சிறப்புக் கட்டுரைகள்

தமிழக மக்களைக் கவர்ந்த சுவாமி விவேகானந்தர்!

Published On 2024-05-02 10:11 GMT   |   Update On 2024-05-02 10:11 GMT
  • மன்னருடன் சில நாட்கள் தங்கிய சுவாமிஜி ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வழிபட்டார்.
  • சுவாமி விவேகானந்தர் ரெயிலை விட்டு இறங்கி ரெயில் நிலையத்திலேயே செங்கல்பட்டு மக்களிடையே பத்து நிமிடம் உரையாற்றினார்.

சுவாமி விவேகானந்தர், சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்துகொண்டார். `அமெரிக்க நாட்டின் சகோதர சகோதரிகளே!` எனத் தொடங்கி அவர் பேசிய பேச்சு பற்றி எங்கும் பேசப்பட்டது.

குருவருளால் ஒரே நாளில் உலகப் புகழ் அவரை வந்தடைந்தது. சிகாகோவிலேயே மேலும் தங்கி, பற்பல இடங்களில் சொற்பொழிவாற்றி இந்து மதத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தினார்.

பின்னர் அவர் வெற்றிகரமாக இந்தியா திரும்பினார். அதற்குள் இந்தியாவிலும் அவரது புகழ் விவரிக்க இயலாத அளவு பன்மடங்கு கூடியிருந்தது. இந்திய மக்களிடம் அவரைத் தெய்வமாகக் கருதும் மனப்பான்மை தோன்றிவிட்டது.

இந்தியா வரும் வழியில் பொங்கல் விழா நடைபெறும் தருணத்தில் அவர் கப்பலில் இலங்கை வந்து சேர்ந்தார். இலங்கையில் சுவாமிகளை வரவேற்க அவரின் சகோதர சீடரான சுவாமி நிரஞ்சனானந்தர் இந்தியாவிலிருந்து வந்திருந்தார்.

இலங்கையில் சுவாமிஜிக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சில நாட்கள் தங்கிய அவர் கண்டி, யாழ்ப்பாணம், அனுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று சொற்பொழிவாற்றினார்.

மீண்டும் கப்பல் பயணத்தை மேற்கொண்டார். ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் துறைமுகத்தை வந்தடைந்தார். அங்கும் அவருக்குப் பெரும் வரவேற்பு காத்திருந்தது.

விவேகானந்தர் மேல் அளவற்ற பக்தி கொண்டிருந்த ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி சுவாமிகளை ஒரு ரதத்தில் அமரவைத்து குதிரைகளுக்கு பதிலாக தன் அதிகாரிகளுடன் சேர்ந்து ரதத்தை இழுத்துச் சென்றார். அரண்மனையில் சுவாமிஜிக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

மன்னருடன் சில நாட்கள் தங்கிய சுவாமிஜி ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வழிபட்டார். சுவாமிஜியுடனான உரையாடலில் கிடைத்த ஆனந்த ஆன்மிக அனுபவத்தில் சில நாட்கள் மன்னர் பாஸ்கர சேதுபதி திளைத்து மகிழ்ந்தார்.

பின்னர் பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, மதுரை, கும்பகோணம் எனப் பல இடங்களுக்கும் சென்றார் சுவாமிஜி. அங்கெல்லாம் வேதாந்தக் கருத்துகளை எடுத்துக்கூறிச் சொற்பொழிவாற்றினார்.

பின் அங்கிருந்து கன்னியாகுமரி வரை வந்து பிறகு சென்னைக்கு ரெயிலில் பயணம் செய்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த கன்னியாகுமரி, விவேகானந்தர் வாழ்வில் மறக்க முடியாத ஓர் இடமல்லவா? அங்கு கடலில் இருந்த பாறைமீது அமர்ந்து தியானம் செய்து தெளிவு பெற்றுத்தானே அவர் சிகாகோ புறப்பட்டார்?

கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ரெயில் செங்கல்பட்டு வழியாகத்தான் சென்னை வரும். ஆனால் செங்கல்பட்டில் அதற்கு நிறுத்தம் கிடையாது.

குறிப்பிட்ட ரெயிலில் சுவாமிஜி வரும் தகவல் செங்கல்பட்டு மக்களை எட்டி விட்டது. அவர்களுக்கு சுவாமிஜியை தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் தோன்றியது.

மக்கள் திரண்டு வந்து, செங்கல்பட்டு ஸ்டேஷனில் ரெயிலை நிறுத்துமாறு ஸ்டேஷன் மாஸ்டரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்படி எப்படி திடீர் எனச் செய்ய முடியும் என்பதால் மக்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

பொதுமக்கள் உணர்வெழுச்சியோடு ஒன்று கூடி ஒரு முடிவெடுத்தனர். அத்தனை பேரும் ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துக் கொண்டனர். இப்போது என்ன செய்வது? ரெயிலை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ரெயில் நிறுத்தப்பட்டது.

சுவாமி விவேகானந்தர் ரெயிலை விட்டு இறங்கி ரெயில் நிலையத்திலேயே செங்கல்பட்டு மக்களிடையே பத்து நிமிடம் உரையாற்றினார். உலகப் புகழ்பெற்ற மாபெரும் சொற்பொழிவாளர் தங்களுக்கென்றே பேசிய பேச்சை செங்கல்பட்டு மக்கள் கேட்டு மகிழ்ந்தார்கள்.

தங்கக் குடத்தைத் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற குரல் என்று சட்டம்பி சுவாமிகள் புகழ்ந்தாரே, அந்தக் குரலை அவர்கள் கேட்டு வியந்தார்கள்.

சாதாரணக் குரலா அது? உலக அளவில் இந்து மதத்தின் பெருமையை நிறுவுவதற்காக ஓங்கிக் குரல் கொடுத்தவரின் குரல் அல்லவா?

பிறகு செங்கல்பட்டில் இருந்து ரெயில் புறப்பட்டது. 1897 பிப்ரவரி 6-ந் தேதி காலை வீரத் துறவி விவேகானந்தரை அழைத்து வந்த ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

எழும்பூரில் அவரை வரவேற்க, மாபெரும் கூட்டம் கூடியிருந்தது. சுவாமிஜி ரெயிலை விட்டு இறங்கி வலது காலைச் சென்னையில் வைத்த மறுகணம் எழுந்த வரவேற்புக் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

சுவாமிஜியை வரவேற்கக்கூடிய கூட்டம் பல்வேறு தரப்பட்ட மக்களைக் கொண்டதாக இருந்தது. பள்ளிக் குழந்தைகளும் கல்லூரி மாணவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். வியாபாரிகள், நீதிபதிகள், பெண்கள், சென்னை நகரின் முக்கியப் பிரமுகர்கள் என எல்லா வயதினரும், எல்லாத் தரப்பு மக்களும் இருகரம் கூப்பி அவரை வரவேற்றனர்.

வரவேற்புக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த மங்கல இசை ஒலிக்கத் தொடங்கியது. எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து சுவாமிஜி தங்கவிருந்த ஐஸ் ஹவுஸ் வரை தோரணங்கள், வரவேற்பு வளைவுகள், மலர் அலங்காரங்கள் என அந்தப் பிரதேசமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பாண்டு வாத்தியம் முழங்க மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுவாமிஜி அழைத்துச் செல்லப்பட்டார்.

தனக்காகக் காத்திருந்த வெண்ணிறக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் சுவாமிஜி கால்வைத்து ஏறினார். பின்னர் அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

பல பெண்மணிகள் இளம் வயதிலேயே பெரும் சாதனை புரிந்துள்ள சுவாமிஜியைத் திருஞான சம்பந்தரின் அவதாரம் என்றே கருதினர். அவர்கள் சுவாமிஜி தடுத்தும் கேளாமல் அவருக்கு கற்பூர ஆரத்தி காட்டினர்.

நிவேதனப் பொருட்களைக் கடவுளிடம் சமர்ப்பிப்பதுபோல் சுவாமிஜியிடம் தேங்காய் பழங்கள் இருந்த தட்டை வழங்கினார்கள் பல அன்பர்கள். அடுத்தடுத்து சுவாமிஜிக்கு மலர்மாலை சூட்டி மகிழ்ந்தார்கள்.

ஊர்வலம் மக்கள் வெள்ளத்தினிடையே மெல்ல மெல்ல நகர்ந்து கடற்கரைச் சாலையை அடைந்தபோது ஆர்வம் மிக்க இளைஞர்கள் குதிரைகளை அவிழ்த்துவிட்டுத் தாங்களே ரதத்தை இழுத்துச் செல்ல ஆரம்பித்தனர். அந்த இளைஞர்களில் சட்டக் கல்லூரி மாணவராக இருந்த ராஜாஜியும் ஒருவர்.

சிந்தாதிரிப்பேட்டை வழியாக நேப்பியர் பூங்கா தாண்டி ஐஸ் ஹவுஸ் வரையில் அந்த ஊர்வலம் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது. வீடுகளின் வாயிலில் எல்லாம் கோலமிட்டு மக்கள் சுவாமிஜியை வரவேற்றார்கள். மக்களின் அன்பான உபசரிப்புகளை ஏற்பதற்காகப் பல இடங்களில் சாரட் வண்டியை நிறுத்த வேண்டியிருந்தது.

இப்படியாக அந்த ஊர்வலம், இப்போது விவேகானந்தர் இல்லம் என அழைக்கப்படும் அப்போதைய கேசில் கெர்னன் மாளிகையை அடைந்தது. சுவாமிஜியின் அடியவரான பிலிகிரி ஐயங்காருக்குச் சொந்தமான கட்டிடம் அது.

அந்த மாளிகை முகப்பில் சுவாமிகளை வரவேற்கப் பல முக்கியப் பிரமுகர்கள் ஆவலோடும் பூரண கும்பத்தோடும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அளசிங்கர், பாலாஜி ராவ், சிங்காரவேலு முதலியார், கிருஷ்ணசாமி ஐயர், பாஷ்யம் ஐயங்கார், பேராசிரியர் ரங்காச்சாரி, மகாகவி பாரதியாரைப் புதுச்சேரி தலைமறைவு வாழ்க்கைக்கு பத்திரமாக அனுப்பி வைத்த டாக்டர் நஞ்சுண்டராவ் உள்ளிட்ட பலர் சுவாமிகளை பக்திப் பரவசத்தோடு வரவேற்றார்கள்.

சென்னையில் பல முக்கியமான சொற்பொழிவுகளை சுவாமிஜி நிகழ்த்தினார். விக்டோரியா ஹால், பச்சையப்பர் ஹால் உள்ளிட்ட பல இடங்களில் அவர் உரையாற்றியபோது மக்கள் கூட்டம் பெருமளவில் கூடியது.

சென்னையில் மொத்தம் ஏழு சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தினார். `இந்தியாவின் ரிஷிகள், இந்திய வாழ்க்கையில் வேதாந்தத்தின் பயன்பாடு, பாரதத்தின் எதிர்காலம்` என்பனபோன்ற தலைப்புகளில் அவர் உரைகள் அமைந்தன.

 

திருப்பூர் கிருஷ்ணன்

ஒன்பது நாட்கள் சென்னையில் தங்கினார் சுவாமிஜி. (1897 பிப்ரவரி ஆறு முதல் பதினைந்து வரை சுவாமிஜி சென்னையில் தங்கியிருந்த அந்த ஒன்பது நாட்கள் ஆண்டுதோறும் விவேகானந்த நவராத்திரி என்ற பெயரில் சுவாமிஜி தங்கியிருந்த விவேகானந்தர் இல்லத்தில் கொண்டாடப் படுகின்றன). ஒன்பது நாட்களுக்குப் பின்னர் சுவாமிஜி கொல்கத்தா புறப்பட்டார்.

அவர் சென்னையில் தங்கியிருந்த நாட்களில் சென்னையிலும் ராமகிருஷ்ண மடம் தேவை என்று சில அன்பர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களின் ஆன்மிக ஆர்வத்தைக் கண்ட சுவாமிஜி, ஆசார சீலர்களான சென்னை பக்தர்களுக்கு ஏற்ற வகையில் ஒரு துறவியைச் சென்னைக்கு அனுப்பி வைப்பதாகவும் பின்னர் இங்கு ராமகிருஷ்ண மடம் ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

தன்படிச் சிறிது காலத்தில் சென்னைக்கு அனுப்பப்பட்டவர்தான் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என அழைக்கப்பட்ட சசிமகராஜ். அவரே சுவாமி விவேகானந்தரின் கட்டளைப்படி சென்னையில் ராமகிருஷ்ண மடத்தைத் தோற்றுவித்தவர்.

தொடக்கத்தில் தற்போதைய விவேகானந்தர் இல்லத்தில் எளிய அளவில் இயங்கிய ராமகிருஷ்ண மடம் காலப் போக்கில் மயிலாப்பூரில் நிறுவப்பட்டது. மயிலாப்பூரில் முதலில் இருந்த கட்டிடம் சிதைவு படவே மீண்டும் அது புதிதாக எழுப்பப்பட்டது.

சிறிது காலம் முன்னால் சர்வ சமய சமரசக் கோவிலாக ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆலயமும் பிரம்மாண்டமான முறையில் கட்டி முடிக்கப்பட்டது. இப்போது ராமகிருஷ்ண மடத்தின் கிளைகள் மதுரை, தஞ்சாவூர் எனத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

மிக உயர்ந்த சமூகப் பணியையும் ஆன்மிகப் பணியையும் ராமகிருஷ்ண மடங்கள் நிகழ்த்தி வருகின்றன. இவற்றிற்கெல்லாம் வித்திட்டது சுவாமிகளின் தமிழக விஜயமும் அதையொட்டிய சென்னை விஜயமும்தான்.

சுவாமி விவேகானந்தரிடம் சென்னை மக்கள் நேரடியாக வைத்த பக்தி கலந்த வேண்டுகோளின் பயனே இன்றைய தமிழக ராமகிருஷ்ண மடங்கள் எனலாம்.

தொடர்புக்கு:

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News