இந்தியா

ராகுல் காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கு - ராகுல் காந்தியிடம் 40 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை

Published On 2022-06-20 22:42 GMT   |   Update On 2022-06-20 22:42 GMT
  • ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ராகுல் காந்தியிடம் 40மணி நேரத்துக்கும் அதிகமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பொருளாளர் பவன்குமார் பன்சால், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்த வழக்கில் கடந்த 13-ம் தேதி ராகுலும், வரும் 23-ம் தேதி சோனியா காந்தியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் அப்துல் கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று 4-வது நாளாக ராகுல் காந்தியிடம் விசாரணை நடந்தது. அப்பகுதி முழுதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்தது. போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

கடந்த 4 நாளாக ராகுல் காந்தியிடம் இதுவரை 40 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News