சிறப்புக் கட்டுரைகள்
null

'பேடண்ட் கிங்' யோஷிரோ நகாமட்சு

Published On 2024-05-01 10:45 GMT   |   Update On 2024-05-01 10:45 GMT
  • வேடிக்கையான சாதனைகளை செய்பவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
  • ஜப்பானில் உள்ள தொலைக்காட்சித் தொடர்களால் இவர் அங்குள்ள இளைய தலைமுறையினருக்கு ஹீரோ ஆகிவிட்டார்.

கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரிகார்டில் அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர் என்று பதிவு செய்யப்பட்ட யோஷிரோ நகாமட்சு, தாமஸ் ஆல்வா எடிசனை விட மூன்று மடங்கு அதிகமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவராகத் திகழ்கிறார் -

3500 கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்!

உலகின் ஆகப் பெரும் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா? சுமார் 3500 கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து 'பேடண்ட் கிங்' என்ற அடைமொழியைக் கொண்டிருக்கும் ஜப்பானைச் சேர்ந்த யோஷிரோ நகாமட்சு என்பவர் தான்.

அமெரிக்க சயின்ஸ் அகாடமிக் சொசைடியினால் ஆர்க்கிமிடிஸ், மைக்கேல் பாரடே, மேரி கியூரி, நிகோலா டெஸ்லா ஆகிய பெரும் கண்டுபிடிப்பாளர்களுடன் ஐந்தாவதாக இவரது பெயரையும் சேர்த்துள்ளது ஒன்றே இவர் எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பாளர் என்பதைச் சுட்டிக் காட்டும்!

144 வயது வரை வாழ உறுதி பூண்டிருக்கும் இவருக்கு இப்போது வயது 95.

பிறப்பும் இளமையும்: ஜப்பானில் வங்கியர் (பேங்கர்) ஆக இருந்த ஹஜிமே நகாமட்சு என்பவருக்கும் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்த ஷினோ நகாமட்சு என்பவருக்கும் 26-6-1928-ல் பிறந்தார் யோஷிரோ நகாமட்சு.

இவரது தாயார் இவரை படிப்பில் நன்கு ஊக்குவித்தார். இவரது முதல் கண்டுபிடிப்பே இவரது தாயார் மீது இவருக்குள் அன்பின் அடையாளமாகக் கண்டுபிடிக்கப்பட்ட கெரோசின் பம்ப் தான்!

டோக்கியோ பல்கலைக் கழகத்தில் எஞ்ஜினியரிங் படிப்பை முடித்த இவர் தானே தேர்ந்தெடுத்த ஒரு கம்பெனியில் சேர்ந்தார்.

ஹிடாசி நிறுவனத்தில் கிடைத்த நல்ல வேலையை வேண்டாம் என்று சொல்லி விட்டு மிட்சுயி என்ற நிறுவனத்தில் இவர் வேலைக்குச் சேர்ந்தார்.

அந்தக் கம்பெனியை இவர் தேர்ந்தெடுத்த காரணம் கண்டுபிடிப்புகளை யார் கண்டுபிடித்தாலும் ஜப்பானில் அந்தக் கம்பெனியே அதற்கு உரிமை கொண்டாடும். ஆனால் மிட்சுயி மட்டும் யார் கண்டுபிடித்தாரோ அவருக்கே உரிமையை வழங்கும்.

கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பது எப்படி?

இவர் தான் புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்கும் விதத்தை விரிவாக விளக்கியுள்ளார்.

தண்ணீருக்கடியில் ஒரு வித கவசமும் இன்றி மூழ்கி ஆக்சிஜனுக்காகத் திணறுவார். இன்னும் அரை நொடியில் மரணம் சம்பவிக்கும் என்ற நிலையில் பாதுகாப்பாக மீள்வார். அந்தக் கடைசி நேரத்தில் அவர் மூளையில் பல புதிய எண்ணங்கள் தோன்றும்.

அவற்றை நீருக்கு அடியிலேயே இருந்து அதற்காகவே உள்ள ஒரு குறிப்பேட்டில் குறிப்புகளை எடுத்துக் கொள்வார்.

ச.நாகராஜன்

சில கண்டுபிடிப்புகள்: பிளாப்பி டிஸ்கை தானே முதலில் கண்டுபிடித்ததாக இவர் சொல்கிறார். அடுத்து அதற்கான பாதுகாப்பான உறை ஒன்றையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.

பறக்கும் செருப்புகள் என்ற காலணிகளை ஸ்பிரிங்குகள் அமைத்து இவர் கண்டு பிடித்துள்ளார்.

செரிப்ரக்ஸ் சேர் என்னும் நாற்காலியில் உட்கார்ந்தால் போதும், ஒருவரின் படைப்பாற்றல் திறன் கூடும், காலை வெதுவெதுப்பாக்கி மூளையைக் குளிர வைத்து அதன் திறனைக் கூட்டும், அந்த நாற்காலியையும் இவர் கண்டுபிடித்துள்ளார். பாலியல் உறவில் இன்பம் காண இவரது கண்டுபிடிப்புகள் பல உண்டு. செக்ஸ் திறனை அதிகமாக்கும் சிடி இவரது கண்டுபிடிப்புகளுள் ஒன்று.

இவரது கண்டுபிடிப்புகள் பிரபலமாகி அவற்றை உலகெங்கிலுமுள்ள மக்கள் இன்றும் வாங்கி வருகின்றனர். லவ்ஜெட் என்ற இவரது செக்ஸ் படைப்புக்கு சீனா உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. இது ஒரு ஸ்ப்ரே. இதை 50000 பேரிடம் தந்து அபிப்ராயத்தைக் கேட்ட அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் அவர்கள் அனைவரும் இது பயனளிக்கும் ஒன்று என்று கூறியதைச் சுட்டிக் காட்டுகிறார்.

கண்ணாடி அணிந்திருப்பது போலவே தோன்றாமல் இருக்கும்படி கண் போன்ற அமைப்பில் உள்ள கண்ணாடி இவரது பிரபலமான படைப்பில் ஒன்று.

'ப்யான் ப்யான் பூட்' என்ற இவரது இன்னொரு படைப்பையும் வெகுவாக உலகெங்கும் உள்ள விற்பனை நிறுவனங்கள் வாங்கி விற்கின்றன.

இவரது படைப்புகள் அனைத்தும் இவரது நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இக்நோபல் பரிசு: இவருக்கு 2005-ம் ஆண்டிற்கான இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. வேடிக்கையான சாதனைகளை செய்பவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். சுமார் நாற்பது ஆண்டுகளாக தான் உண்ணும் உணவை, உண்பதற்கு முன் போட்டோக்கள் எடுத்து வந்தார் இவர். ஊட்டச்சத்து பற்றி அறிவதற்காகவே அவர் இந்த போட்டோக்களை எடுத்து வந்தார்.

இந்த சாதனைக்காகவே இவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. இக்நோபல் பரிசு வாங்க நேரில் வந்து விழாவில் இவர் கலந்து கொண்டார். அங்கு தனது மருத்துவ நிலை பற்றி ஒரு கவிதையை வேறு இயற்றிப் பாடினார்.

சுமார் 55 வகை உணவு வகைகளை சுழற்சி முறையில் மாற்றி மாற்றித் தீர்மானித்து உண்ணுவது இவர் வழக்கம்.

இது ஏன்? நீண்ட ஆயுளை உறுதி செய்யத் தான்!

144 வயது. ஒவ்வொரு மனிதரும் நீண்ட ஆயுளைக் கொண்டு வாழ முடியும் என்பது இவரது கொள்கை. தான் 144 வயது வாழப் போவதாக இவர் தெரிவித்துள்ளார். ஆனால் தான் 'புரொஸ்டேட் கேன்சாரால்' பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதை 2013-ல் க் கண்டறிந்த தனது டாக்டர்கள் 2015-க்குள் தனக்கு மரணம் நிச்சயம் என்று சொல்வதாக 2014-ல் இவர் கூறினார்.

ஆனால் அந்த புற்றுநோயில் இருந்து விடுபட ஒரு விசேஷ தயாரிப்பைக் கண்டுபிடித்து அருந்த ஆரம்பித்தார். இப்போது 95 வயதைக் கடந்து விட்ட இவர் தெம்பாகத் தான் இருக்கிறார்.

கண்டுபிடிப்பு இல்லம்: இவர் ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணிக்கு எழுந்திருப்பார். தனது இன்னோவேஷன் ஹவுஸ் எனப்படும் கண்டுபிடிப்பு இல்லத்தில் வேலையை ஆரம்பிப்பார். மூன்று அடுக்கு மாடிக் கட்டிடமான இது டோக்கியோவில் இருக்கிறது. விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் கார்பன் நச்சுப்புகை அறவே கிடையாது.

அவரே வடிவமைத்துள்ள ஒரு அமைதி அறை எனப்படும் காம் ரூம் (Calm Room) அவருக்குப் பெரிதும் உதவுகிறதாம். இந்த பாத்ரூம் ஒரு ஆணி கூட அடிக்காமல் கட்டப்பட்டுள்ளது. அறை முழுவதும் 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டு வேயப்பட்டிருக்கிறது. இது ரேடியோ மற்றும் டெலிவிஷன் அலைகள் பாத்ரூமில் புகுவதைத் தடுத்து விடுமாம்.

வீட்டில் ஒரு எலிவேடரை இவர் அமைத்திருக்கிறார். அது உயரத் தூக்கிச் செல்லும் லிப்ட் என்பதை இவர் மறுத்து, "அது செங்குத்தாக மேலே செல்லும் அறை; அதில் தான் எனது சிந்தனை சிறப்பாக செயல்படுகிறது" என்கிறார்.

கண்டுபிடிப்பு நேரம்: நள்ளிரவு 12 மணியில் இருந்து காலை 4 மணி வரை மிக முக்கியமான கண்டுபிடிப்பு நேரம் என்கிறார் இவர். அப்போது தான் இவருக்குப் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றிய எண்ணங்கள் தோன்றுமாம்.

6000 கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடிப்பதே தனது லட்சியம் என்கிறார் இவர்!

காலை 4 மணி முதல் எட்டு மணி வரை உறங்குவது இவர் வழக்கம்.

மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நான் சிந்திக்கிறேன் என்கிறார் இவர்.

மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேருக்கு படைப்பாற்றல் திறன் பற்றி இவர் சொல்லித் தருகிறார்.

சுஜி, பிகா, இகி

தான் எப்படி இப்படி ஒரு மிகப் பெரும் கண்டுபிடிப்பாளராக ஆக முடிந்தது என்பதை சூத்திர பாணியில் இவர் கூறுகிறார்.

அது தான் - சுஜி, - பிகா - இகி!

சுஜி என்றால் தியரி அல்லது அடிப்படைக் கொள்கை

பிகா என்றால் ''எ பிளாஷ் ஆப் இன்ஸ்பிரேஷன்' - ஒரு கணத்தில் உள்ளத்தில் உத்வேகத்தால் எழும் ஒரு மின்னல் தோற்றம்

இகி என்றால் பிராக்டிகாலிடி - நடைமுறைக்கு இயல்பாக ஒத்து வர வேண்டும்.

இந்த மூன்றும் இணைந்தால் படைப்பு வெற்றி தான் என்பது இவரது கொள்கை.

அரசியல் ஆர்வம்: அரசியலில் இவருக்கு அடங்காத ஆர்வம் உண்டு. கண்டுபிடிப்பில் ஒரு அங்கம் தான் அரசியல் என்பது இவரது கண்டுபிடிப்பு. ஆகவே 1995 முதல் டோக்கியோ மேயர் பதவியைக் குறி வைத்து இவர் போட்டியிடலானார். ஆனால் தோல்வியே கிட்டியது.

ஹாப்பினெஸ் ரியலைசேஷன் பார்ட்டி என்ற சந்தோஷக் கட்சியின் சார்பில் ஜப்பானின் மேல் சபைக்காக இவர் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் அதிலும் வெற்றி பெறவில்லை.

பாராட்டுகள்: உலகெங்குமுள்ள அறிஞர்களும் பிரபலங்களும் இவரைப் பாராட்டியுள்ளனர்.

இவரது இன்னோவேஷன் ஹவுசில் ஸ்வீடன் அரசருடன் இவர் எடுத்துக் கொண்ட படம், ஜப்பான் சக்கரவர்த்தியுடன் எடுத்துக் கொண்ட போட்டோ, அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ்ஷுடன் ஒயிட் ஹவுசில் எடுத்துக் கொண்ட போட்டோ உட்பட ஏராளமான புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன.

அங்கு பீத்தோவன் சிம்பனி - 5 ஐ கேட்பது இவரது வழக்கம். அந்த இசை இவருக்கு உத்வேகம் ஊட்டுகிறதாம்!

தனது கண்டுபிடிப்புகளுக்காக 41 முறை கிராண்ட்பிரிக்ஸ் விருதை வென்றிருக்கும் இவரது வெற்றிப் புராணம் மிகப் பெரியது.

நியூயார்க் நகரில் 2016-ம் ஆண்டு 'வாழ்நாள் தீர்க்கதரிசன விருது' ஒன்றும் இவருக்கு அவரது 88வது பிறந்த நாளையொட்டி வழங்கப்பட்டது.

சம்பாதித்த சொத்து: தனது கண்டுபிடிப்புகளால் உலகப் புகழ் பெற்றுள்ள இவரது சொத்தின் இன்றைய மதிப்பு 5 கோடி அமெரிக்க டாலராகும். ஒரு அமெரிக்க டாலரின் இன்றைய இந்திய மதிப்பு ரூபாய் 83.30

இவருக்கு மூன்று புதல்வர்கள் உண்டு.

ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் இவர் பங்கேற்றுள்ளார். அமெரிக்கத் தொடர்கள் உள்ளிட்ட பல்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் இவரை போட்டி போட்டு அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன.

ஜப்பானிய டாக் ஷோக்களில் மிக பிரபலமான இவர், தனது கண்டுபிடிப்புகளை நகைச்சுவை உணர்வுடன் விவரிப்பார்.

'தி இன்வென்ஷன்ஸ் ஆப் டாக்டர் நகாமட்சு"

என்ற ஒரு நகைச்சுவையுடன் கூடிய டாகுமெண்டரி படம் இவரைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பானில் உள்ள தொலைக்காட்சித் தொடர்களால் இவர் அங்குள்ள இளைய தலைமுறையினருக்கு ஹீரோ ஆகிவிட்டார். ஆனால் ஏராளமான ஜப்பானியர்களைப் பொறுத்த மட்டில் அவர்களுக்கு இவர் ஒரு படைப்புக் கடவுளே தான்!

உலகின் அதிசயிக்க வைக்கும் கண்டுபிடிப்பாளராகத் திகழும் இவர் அனைவருக்கும் சொல்வது : "நீங்களும் கூட புதியனவற்றைக் கண்டுபிடிக்கலாம்" என்பதே!

தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

Tags:    

Similar News