செய்திகள்
டி.கே.சிவக்குமார்

காங்கிரசின் உபரி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவா?: டி.கே.சிவக்குமார் பேட்டி

Published On 2020-06-08 04:03 GMT   |   Update On 2020-06-08 04:03 GMT
மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசின் உபரி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கிறார்களா என்பது குறித்து டி.கே.சிவக்குமார் பதிலளித்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று, துப்புரவு தொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்கினார். அவர் கட்சி தலைவராக பதவி ஏற்பது தொடர்பான பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மாநிலங்களவையில் காலியாகும் 4 இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. எங்கள் கட்சிக்கு உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் ஒருவர் வெற்றி பெற முடியும். அந்த இடத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எங்கள் கட்சி சார்பில் 2-வது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் இல்லை.

எங்கள் கட்சியில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாக்களிப்பவர்கள் போக மீதமுள்ள எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளை பா.ஜனதாவுக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. இது உண்மைக்கு புறம்பானது. நாங்கள் மதசார்பற்ற தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். மதவாத கட்சியான பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் பேச்சுக்கே இடமில்லை.

எங்கள் கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி நாங்கள் நடப்போம். நாளை (அதாவது இன்று) மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு தாக்கல் செய்கிறார். காலை 9 மணிக்கு எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் சேருகிறார்கள். குறிப்பிட்ட சில எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வர வேண்டும் என்று கூறியுள்ளோம். தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.

ஊரடங்கை முழுமையாக தளர்த்த வேண்டும். பொருளாதார ரீதியாக நாம் முன்னேற்றம் அடைய வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கர்நாடகத்தின் பங்கு 30 சதவீதம். அதனால் கர்நாடகத்தில் பொருளாதார நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற வேண்டியது அவசியம். நான் வருகிற 14-ந் தேதி கட்சி தலைவராக பதவி ஏற்க திட்டமிட்டுள்ளேன். இதற்கு அனுமதி கேட்டுள்ளேன். பெங்களூருவில் 150 பேர் மட்டும் சேருவோம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News