு ரூபாய் சேருகிறதா? இல்லையே! 10 ரூபாய் தானே அவர்களுக்கு செல்கிறது. அவர்கள் எப்படி முன்னேறுவர்கள்? அதுதான் வலிக்கிறது.

பேராசைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால் போதும். எவ்வளவோ செய்ய முடியும்.

ஆயிரம் விளக்கில் 2021 சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது ஒரு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.

அரசியலில் இருக்கும் எல்லோருமே தேர்தலில் போட்டியிட ஆசைப்படுவார்கள். எனக்கும் அந்த ஆசை இருந்தது. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

முதல் முறையாக அந்த வாய்ப்பை பா.ஜனதா எனக்கு தந்தது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியிலாவது பொறுப்பாளராக இருந்து மக்களை சந்தித்து ஓரளவு அனுபவம் இருந்தது.

ஆனால் ஆயிரம் விளக்கு கொஞ்சம் கூட அறிமுகம் இல்லாத தொகுதி அதுமட்டு மல்ல நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பிரசாரம் செய்வதற்கு 18 நாட்கள் மட்டுமே இருந்தது.

குருஷேத்திர போர் 18 நாட்கள் நடந்தது. அதேபோல் அந்த 18 நாட்களும் எனக்கும் போர்க்களம் போலவே இருந்தது.

எப்போது சாப்பிடுவது, எப்போது தூங்க செல்வது என்ற எண்ணம் கூட ஏற்பட்டது கிடையாது. இரண்டு மணிநேரம், மூன்று மணி நேரம் மட்டுமே தூங்கிய நாட்கள் உண்டு. சாப்பிட மறந்த வேளைகள் உண்டு.

மக்களை நேரில் சந்திக்கவே ஆசைப் பட்டேன். சினிமா நட்சத்திரமாக இருந்ததால் நேரடி தொடர்பு இருக்க வில்லை.

ஏற்கனவே 2011 முதல் 4 தேர்தல்களில் பிரசாரம் செய்து இருக்கிறேன். அப்போதெல்லாம் மற்றவர்களுக்காக வாக்கு கேட்டேன். இந்த முறை தான் எனக்காக வாக்கு கேட்டேன்.

தேர்தல் கள அனுபவம் மறக்க முடியாதவை. அந்த அனுபவங்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...

ரஜினியை கவர்ந்த குஷ்பு பாடல்

கதாநாயகிகள் ரசிகர்களின் கற்பனையில் மட்டுமல்ல. கவிஞர்களின் கற்பனையிலும் இடம் பிடிக்க தவறியதில்லை. ரஜினியின் அண்ணாமலை படத்துக்கு கவிப்பேரரசு வைரமுத்து குஷ்பு பெயரை வைத்தே ஒரு பாடலை எழுதி இருப்பார். அதுதான் 'கொண்டையில் தாழம்பூ.. நெஞ்சிலே வாழைப்பூ... கூடையில் என்ன பூ... குஷ்பு... என் குஷ்பு...' என்ற பாடல்.

இதே பாடல் கம்போசிங் நடந்தபோது ஒலிப்பதிவு கூடத்துக்கு ரஜினியும் சென்றுள்ளார்.

மெட்டு போட்டு பாடல் ஒத்திகை நடந்து இருக்கிறது. முதல் பல்லவியிலேயே குஷ்பு என்று வந்ததை கேட்டதும் ரஜினிக்கு ஆச்சரியம்.

ஆச்சரியம் அடைந்ததோடு அவர் விட்டு விடவில்லை. 'கவிஞரே, பாட்டில் கதாநாயகி பெயர் மட்டும் தானா...? என் பெயரும் வருமா? என்று விளையாட்டாக கேட்டிருக்கிறார்.

உடனே கவிஞருக்கு ரஜினியையும் அந்த பாடலில் சேர்க்க வேண்டியதாயிற்று. அதனால் தான் கடைசியில் பெண் குரலில் வரும் பல்லவியில்

'வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ. என்றுமே ராஜா நீ ரஜினி... நீ ரஜினி.

உண்மைக்கு பேர் செல்லும் மனிதன் நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே... மின்னல் போல நீ வந்து நின்றால் கூட்டம் கை தட்டுமே... கோடி பூக்கள் கொட்டுமே ' என்று எழுதினாராம்.

ரஜினியுடன் முதல் படத்தில் நடித்து புகழ் பெற்றதை போல் பாடலிலும் ரஜினியும், குஷ்புவும் இடம் பிடித்து பட்டி, தொட்டியெல்லாம் பாடல் ஒலிக்கிறது.

ttk200@gmail.com

Tags:    

Similar News