செய்திகள்
தினேஷ் குண்டுராவ்

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று

Published On 2020-09-28 00:32 GMT   |   Update On 2020-09-28 00:47 GMT
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை தொடர்ந்து கொரோனா தாக்கி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் என 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.வும், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் பெங்களூரு காந்திநகர் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் என்ற முறையில் தினேஷ் குண்டுராவ், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதை முடித்து நேற்று அவர் பெங்களூருவுக்கு திரும்பினார். அப்போது அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் டாக்டர்களின் அறிவுரையின்படி வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக, தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டாக்டரின் அறிவுரைகளின் பேரில் 10 நாட்கள் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற உள்ளேன்.

கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் வீட்டு தனிமையில் இருங்கள். உங்களின் ஆசீர்வாதத்தால் விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்புவேன் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News