சிறப்புக் கட்டுரைகள்

விடுமுறையில் முயற்சி செய்வோம்

Published On 2024-05-06 10:30 GMT   |   Update On 2024-05-06 10:30 GMT
  • தனிமை ஒரு சுதந்திர உணர்வினைக் கொடுக்கும்.
  • நோய் பாதிப்பினை சமாளித்து மீள வேண்டும்.

வெயிலுக்கு ஜூஸ் போல குடிச்சாதான் நிம்மதியா இருக்கு என எல்லோருமே சொல்கிறோம். ஆனால் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

இப்போது கூறப்படும் இந்த ஜூஸ் வெயில் காலத்திற்கு மட்டுமல்ல, மற்ற நாட்களிலும் குடிக்கலாம். சர்க்கரை நோய் கட்டுப்படும். கல்லீரல் நன்றாக செயல்படும். கொழுப்பு-கெட்ட கொழுப்பு குறையும். மற்றும் பல ஊட்ட சத்துகள் நிறைந்தது. பல், எலும்பு ஆகியவை உறுதிப்படும். அந்த ஜூஸ் தான் கொத்தமல்லி தழை ஜூஸ்.

* சர்க்கரை அளவினை ரத்தத்தில் கட்டுப்படுத்தும்.

* நரம்புகளுக்கு வலுவேற்றும்.

* சிறுநீரக பாதை பாதிப்புகளை நீக்கும்.

* உடலில் நச்சுகளை நீக்கும்

* குடல் புண்ணை ஆற்றும்

* வயிற்று உபாதைகளை நீக்கும்

* கல்லீரலை பாதுகாக்கும்.

* சரும பாதுகாப்பு தரும்

* கண்களுக்கு நல்லது.

செய்வது மிக சுலபம்

ஒரு கட்டு கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து ஜூஸ் செய்வது போல் மிக்சியில் சுற்றி வடித்து வைத்துக் கொள்ளுங்கள். சிறிது நீர் சேர்த்தும் கொள்ளலாம்.

நாள் முழுவதும் அவ்வப்போது சிறிது இதனை குடித்தால் உடல் ஏசியில் இருப்பது போல் இருக்கும்.

இதனை நீர் மோரிலும் சிறிது கலந்து அருந்தலாம். இதனைப் போல் 4 அல்லது 5 இலை புதினா, சிறிய இஞ்சி துண்டு ஒரு நெல்லிக்காய் மற்றும் நீர் தேவையான அளவு சேர்த்து ஜூஸ் செய்து வடிகட்டி அருந்தலாம்.

இதனை ஒருமுறை அருந்தினாலே போதும் அரிதாக சிலருக்கு புதினா அலர்ஜி இருக்கும். மற்றபடி தினமும் இந்த இலை 4 அல்லது 5 என்ற அளவில் சேர்க்கும் போது குடல் பிரச்சினைகள் தீரும்.

எலுமிச்சை சாறினை ஒரு லிட்டர் நீரில் கலந்து அவ்வப்போது குடிக்கலாம். இவை அனைத்துமே குறைந்த செலவில் நிறைந்த பலன் தருபவை.

இருதய பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் குறிப்பாக இந்த கொளுத்தும் வெயில் நேரத்தில் சில அறிகுறிகளுக்கு அதிக கவனம் தர வேண்டும்.

* மூச்சு விடுவதில் சிரமம் * அதிக சோர்வு

* கால், வயிற்றில் வீக்கம் * படபடப்பு

* விடாத இருமல் * இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் * வயிற்று பிரட்டல் * வாந்தி * நெஞ்சில் அழுத்தம் இவைகளை உடனடியாக கவனிக்க வேண்டும்.

மன உளைச்சல் ரொம்ப அதிகமாக இருக்கா? கீழே கூறப்படுபவை சற்று வித்தியாசமாகக் கூட இருக்கலாம். ஆனால் பலன் தருபவை. முயன்று பார்க்கலாமே.

முடிந்த வரை தனியாக இருங்கள் என்று சொன்னால் பலருக்கு மன உளைச்சல் கூடி விடும். காரணம் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் சூழ்நிலையிலேயே இருந்து பழகியவர்கள்.

* ஆகவே தினமும் 1 அல்லது 2 மணி நேரம் வரை தனியே இருந்து பழுகுங்கள்.

* தனியாக அமர்க்களம் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல் இருப்பது ஒரு தவம்.

* சுற்றியுள்ள அனைவரும் நல்லவர் என்பது மிகக் குறைவு. இவர்களின் எண்ணங்களோடு உடன் இருப்பதனை காட்டிலும் தனியே இருப்பது நல்லது.

* தனிமை ஒரு சுதந்திர உணர்வினைக் கொடுக்கும். மன உளைச்சலைக் குறைக்கும்.

உங்களது வாழ்க்கையினை பிறருடன் ஒப்பிக்கும் குணம் நீங்கும்.

கமலி ஸ்ரீபால்

* பிறரது தேவையற்ற பேச்சுகளுக்கு கவனம் செலுத்துவது நீங்கும். இதுவே மன உளைச்சலை அதிக அளவில் குறைக்கும்.

* குறைவாக பேசும் போது பிறரால் நீங்கள் அதிகம் மதிக்கப்படுவீர்கள்.

* உடல் ஆரோக்கியம் நன்கு கூடும்.

இந்த தனிமையில் மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி, தியானம் இவற்றினை செய்யலாமே.

குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு. கொளுத்தும் வெயிலில் எங்கும் செல்ல முடியவில்லை. அவர்கள் நேரத்தினை பயனுள்ளதாக மாற்றுவது எப்படி?

ஒருநாள் ஒரே ஒரு நாள் அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்ய விடுங்கள். டி.வி. ஓடிக் கொண்டே இருக்கட்டும், பாட்டு அலறட்டும். போனில் குடைந்து கொண்டே இருக்கட்டும், கன்னா, பின்னா என சாப்பிடட்டும். விட்டு விடுங்கள். கோபம் கொள்ள வேண்டாம். மறுநாள் அநேகமாக பலரிடம் நிறைய மாறுதல்கள் தெரியும். "படி...படி"... என அடைத்து, அடக்கி ஒரு வருடம் முழுவதும் மூச்சு திணற வைத்த அவர்களுக்கும் சற்று சுதந்திரம் தேவை.

அவர்களது பலம், பலவீனம் இதனை அவர்களே சுய ஆய்வு செய்து குறைந்தது பலம்-15, பலவீனம் 15 என ஒரு பேப்பரில் எழுத வேண்டும். நீங்களும் கூட செய்யலாம். பலருக்கு பலம் 4 கூட தாண்டாது. பலவீனம் கூடுதலாக இருக்கும். இந்த முயற்சி அவர்களை வெகுவாய் நல்வழிக்கு திருப்பும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வீட்டிற்குள்ளேயே நடக்கச் செய்யுங்கள். கைகளை தூக்கி கால் விரல் நுனிகளை பூமியில் பதித்து குதிகால் உயர்த்தி நடக்கச் செய்யுங்கள். உடல் கம்பீரமாய் மாறும். இதனை ஓரிரு முறை செய்யலாம். மற்றபடி சாதா நடை, கைவீசி நடை, பின்னோக்கி நடை, நேர் கோட்டின் மேல் நடை என பல விதமாய் செய்ய வையுங்கள்.

பிள்ளைகளை வைத்துக்கொண்டு பறவைகளுக்கு சாப்பாடு கொடுங்கள். ஒருவருக்கேனும் அன்றாடம் சிறு தர்மம் செய்ய வையுங்கள். அக்கம் பக்கத்தினரை அறிமுகம் செய்து வையுங்கள்.

இச்செயல்கள் அவர்களுக்கு ஒன்றினை நன்கு புரிய வைக்கும். நம் வாழ்க்கையினை நாம்தான் முயன்று நல்ல வழியில் உருவாக்கி கொள்ள வேண்டும் என நன்கு புரிந்து விடும்.

உங்கள் பிள்ளைகளுக்கு ஆணோ, பெண்ணோ தன்னை பாதுகாத்துக் கொள்ளுதல் பற்றி சிலவற்றினை சொல்லித் தரலாமே!

* முக்கியமான உறவுகளின் போன் நம்பர்கள், தெரியாத நபர்களுடன் செல்லக் கூடாது என அவர்களின் வயதுக்கேற்ப பாதுகாப்பு முறைகளை சொல்லித் தரலாமே.

மேலும் * இந்த கோடை விடுமுறையில் பிள்ளைகள் சுத்தமாக சாப்பிட பழகுவோம், பழக்குவோம்.

* தவறான நட்புகளை களைய இந்த விடுமுறை காலம் ஒரு வாய்ப்பு.

* தவறான, சோம்பேறித்தனமான பழக்கங்களில் இருந்து மீள பொன்னான காலம்.

* தினமும் காலையில் எழுந்தவுடன் குளிக்கச் செய்வோம். 10-20 நிமிட ஷவர் குளியல் உடல் சூட்டினை நன்கு தணித்து விடும்.

* வீட்டில் இருந்தாலும் சுத்தமான, கசங்காத ஆடையை நேர்த்தியாய் உடுத்த பழக்குவோம். பழைய சாயம் போன உடை, வாராத தலை முடி என நாள் முழுவதும் இருப்பது விடுமுறை சலுகை அல்ல.

* எப்பொழுதும் அனைத்துப் பொருட்களும் உரிய இடத்தில் முறையாய் இருக்க பிள்ளைகள் வேலை செய்ய வேண்டும். இப்படி பழகி விட்டால் வீடு தெய்வீகமாய் இருக்கும்.

* நியாயமான முயற்சிகளை கை கொடுத்து உயர்த்தி வருபவர்களோடு பழக வேண்டும்.

* சமையல் செய்வது கூட (ஓரிரு முறைகள்) அனுபவம்தான்.

* வாழ்க்கையில் சாதனை படைப்பதனை விட முறையாய் பூமியில் நடப்பதே ஆரம்ப சாதனை தான் என்பதனை சொல்லிக் கொடுங்கள்.

* நோயற்ற வாழ்வும், மன நிம்மதியும் கிடைப்பதற்கரிய சாதனை என்பதனை சொல்லிக் கொடுங்கள்.

வெயில் வருடா வருடம் நம்மை வறுத்து எடுத்து விடுகின்றதுதான். மழை, வெள்ளம் என பாதிப்பினை ஏற்படுத்துகின்றதுதான். நோய், பிரச்சனை என விடாது நம்மை தாக்குகின்றதுதான். இதனையும் மீறி ஒருவனுக்கு வாழ்க்கை தொடங்குகின்றது. ஒருவனுக்கு முடிந்து விடுகின்றது. வாழும் வரை நல்ல முயற்சிகள் செய்வோமே!

அதில் ஒன்றுதான் நம்மை நாமே நன்கு கவனித்துக் கொள்வது.

* உடல் நலத்தினை கூட்டுவது என்பதில் முயற்சி வேண்டும்!

* உடல் நலத்தினை அன்றாடம் பராமரிக்க வேண்டும்!

* நோய்களை வருமுன் தவிர்ப்பதே நல்லது!

* நோய் பாதிப்பினை சமாளித்து மீள வேண்டும்!

இதற்கு நமக்குத் தேவையானது விழிப்புணர்வு, சுயக்கட்டுப்பாடு, தன் மீது நம்பிக்கை கொள்ளுதல் ஆகும். உடல் நலம் என்றதும் அனைவரும் சொல்லும் அளவு வளர்ந்துள்ளது விழிப்புணர்வு.

உடற்பயிற்சி, யோகா, தியானம், முறையான உணவு இதில் நமக்கு எதில் கூடுதல் முயற்சி தேவை இருக்கின்றது என்பதனை சற்று ஆராய வேண்டும்.

மனநலம் என்பதற்கான விழிப்புணர்வு நமக்கு இன்னும் சற்று கூடுதலாகவே தேவைப்படுகின்றது.

நம் மனதினை வருத்தப்படுத்தும், காயப்படுத்தும் நிகழ்வுகளால் நம்முடைய பண்பான குண நலன்கள் மாறி விடக்கூடாது.

ஒவ்வொருவர் வாழ்விலும் வாழ்நாள் முழுவதும் அழுவதற்கும், சோகத்தில் கழிப்பதற்கும் அநேக காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஏதாவது ஒரு காரணம் கண்டிப்பாய் ஒரு சிறிய புன்னகையை உங்களுக்கு வரவழைத்து இருக்கும். அதனை பிடித்துக் கொள்ள வேண்டும். அதுவே நல்ல சூழலை ஏற்படுத்தி விடும்.

யார் உங்களை இன்று வேண்டாம் என்று ஒதுக்குகின்றார்களோ ஒரு நாள் அவர்களே நீங்கள் வேண்டும் என்று திரும்பி வருவார்கள். இதுவே இயற்கையின் நியதி.

தசைகளில் வலி, தலைவலி, இயலாமை, தூக்கமின்மை அதிக இனிப்புக்கு ஏங்குதல், சோர்வு, வயிற்றுப் பிரச்சினை இவை மன நல பாதிப்பின் காரணமாகவும் இருக்கலாம். இதனை மீறித்தான் எழ வேண்டும். எழுந்து நின்று வாழ்வோம்.

Tags:    

Similar News