சிறப்புக் கட்டுரைகள்

படிதாண்டா பரமேஸ்வரி

Published On 2024-05-02 11:19 GMT   |   Update On 2024-05-02 11:19 GMT
  • கும்பகோணத்துக்கு அருகில் பல ஊர்களில் மிக மிக பழமையான சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன.
  • அம்மன் ஆலயத்தில் ஒரு ஓலையை கூட தீ அரக்கன் தீண்டவில்லை. சூலத்தின் மீது சுற்றப்பட்டு இருந்த மஞ்சள் துணி அப்படியே இருந்தது.

கும்பகோணத்தில் சிவாலயங்களுக்கும், வைணவ தலங்களுக்கும் இணையாக சக்தி பீடங்களும் ஆங்காங்கே இருக்கின்றன. கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் அந்த தலங்களை தெரிந்துக்கொண்டு சென்றால் மிக எளிதாக அம்மனை வழிபட்டு வரமுடியும்.

கும்பகோணத்தில் பெரும்பாலும் திரவுபதி அம்மன் ஆலயங்கள் பல இருக்கின்றன. கும்பகோணம் புறநகர் பகுதிகளிலும் நிறைய அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன. கும்பகோணத்துக்கு அருகில் பல ஊர்களில் மிக மிக பழமையான சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன.

அந்த அம்மன் ஆலயங்களில் பெரும்பாலானவை பிரார்த்தனை தலங்களாகவும், பரிகார தலங்களாகவும் திகழ்கின்றன. கும்பகோணத்துக்குள்ளும் சில சிறப்பான அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன. அதில் தனித்துவம் கொண்டது படிதாண்டா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகும்.

இந்த ஆலயம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் தெற்கு வீதி பகுதியில் அமைந்து இருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயம் இருந்த பகுதி குடிசைகள் நிறைந்த பகுதியாக இருந்தது. அங்கிருந்து இந்த அம்மன் பக்தர்களிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.


அதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு நடந்ததாக செவிவழி செய்திகள் உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நடந்த அந்த சம்பவம் விவரம் வருமாறு:-

கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு அருகே ஆதி காலத்தில் நிறைய குடியிருப்புகள் இருந்தன. அவை அனைத்தும் பனை ஓலையால் வேயப்பட்ட வீடுகளைக் கொண்டிருந்தது. அங்கு குடிசை வீடுகளுக்கு மத்தியில் ஒரு இடத்தில் ஓலையால் வேயப்பட்ட அம்மன் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலித்து வந்தாள்.

அந்த அம்மன் முன்பு எப்போதும் பெரிய சூலத்தில் மஞ்சள் துணி சுற்றப்பட்டிருக்கும் அருகே ஒரு மரப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கும். ஒரு நாள் திடீரென்று அந்த பகுதியில் ஒரு குடிசை வீட்டில் தீப்பற்றிக் கொண்டது. அந்தத் தீ மளமளவென மற்ற குடிசைகளுக்கும் பரவியது. அந்த காலத்தில் தீயை அணைக்க போதுமான வசதிகள் இல்லாத நிலை இருந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அனைத்து குடிசைகளும் தீயில் எரிந்து சாம்பலாயின.

ஆனால் அந்தக் குடிசைகளுக்கு நடுவே ஓலைக் குடிசையில் வீற்றிருந்த அன்னை பரமேஸ்வரியின் ஆலயம் மட்டும் தப்பியது. அம்மன் ஆலயத்தில் ஒரு ஓலையை கூட தீ அரக்கன் தீண்டவில்லை. சூலத்தின் மீது சுற்றப்பட்டு இருந்த மஞ்சள் துணி அப்படியே இருந்தது. அதுபோல அருகே இருந்த மரப்பெட்டிக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

தீயில் குடிசைகளை இழந்த மக்கள் பரமேஸ்வரி அம்மன் ஆலயம் மட்டும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பியதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். உண்மையிலேயே அங்கு பராசக்தி குடியிருக்கிறாள் என்பதை முதன் முதலாக உணர்ந்து பக்தி கொண்டனர். இந்த தகவல் கும்பகோணம் முழுவதும் பரவியது. மக்கள் அலை அலையாக வந்து அதிசயத்தைக் கண்டு வியந்தனர். அன்னையின் அதீத சக்தியை உணரத் தொடங்கினர்.

அதற்கு பிறகு அந்த குடிசையில் உள்ள அம்மனை தேடி மக்கள் அதிகளவு வரத்தொடங்கினார்கள். உண்மையான பக்தியுடன் வந்தவர்களுக்கு எல்லாம் அங்கு நினைத்தது நடந்தது. இதனால் அந்த குடிசை அம்மனின் புகழ் மேலும் பரவியது. பலன் அடைந்த பக்தர்கள் அம்மனுக்கு நிறைய பணிவிடை செய்யத் தொடங்கினார்கள்.

இதன் காரணமாக ஓலைக் குடிசையில் இருந்த அம்மன் ஓட்டுக் கட்டிடத்திற்கு மாறினாள். அடுத்தடுத்த திருப்பணிகளால் இந்த ஆலயம் மேம்பட்டது. வேண்டுபவர்களுக்கு வேண்டியதை அருளும் அன்னையின் வழிபாடுகளில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கின.

அதுபோல அன்னையின் பெயரும் படிதாண்டா பரமேஸ்வரி எனும் பெயருக்கு மாறியது. அந்த பெயருடன் இன்றும் படிதாண்டா பரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள்புரிந்து கொண்டிருக்கிறாள். 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயத்தின் முகப்பு, சாலையிலேயே அமைந்துள்ளது. உள்ளே நுழைந்து சில அடி தொலைவு கடந்தால் வலது புறம் அன்னையின் ஆலயம் இருப்பதை பார்க்கலாம். ஆலயத்தின் உள்ளே அழகிய மகா மண்டபத்தை அடுத்துள்ள கருவறை முகப்பை சுதையாலான நீலகண்டேஸ்வரியும் பவள கண்டேஸ்வரியும் அலங்கரிக்கின்றனர்.

கருவறையில் அமர்ந்த நிலையில் அன்னை பரமேஸ்வரி எட்டுக் கரங்களுடன் இன்முகம் காட்டி கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னையின் எதிரே மகாமண்டபத்தில் பைரவரின் திருமேனி உள்ளது. பொதுவாக சிங்க வாகனம் இருக்க வேண்டிய இடத்தில் பைரவர் அமர்ந்து அருள்புரிவது இந்த தலத்தின் தனி சிறப்பாக கருதப்படுகிறது.

மகாமண்டபத்தின் இடதுபுறம் பெரிய சூலம் இருக்க, அதன் இருபுறங்களிலும் விநாயகரும் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

பூஜை முடிந்து ஆலயம் பூட்டப்பட்ட பிறகு கருவறைக்குள் இருந்து சலங்கை ஒலி கேட்பதாக அருகே குடியிருக்கும் பக்தர்கள் கூறுகின்றனர். இப்போதும் கூட முக்கிய நாட்களில் சலங்கை ஒலி சத்தம் கேட்பதை மக்கள் கேட்டுள்ளனர். அம்மன் அந்த ஆலயத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவளாக அருள்பாலித்து வருகிறாள் என்பதற்கு இதை எடுத்துக் காட்டாக சொல்கிறார்கள்.

அன்னையின் கருவறையில் உள்ள மரப் பெட்டி மார்கழி மாதம் முதல் நாள் திறக்கப் படும். பெட்டியில் இருக்கும் பவள காளி, பச்சைக் காளி என்ற இரண்டு சிலைகளும் வெளியே எடுக்கப்பட்டு அலங்காரம் செய்யப் படும். இந்த இரண்டு சிலைகளும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவை.

பெட்டி திறக்கப்பட்ட நாள் முதல் 48 நாட்கள் வரை இரண்டு காளிகளும் மகா மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். பின்னர், தை மாதம் குறிப்பிட்ட செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டும் வைபவம் நடைபெறும். மறுவாரம் செவ்வாயன்று காலை 10 மணிக்கு அன்னையர் புறப்பட்டு காவிரி நதிக்கரை சென்றுவிட்டு, இரவு 10 மணிக்கு காவிரி நதியில் இருந்து அக்னி சக்தி கரம், அக்னி கொப்பரை, தீப்பந்தம் சூழ வீதி வலம் சென்று பின்னர் ஆலயம் வந்து சேருவார்கள்.

இந்தத் திருவிழாவுக்கு கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அம்மனின் அருளை பெற்று விழாவை கண்குளிரக் கண்டு களிப்பார்கள்.

திருவிழாவின்போது மணமாலை வேண்டும் கன்னியருக்கும் மகப்பேறு வேண்டும் பெண்களுக்கும் அன்னைக்கு சாத்தப்பட்ட வளையல்களை பிரசாதமாகத் தருகின்றனர். அதைப் பெற்றவர்களின் வேண்டுதல்கள் விரைவில் பலிக்கிறதாம்.


48 நாட்கள் விழா நிறைவு பெற்றதும் பச்சைக் காளி, பவளக் காளி சிலைகள் மறுபடியும் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டு விடும். அந்த மரப்பெட்டியை அன்னையின் கருவறையில் வைத்து விடுவார்கள். பின்னர் அடுத்த ஆண்டுதான் அந்தப் பெட்டி திறக்கப்பட்டு காளி சிலைகள் வெளியில் எடுக்கப்படும். இது இந்த ஆலயத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய முறையாக உள்ளது.

இந்த ஆலயத்தில் அன்னை பரமேஸ்வரி தனது கருவறையின் படியைத் தாண்டுவது இல்லை. அன்னையின் சார்பாக பச்சைக்காளி, பவளக் காளி என இருவரும்தான் திருவிழா நாயகிகளாக இருந்து வீதிஉலா சென்று வருவார்கள். இதன் காரணமாகவே மூலவர் அன்னைக்குப் 'படி தாண்டா பரமேஸ்வரி' என்ற பெயர் வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. கந்தசஷ்டி தினத்தன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் அன்னதானமும் நடக்கின்றது. தேய் பிறை அஷ்டமியில் அன் னையின் முன் மகா மண்ட பத்தில் அருள்பாலிக்கும் பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

அன்னை படிதாண்டா பரமேஸ்வரியிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் களைந்து அவர்களை மகிழ்வோடு வாழ வைப்பதில் அன்னைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது நிஜமே.

கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம்- தஞ்சை பஸ் சாலையில் உள்ளது இந்த ஆலயம். கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் நேரம் ஒதுக்கி படிதாண்டா பரமேஸ்வரியை பார்த்து வாருங்கள்.

கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலயத்தில் நடைபெறும் திருநடன உற்சவம் புகழ் பெற்றது. இந்த உற்சவம் நடைபெறும் சமயத்தில் சென்று வந்தால் ஆலய வழிபாட்டில் வித்தியாசமான அனுபவத்தை நீங்கள் பெற முடியும்.

Tags:    

Similar News