சிறப்புக் கட்டுரைகள்

கர்மாவைப் போக்கும் பிராணாயாமம்

Published On 2024-05-04 11:18 GMT   |   Update On 2024-05-04 11:18 GMT
  • சில விஷயங்களை நாம் தியாகம் செய்து தான் ஆக வேண்டும்.
  • நாம் தொடங்கும் செயல் நமக்கு எதிர்மறையாக இருக்குமென்றால் நமக்கு முதலிலேயே உள்ளிருந்து சமிக்கைகள் வரும்.

அன்பார்ந்த வாசகர்களே, ஞான வாழ்க்கை வாழ்வதற்கு துன்பத்தை நீக்கி இன்பத்தோடு வாழ ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று பார்த்தோம். அதற்கு துன்பம் தராத இன்பம் புறத்தே தேடினால் கிடைக்காது. அது நமக்கு உள்ளே உள்ளது.

அதற்கு சில விஷயங்களை நாம் தியாகம் செய்து தான் ஆக வேண்டும். அது என்ன என்றால் எதிர்பார்ப்பு, நிபந்தனை, ஒப்பிட்டு பார்த்தல் ஆகிய மூன்றையும் நாம் விட்டுவிட வேண்டும். இந்த மூன்றும் நம்மிடம் இருப்பதால் தான் நம் வாழ்வில் நடக்க வேண்டியது நடக்காத போது மன அழுத்தம் ஏற்பட்டு, மூச்சின் எண்ணிக்கை மாறுவதால் தான் விதி நம் வாழ்வில் விளையாடி நமது ஆயுளை குறைக்கிறது.

எனவே நாம் யாருக்கும் நிபந்தனை விதிக்க கூடாது. ஏன் நமக்கு நாமே கூட நிபந்தனை விதித்து கொள்ளக் கூடாது. அந்த நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தால் மூச்சின் நீளம் மாறுவது மட்டும் அல்லாமல், சூரிய, சந்திர நாடியை மாறி மாறி வேகமாக இயங்க வைக்கும்.

நாம் தினமும் காலை எழுந்தவுடன் நாடி சுத்தி பிராணாயாமம் செய்யும் போது மனம் ஆனது அமைதி நிலைக்கு செல்கிறது, அதனால் அன்று முழுவதும் நமது செயல்கள் அனைத்தும் நன்மை தரக் கூடியதாக இருக்கும்.

மனதின் அலைசுழல் வேகம் ஆனது மூச்சின் எண்ணிக்கையை பொறுத்து அமைகிறது. மூச்சின் எண்ணிக்கை நமது ஆயுளை தீர்மானிக்கிறது. இதை உணர்ந்த மகான்கள் முதலில் மனதை அடக்க வேண்டும் என்றார்கள். அப்படி செய்தால் மூச்சு ஒடுங்கும் என்று கூறினார்கள்.

ஆனால் மனதை அடக்க முடியவில்லை. எனவே, மூச்சை குறைத்தால் (எண்ணிக்கை) மனம் அடங்கும் என்றார்கள். இதற்கு தான் பிராணாயாமம் அவசியம் ஆகிறது. அப்படி செய்து மேற்சொன்ன மூன்றையும் விட்டுவிட்டால், நம் வாழ்வில் நடக்கின்ற எந்த ஒன்றுக்கும் கேள்வியாக உள்ளவரும், பதிலாக உள்ளவரும் அவரே என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அது எப்படி என்றால், எதை எல்லாம் வைத்து நம்மை நாம் அடையாளம் கண்டு கொண்டோமோ அதை எல்லாம் விட்டுவிட்டால், நாம் உணரலாம். அதற்கு நாம் புலன்கள் கடந்த நிலையிலே கேட்டல், பார்த்தல், தொகுத்தல், நுகர்தல், உண்ணுதல், செல்லுதல், உறங்குதல், சுவாசித்தல். இவற்றில் நாம் ஈடுபட்டு இருந்தாலும், உண்மையிலேயே நாம் ஒன்றும் செய்யவில்லை. அந்த உணர்வு வந்தால் புலன்கள் மட்டுமே இயங்கும். ஏனென்றால் நாம் அதிலிருந்து வேறுபட்டவர். இதுவே ஆத்மாவின் நிலை. இதற்கு மூச்சு பிறக்கின்ற இடத்திற்கு செல்ல வேண்டும். இதற்கு தான் நாடி சுத்தி பிராணாயாமம் செய்ய வேண்டும். சரி, இப்போது நாடி சுத்தி பிராணாயாமத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்..

அதிகாலையில் எழுந்தவுடன் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும். ஏனென்றால் அதிகாலை 4.30 மணி முதல் காலை 7.00 மணி வரை வான் காந்த ஆற்றல் தூய்மையாக இருக்கும்.

முதலில் பிராணாயாமம் செய்வதற்கு முன்னால், நமது நாசியில் உள்ள தடைகளை சரி செய்ய வேண்டும்.

நிலை 1 - வலது ஆள்காட்டி விரலால் வலது நாசியை மூடி, இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து இடது நாசி வழியாகவே மெதுவாக வெளிவிட வேண்டும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.

நிலை 2 - இடது ஆள்காட்டி விரலால் இடது நாசியை மூடி, வலது நாசி வழியாக மூச்சை உள்ளே இழுத்து, அதே வலது நாசி வழியாகவே மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.

நிலை 3 - இரு கைகளையும் ஒன்றாக கோர்த்துக் கொண்டு இரண்டு (வலது, இடது) நாசிகள் வழியாகவும் மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக வெளிவிட வேண்டும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.

இந்த மூன்று நிலைகளிலும் மொத்தம் 30 முறை மூச்சை மெதுவாக உள் இழுத்து மெதுவாக வெளிவிட்டவுடன், ஒரு நிமிடம் கண்கள் மூடிய நிலையிலேயே உடலை கவனிக்க வேண்டும். இப்போது மூச்சு குழாயில் உள்ள தூசுகள், அடைப்புகள் எல்லாம் சரியாகி மூச்சு சீராக ஓடுவதை கவனிக்க வேண்டும். பிறகு இப்போது நாடி சுத்தி பிராணாயாமத்தை தொடங்க வேண்டும்.

அமர்வு நிலை 1: சுக ஆசனம், வஜ்ராசனம், இரண்டு நிலைகளிலும் அமர முடியாதவர்கள், நாற்காலியில் அமர்ந்து கொள்ளலாம். கீழே விரிப்பு இருக்க வேண்டும்.

மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

அமர்வு நிலை 2: தலை, கழுத்து, முதுகுத்தண்டு ஒரே நேர் கோட்டில் இருக்குமாறு அமர்ந்து கொள்ளவும்.

அமர்வு நிலை 3: இடது கை சின் முத்திரையில் இருக்க வேண்டும். அதாவது கட்டை விரல், ஆள்காட்டி விரல்களின் நுனிகளை மெதுவாக அழுத்தி கொண்டு மற்ற மூன்று விரல்கள் நேராக கீழ் நோக்கி இருக்க வேண்டும்.

அமர்வு நிலை 4: வலது கை நாசிகா முத்திரையில் இருக்க வேண்டும். அதாவது ஆள் காட்டி விரல், நடுவிரல் இரண்டும் உள் நோக்கி மடக்கி கொள்ள வேண்டும், மற்ற மூன்று விரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

நிலை 5: இடது கை சின் முத்திரையில் தொடை மீது வைத்து கொண்டு, வலது கையில் நாசிகா முத்திரையில் முதலில் வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி கொண்டு இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். நம்மால் முடிந்த அளவு இழுத்தவுடன், வலது கை மோதிர விரலால் இடது நாசியை மூடி கொண்டு, வலது நாசி பக்கம் உள்ள கட்டை விரலை எடுத்து விட்டு, இப்போது இடது நாசியில் இழுத்த மூச்சை வலது நாசி வழியாக மெதுவாக வெளிவிட வேண்டும்.

நிலை 6: மூச்சை வெளியிட்ட வலது நாசி வழியாகவே மெதுவாக நம்மால் முடிந்த அளவு மூச்சை இழுத்தவுடன் வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி கொண்டு இடது நாசியில் உள்ள மோதிர விரலை எடுத்துவிட்டு மெதுவாக வெளிவிட வேண்டும்.

இப்படி இடது பக்கம் மூச்சை இழுத்து வலது பக்கம் வெளிவிட்டு, வலது பக்கம் மூச்சை உள் இழுத்து இடது பக்கம் வெளிவிடுதல் என்பது ஒரு பிராணாயாமம் ஆகும். அதாவது இரண்டு தடவை மூச்சை இழுத்து விடுவது ஒரு பிராணாயாமம்.

நிலை 7: இதே போன்று ஐந்து முறை செய்ய வேண்டும். அதாவது 5 பிராணாயாமம் செய்த பிறகு, இரு கைகளையும் ஒன்றாக கோர்த்து கொண்டு மூச்சை மெதுவாக உள் இழுத்து வெளிவிட்ட படி உடலையே கவனிக்க வேண்டும். இவ்வாறு ஒரு நிமிடம் வரை அந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.

மறுபடியும் 5 முறை நாடி சுத்தி பிராணாயாமம் செய்ய வேண்டும். மறுபடியும் ஒரு நிமிடம் உடலையே கவனிக்க வேண்டும். இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும். அதாவது ஒரு 10-15 நிமிடங்கள் மெதுவாக இப்படி செய்து விட்டு கண்கள் மெதுவாக திறந்த பிறகு நமது நித்திய கடமைகளை செய்ய துவங்கலாம்.

இந்த நிலை நாள் முழுவதும் நமது மனம் ஆனது அமைதி நிலை என்று சொல்லுகின்ற ஆல்பா நிலையில் இருப்பதற்கு சமம். அதாவது நாம் எந்த ஒரு செயலை செய்தாலும், அதன் விளைவு என்பது அந்த செயல் முடிந்த பிறகு தான் தெரியும். விளைவானது நன்மையாக இருந்தால் நான் செய்தேன் என்று சொல்லுவோம். விளைவில் ஏதாவது தீமை வந்துவிட்டால், நாம் பழியை மற்றவர்கள் மீது போட்டு விடுவோம்.

ஆனால் இந்த பிராணாயமம் பயிற்சியை நாம் தொடர்ந்து செய்து விட்டால், நாம் எந்த ஒரு செயலை செய்தாலும், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது, நமக்கு முதலிலேயே தெரிந்து விடும். இதை தான் விளைவுகள் அறிந்த விழிப்பு நிலை என்கிறோம். இந்த நிலையில் நமக்கு வரும் விளைவு நன்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே நாம் அந்த செயலை செய்வோம். நாம் தொடங்கும் செயல் நமக்கு எதிர்மறையாக இருக்குமென்றால் நமக்கு முதலிலேயே உள்ளிருந்து சமிக்கைகள் வரும். உடனே அந்த செயலை நாம் செய்ய மாட்டோம்.

இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால்,நமக்கு வரும் எந்த ஒரு விளைவும் ஒன்று நாம் செய்த செயல் அல்லது நமது முன்னோர்கள் செய்த செயல்களாக இருக்கும். தினமும் இந்த பயிற்சிக்கு பிறகு நமது செயல்களை செய்வதால், நாம் புதியதாக எந்த விதமான கர்ம வினை பதிவுகளையும் ஏற்று கொள்வதற்கு வாய்ப்பு இருக்காது. ஆனால் நமக்குள் ஏற்கெனவே பதிவுகள் எந்த நேரத்திலே விதியாக எழுச்சி பெறுமோ அந்த நேரத்திலே எழுச்சி பெறும்.

ஆனால் நாம் தினமும் நல்ல செயல்களையே செய்து வந்தால் விதியின் மூலமாக வருகின்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

எனவே இந்த நாடி சுத்தி பிராணாயாமம் என்பது நம் விதியை மதியால் மாற்றும் வித்தை என்பதை நாம் தெரிந்து கொண்டு தினமும் செய்வோமேயானால் காலத்தை நம்மால் வெல்ல முடியும். இதன் மூலமாக நமது ஆயுள் நீளும். நமது ஆயுள் நீளும் போது, நமது கர்மாவை நாமே குறைந்த தாக்கத்துடன் அனுபவித்து விட்டு நமது அடுத்த சந்ததிகளுக்கு எந்தவித பாவ பதிவுகளையும் சேர்த்து வைக்காமல் நல்ல பதிவுகளை மட்டும் வைத்துவிட்டு செல்வோம்.

எனவே ஆயுள் விருத்திக்கு மட்டும் அல்ல, பாவ பதிவுகளையும் போக்கும் அற்புத பொக்கிஷம் தான் இந்த பயிற்சி. இனி எந்த எந்த வயதில் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தால் எவ்வளவு காலம் ஆயுள் கூட்டி கொள்ளலாம் என்பதை பற்றி ஆராய்ச்சி செய்வோம்.

போன்: 9444234348

Tags:    

Similar News