சிறப்புக் கட்டுரைகள்

சூரிய தோஷம் நீக்கும் பரிகாரம்

Published On 2024-05-07 10:31 GMT   |   Update On 2024-05-07 10:31 GMT
  • நம் கண்ணுக்கு ஒளியாய் இருந்து நம்மை வழி நடத்திச் சென்று உலக உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பதால் சூரிய பலம் மிக அவசியம்.
  • ஞாயிற்றுக்கிழமை புதன் ஒரையில் மகா விஷ்ணுவை வழிபட்டால் முத்தாய்பான முன்னேற்றம் வந்து சேரும்.

நவகிரகங்களில் முதன்மையான கிரகமான சூரியன் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழத் தேவையான ஒளிக்கதிர்களை எந்த விதமான பாகுபாடுமின்றி வழங்குபவர். நம் கண்ணுக்கு ஒளியாய் இருந்து நம்மை வழி நடத்திச் சென்று உலக உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பதால் சூரிய பலம் மிக அவசியம். இனி பன்னிரு ராசிக்கு சூரிய தோஷம் நீக்கும் பரிகாரங்களைக் காணலாம்.

மேஷம்

மேஷ ராசிக்கு சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. அதாவது ஐந்தாம் அதிபதி. இவர்களுக்கு சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவது, சுப கிரக சம்பந்தம் பெறுவது நல்லது. பூர்வீகத்தில் பிறந்து பூர்வீகத்திலேயே புகழ், அந்தஸ்து, கவுரவத்துடன் வாழ்வார்கள். தலைமை பண்பு மிகுந்தவர்கள். ஆன்மீக நாட்டம் அதிகமாக இருக்கும்.குல தெய்வ , பித்ருக்கள் நல்லாசிகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் அரவணைக்கும். பெற்ற பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அரசு, அரசியல் ஆதாயம், கவுரவப் பதவிகளால் பெருமையடைவார்கள். சூரியனுக்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் குல தெய்வ குற்றம் இருக்கும். பித்ருக் கடன் தீர்க்க முடியாது. அதிர்ஷ்டத்தை தேடி அலைவார்கள். பிள்ளைகளால் நிம்மதி குறையும். புத்திர பாக்கியம் கால தாமதமாகும்.

பரிகாரம்: ஞாயிற்று கிழமை சூரிய ஒரையில் சிவப்பு வஸ்திரம் சாற்றி சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு சூரியன் சுக ஸ்தான அதிபதி. 4-ம் அதிபதி.இவர்களுக்கு சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவதுடன், சுப கிரக சம்பந்தம் பெறுவது நல்லது.சூரியன் பலம் பெற்றால் நல்ல ஆரோக்கியமான உடல்வாகுடன் இருப்பார்கள். எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள். தாயின் அன்பும், ஆசியும் எப்பொழுதும் உண்டு. முக்கிய பணிகளை தாயின் ஆசிர்வாதம் பெற்றப்பிறகே செய்வார்கள்.

சுய உழைப்புச் சொத்தும் தாய் வழிச் சொத்தும் மிகுதியாக இருக்கும். அந்தஸ்தான உயர்ரக வாகன யோகம், அரசு வழி ஆதாயம், அரச பதவி உண்டு. விவசாயம், கால்நடை வளர்ப்பு, சொத்துக்கள், ரியல் எஸ்டேட் மூலம் வருமானம் பெருகும்.பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது மாணவத் தலை வர்களாக இருப்பார்கள். இளம் வயதில் அரசியல் ஆர்வம் ஏற்படும்.

சூரியன் பலம் குறைந்தால் ஆரோக்கிய கேடு மிகுதியாக இருக்கும். சொத்துக்களால் மன உளைச்சல் அதிகரிக்கும். தாய், தாய் வழி உறவுகளின் ஆதரவு குறையும். அரசு, அரசியல் ஆதாயம் குறையும்.

பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை செவ்வாய் ஓரையில் முருகனை வழிபட வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்கு சூரியன் சகாய ஸ்தான அதிபதி. 3-ம் அதிபதி. இவர்களுக்கு சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவது, சுப கிரக சம்பந்தம் பெறுவது நல்லது.

சுய ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றால் அதீத ஞாபக சக்தி உண்டு. வீரம், தைரியம், தன்னம்பிக்கை நிரம்பியவர்கள். திட்டமிடுதலே வெற்றியின் ரகசியம் என்பதால் திட்டமிட்டு காய் நகர்த்துவார்கள் செயல்படு வார்கள். பூர்வீகத்திற்கு மிக அருகில் வசிப்பார்கள். ஆதாயம் இல்லாத செயலில் இறங்க மாட்டார்கள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல் இவர்களின் அனைத்து முயற்சியிலும் சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு இருக்கும்.

சூரியன் பலம் குறைந்தால் நிலையாக ஒரே இடத்தில் இருக்க முடியாமல் அடிக்கடி இடப் பெயர்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். முறையான திட்டமிடுதல் இருக்காது. அண்டை அயலாருடன் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். சொத்துக்கள் தொடர்பான முறையான ஆவணங்கள் இருக்காது. இளைய உடன் பிறப்புகளின் ஆதரவு குறையும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை புதன் ஒரையில் மகா விஷ்ணுவை வழிபட்டால் முத்தாய்பான முன்னேற்றம் வந்து சேரும்.

கடகம்

கடக ராசிக்கு சூரியன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி. 2-ம் அதிபதி. சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவது, சுப கிரக சம்பந்தம் பெறுவது கடக ராசிக்கு சுபத்துவமான அமைப்பு .சூரியன் சுப வலுப் பெற்றவர்களுக்கு நிலையான நிரந்தரமான வருமானம் உண்டு.

பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதிப்பவர்கள். தன் அன்பால், திறமையான பேச்சால் குடும்பத்தை தன் வசப்படுத்துவார்கள். இவர்களின் பேச்சிற்கு எதிர் பேச்சு இருக்காது. குடும்பத்தை திறமையாக நிர்வகிப்பார்கள். கொடுத்த வாக்கை, சத்தியத்தை காப்பாற்றுவார்கள்.

சூரியனுக்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் குடும்ப உறவுகளுடன் ஒட்ட மாட்டார்கள். நிறைவேற்ற முடியாத வாக்கை கொடுத்து விட்டு வருந்துவார்கள். நிலையான வருமானம் கிடைக்காது. சுய தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்ய ஹ்ருதயம் படிக்க வேண்டும்.

சிம்மம்

சிம்மத்திற்கு சூரியன் ராசி அதிபதி. இவர்கள் ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவது, சுப கிரக சம்பந்தம் பெறுவது ராஜ யோகத்தை தரும். சூரியன் பலம் பெற்றால் ஆன்ம பலத்துடன் தேஜஜான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள் , குடும்பத்தின் தலைமுறையின் முதல் வாரிசாக பிறப்பார்கள். அல்லது இவர்களின் செயல்பாடுகள் குடும்ப மூத்த உறுப்பினர்களைப் போல் தோரணையாக இருக்கும்.

தலைமைப்பண்பு சிறந்த நிர்வாகத் திறமை புகழ், அந்தஸ்து, கவுரவம் நிறைந்தவர்கள். சுய முயற்சியால் வாழ்வில் உன்னத நிலையை அடைவார்கள். அரசியல் ஆர்வம், அரசியல் பதவி, கவுர பதவிகள் உண்டு. கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி உயர்ந்த நிலையை அடைவார்கள்.

சூரியன் பலம் குறைந்தால் ஜாதகர் நிலையற்ற தன்மையுடையவராக இருப்பார். சுய முடிவு எடுக்கத் தெரியாது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தத் தெரியாது.ஆன்ம பலம் குறையும். எதிர்மறை எண்ணங்கள் அதிகம் உள்ளவர்.

பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை சூரிய ஓரையில் ஏழு குதிரையுடன் அமர்ந்த சூரிய பகவானை வழிபடவும்.


கன்னி

கன்னி ராசிக்கு சூரியன் விரய அதிபதி என்பதால் சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவது சிறப்பல்ல. மத்திம பலத்துடன் இருக்க வேண்டும். சூரியனுக்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால் சுப விரயம், மன நிறைவான வெளிநாட்டு வாழ்க்கை, சேவை மனப்பான்மை நிறைந்தவர்களாக இருப்பார்கள். சூரியனுக்கு லக்ன ரீதியான அசுப கிரக சம்பந்தம் இருந்தால் வீண் விரயம், சம்பாதித்த காசு தங்காத நிலை, அதீத மருத்துவச் செலவு அல்லது விரும்பத்தகாத வெளிநாட்டு வாழ்க்கை அல்லது தலைமறைவு வாழ்க்கை அல்லது சிறை தண்டனை அல்லது அடிமை வாழ்க்கையை அனுபவிக்க நேரும். வெகு சிலருக்கு உடல் உறுப்புகளை இழக்கவும் நேரும். கண் பாதிப்பு. மன சஞ்சலம் அதிகரிக்கும். உஷண நோய் தாக்கம் இருக்கும். தூக்கம் குறைவுபடும். நல்ல இல்லற வாழ்க்கை அமையாது.

பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை சிவனடியார்களுக்கு தேவையறிந்து உதவ வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்கு சூரியன் லாப அதிபதி, பாதகாதிபதி. லாப அதிபதி வலுத்தால் பாதகமும் மிகுதியாகும். துலாம் ராசிக்கு சூரியன் அசுப கிரக சம்பந்தம் பெற்றால் பாதகம் குறைந்து சாதகம் மிகுதியாகும். மிகச் சுருக்கமாக உயிர் காரகத்துவத்தால் நன்மை அடைந்தால் பொருள் காரகத்துவத்தால் பாதிப்பு இருக்கும். பொருள் இழப்பு இருந்தால் உயிர் காரகத்துவத்தால் நன்மை கிடைக்காது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை பஞ்சாமிர்தத்தால் அபிசேகம் செய்து சிவனை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு சூரியன் தொழில் ஸ்தான அதிபதி. சுய ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம் பெற்று சுய சாரம் பெறுவது, சுப கிரக சம்பந்தம் பெறுவது உயர்வான கவுரவமான தொழில் யோகத்தை தரும். சூரியன் பலம் பெற்றால் அரசு உத்தியோகம், அரசியல் ஆதாயம் உண்டு. தொழில் மூலம் மிக உயர்ந்த உன்னத நிலையை அடைவார்கள். புகழ், அதிகாரம், கவுரவப் பதவிகள் தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அரசின் டெண்டர், காண்டிரக்ட் போன்றவற்றில் அதிக லாபம் உண்டு. கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான்.

சூரியன் பலம் குறைந்தால் உதவி, முன்னேறு வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்போது அதனை சரியாக பயன்படுத்த தெரியாது அல்லது பயன்படுத்த முடியாது. நிலையான ஒரு தொழில் செய்ய மாட்டார்கள். பல தொழில் செய்து பண விரயத்தையும், நஷ்டத்தையும் சந்திப்பவர்கள். கர்மம் செய்ய வாரிசுகள் இருக்க மாட்டார்கள்.

பரிகாரம்: ஞாயிற்று கிழமை சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்கு சூரியன் பாக்கிய அதிபதி. இவர்கள் ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம், சுய சாரம் பெறுவது, சுப கிரக சம்பந்தம் பெறுவது உயர்வான உன்னதமான பாக்கிய பலனைத் தரும்.சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து கவுரவத்துடன் வாழ்வார்கள். இவர்களுடைய முன்னோர்கள் மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த பண்ணை யாளர்களாக இருப்பார்கள். தாய்வழி, தந்தை வழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தாயும், தந்தையும் பாக்கியவான்கள். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.தாய், தந்தை வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை உண்டு. தந்தை தந்தை வழி முன்னோர்களின் நல்லாசிகள் தொடர்ந்து கிடைக்கும். குலத் தொழிலில் வெற்றி உண்டாகும். வெளிநாட்டு வாழ்க்கை, வெளிநாட்டு வியாபாரத்தில் விருப்பம் இருக்கும். தீர்த்த யாத்திரை செல்லுதல், தானதர்மம் செய்வதில் ஆர்வம் மிகுந்தவர்.

சுய ஜாதகத்தில் சூரியன் பலம் குறைந்தால் பித்ருக் கடன் செலுத்த முடியாது. குடும்பத்தில் துர்மரண பாதிப்பு இருக்கும். தந்தைக்கு முன்னேற்றம் குறையும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு குறையும்.

பரிகாரம்: சூரியன் பலம் குறைந்தவர்கள் அமாவாசை நாட்களில் முறையான முன்னோர் வழிபாடு செய்து வர முத்தாய்ப்பான முன்னேற்றம் தேடி வரும்.

மகரம்

மகர ராசிக்கு சூரியன் அஷ்டமாதிபதி என்பதால் சுப வலுப்பெற்றால் விபரீத ராஜ யோகத்தை அனுபவிப்பார்கள். வெளிநாட்டு வாழ்க்கையை, விரும்புவார்கள். அசுப வலுப்பெற்றால் விபத்து கண்டம், அறுவை சிகிச்சை, அவமானம் போன்ற பாதிப்பு இருக்கும். இவர்கள் யாரிடமும் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது. இவர்கள் கடன் வாங்கினால் கடனை திருப்பி செலுத்துவது கடினம். ஜாமீன் போடக்கூடாது.

பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை இளநீர் அபிசேகம் செய்து சிவனை வழிபட வேண்டும்.


கும்பம்

கும்ப ராசிக்கு சூரியன் ஏழாம் அதிபதி. மாரகாதிபதி. சூரிய தசை காலத்தில் பாதிப்பு அதிகமாகும். சூரிய புத்தி காலங்களில் குறைவான பாதிப்பு உண்டு. அதே நேரத்தில் சூரியன் மிக பலவீனமாக இருந்தால், அசுப கிரக சம்பந்தம் பெற்றால் திருமணம் தடைபடும். திருமண வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் அசவுகரியம் உண்டாகும்.

பரிகாரம்: கும்ப ராசியினர் வில்வ அர்ச்சனை செய்து சிவனை வழிபட சூரிய தோஷம் விலகும்.

மீனம்

மீன ராசிக்கு சூரியன் ஆறாம் அதிபதி. ஆறாம் அதிபதி வலுத்தால் கடன், நோய், எதிரி தொல்லை இருக்கும். ஆறாம் அதிபதி வலுக் குறைந்தால் தேவைக்கு கடன் கிடைக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எதிரிகளை வெல்லும் தைரியம் இருக்காது. சூரியன் 8,12ல் நின்றால் ஒரளவு சுப பலன் உண்டாகும். ஒரு மறைவுஸ்தான அதிபதி இன்னொரு மறைவு ஸ்தானத்தில் அமர்வதால் விபரீத ராஜ யோகம் ஏற்படும். எனினும் மீன லக்னத்திற்கு சூரிய தசை வராத வரை பெரிய பாதிப்பு இருக்காது.

பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை விபூதி அபிசேகம் செய்து சிவனை வழிபடவும். பொதுவாக ஒளி கிரகமான சூரியன் மறைவு ஸ்தானத்தில் நிற்பதும் அசுப கிரக சம்பந்தம் பெறுவதும் சிறப்பல்ல. பாதிப்பு உள்ளவர்கள் உரிய வழிபாட்டு முறையை கடை பிடிப்பது நல்லது.

Tags:    

Similar News