என் மலர்
நீங்கள் தேடியது "DK Shivakumar"
- பெங்களூருவில் 15-ந் தேதி ஒரு லட்சம் பேர் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலம் நடத்த முடிவு.
- 75-வது சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம்.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
75-வது சுதந்திர தினத்தையொட்டி கர்நாடக காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. நான் பெங்களூருவில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. இல்லாத தொகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து இந்த நடைபயணம் குறித்து கலந்துரையாடி வருகிறேன்.
மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். வார்டு மறுவரையறை தொடர்பாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்சபேனைகள் வந்தன. அந்த ஆட்சேபனைகளை அரசு கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை.
பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி ஒரு லட்சம் பேர் தேசிய கொடியை கையில் ஏந்தி ஊர்வலம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஜனநாயகம் இருந்திருக்காவிட்டால் குமாரசாமி, எடியூரப்பா போன்றோர் முதல்-மந்திரி பதவிக்கு வந்திருக்க முடியாது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
- கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- ஆட்சியை பிடிக்க வாயை மூடிக்கொண்டு ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.
பெங்களூரு :
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒக்கலிக சமுதாய மக்கள் நான் முதல்-மந்திரியாக ஆதரவு அளிக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறி இருந்தாா். இதனால் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரசில் உள்ள அதிருப்தியாளர்கள் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பேசி வருகின்றனர்.
குறிப்பாக முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான், ஒக்கலிக சமுதாயத்தின் மூலம் டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரியாக விரும்பினால், அதை விட முஸ்லிம்கள் ஆதரவு காங்கிரசுக்கு அதிகம் இருப்பதால், நான் கூட முதல்-மந்திரி ஆகலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
வாயை மூடிக்கொண்டு...
எனது தகுதிக்கு சமமானவர்கள் பேசுவது குறித்து மட்டுமே பேசுவேன். எனது தகுதிக்கு கீழ் இருப்பவர்கள் கூறும் கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. தற்போது மாநிலத்தில் முதல்-மந்திரி பதவி காலியாக இல்லை. தனிப்பட்ட நபரின் துதி பாடுவதை கைவிட்டு, காங்கிரஸ் கட்சி பற்றி மட்டும் பேசும்படி தொடர்ந்து கூறி வருகிறேன். முதலில் காங்கிரஸ் கட்சியை கர்நாடகத்தில் ஆட்சியில் அமர்த்த வேண்டும். இதற்காக வாயை மூடிக் கொண்டு ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். கட்சியில் உள்ள அனைவருக்கும் இது பொருந்தும்.
கட்சியை வளர்க்க வேண்டும்
காங்கிரஸ் மீது உண்மையானவர்களாக இருந்தால், முதலில் கட்சியை வளர்க்க முன்வர வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு அதிக மக்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். தங்களது சமுதாயத்தையும், சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்தி, காங்கிரசை ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும். 224 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்கள் முதல்-மந்திரி பதவியை எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. முஸ்லிம்களுக்கு எதிராக பிரமோத் முத்தாலிக் தொடர்ந்து பேசி வருகிறார்.
இது அவருடைய கருத்து இல்லை. பா.ஜனதாவினர் கூறுவதை பிரமோத் முத்தாலிக் பேசி வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைத்து தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவது முதல்-மந்திரியின் கடமையாகும். பழைய மைசூரு பகுதிகளில் வன்முறையை தூண்டிவிடும் விதமாக பிரமோத் முத்தாலிக் மற்றும் பா.ஜனதாவினர் பேசி வருகிறாா்கள். சோனியா காந்தியை பாதுகாக்க மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும்படி காங்கிரசாருக்கு அறிவுறுத்தி உள்ளேன். அதன்படி, எந்த பிரச்சினையும் இன்றி காங்கிரசார் போராட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
- மத்திய பா.ஜனதா அரசு உணவு பொருட்களுக்கு 5 சதவீத வரி விதித்துள்ளது.
- பெரிய நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் ஜி.எஸ்.டி. வரி வளையத்தில் இருந்து வெளியே இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய பா.ஜனதா அரசு அவற்றை மாற்றி உணவு பொருட்களுக்கும் 5 சதவீத வரி விதித்துள்ளது.
இதனால் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்காது. அதனால் உணவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வாியை வாபஸ் பெற வேண்டும். இதற்கு பதிலாக மத்திய அரசு வரி கசிவு ஏற்படும் பகுதிகளில் கவனம் செலுத்தி அதை தடுக்க வேண்டும். பணக்காரர்களுக்கு வரி விதிப்பதை விட்டுவிட்டு ஏழைகள் மீது வரியை விதிப்பது ஏற்புடையது அல்ல.
பெரிய நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 5 சதவீத வரியை நுகர்வோரிடம் வசூலிக்க கூடாது என்று கூறி இருப்பதாக முதல்-மந்திரி சொல்கிறார். ஆனால் எந்த நிறுவனமும் இதை ஏற்றுக்கொள்ளாது. முதல்-மந்திரி சொல்வது பொய்யான தகவல். மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் அவர் அவவாறு கூறுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆட்சி உண்மையான பா.ஜனதாவால் நடைபெறவில்லை.
- உள்கட்சி பிரச்சினையில் பா.ஜனதாவில் பயம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் நடைபெறுவது பா.ஜனதா ஆட்சி அல்ல. அது பா.ஜனதா கூட்டணி ஆட்சி. இந்த ஆட்சியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் இருந்து அக்கட்சிக்கு சென்ற எம்.எல்.ஏ.க்களின் பங்கு 64 சதவீதமாக உள்ளது.
இதில் காங்கிரசின் பங்கு 30 சதவீதமும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் பங்கு 34 சதவீதமாகவும் உள்ளது. பசவராஜ் பொம்மை வேறு கட்சியில் இருந்து வந்தவர். இந்த ஆட்சி உண்மையான பா.ஜனதாவால் நடைபெறவில்லை.
ஆளுங்கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பிற கட்சிகளில் இருந்து சென்றவர்களுக்கு பதவி வழங்கப்பட்டதால் நீண்ட காலமாக பா.ஜனதாவில் இருந்தவர்கள் தாங்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்பதாக நினைக்கிறார்கள்.
உள்கட்சி பிரச்சினையில் பா.ஜனதாவில் பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அக்கட்சியின் தேசிய தலைவர்கள் அடிக்கடி கர்நாடகம் வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
- நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது.
- நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் யாருடைய பிறந்த நாளையும் கொண்டாட விரும்பவில்லை. எனது ஆதரவாளர்கள் சிலர் டி.கே.சிவக்குமார் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று சொல்கிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். நான் எனது பிறந்த நாளை மிக எளிமையாக தான் கொண்டாடியுள்ளேன். சித்தராமையாவின் 75-வது பிறந்த நாளையொட்டி தாவணகெரேயில் சித்தராமோத்சவா விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அதில் நான் கலந்து கொள்வேன். ஊடகங்கள் இந்த விஷயத்தில் எனக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக தேவை இல்லாமல் சர்ச்சையை கிளப்புகின்றன. இந்த விஷயத்தில் பா.ஜனதா தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கின்றன.
நான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற போதே தனிப்பட்ட முறையில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம், கட்சியை புகழ்ந்து பேசுங்கள் என்று கூறினேன். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ். அதனால் நாங்கள் சுதந்திர தின பவள விழாவை கொண்டாடுகிறோம்.
எடியூரப்பாவை எங்கள் கட்சியை சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து பேசியுள்ளார். தனிப்பட்ட முறையில் கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவது வழக்கம். இதற்கு வேறு அர்த்தமும் கற்பிக்க தேவை இல்லை. இன்னும் 15 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி தான் இருக்கும் என்று மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார். 15 ஆண்டுகள் எதற்கு, நீண்ட காலம் அவர்களே ஆட்சியில் இருக்கட்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
- சோனியா காந்தி 23-ந்தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது.
- எல்லாவற்றையும் எதிர்கொள்ள ராகுல் காந்தி தயாராக உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு விசாரணை நடத்துகிறது. எங்கள் கட்சி தலைவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்.
கடினமான நேரத்தில் அவர்களுக்கு தைரியம் கூற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் டெல்லி வந்துள்ளேன். எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களை டெல்லி வரும்படி உத்தரவிட்டுள்ளோம். ராகுல் காந்தியிடம் 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன?. இதில் சதித்திட்டம் அடங்கியுள்ளது. எல்லாவற்றையும் எதிர்கொள்ள ராகுல் காந்தி தயாராக உள்ளார்.
சோனியா காந்தி வருகிற 23-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. விசாரணையை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
- பிரதமர் மோடி பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் குறித்து பதிலளிக்க வேண்டும்.
- அக்னிபாத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
பெங்களூரு :
கா்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
"மாணவர்கள் பயங்கரவாதிகளா? பாடத்திட்டங்களை திருத்தியதற்கு எதிராக மடாதிபதிகள் குரல் கொடுக்க வேண்டும். அரசு ஒன்றும் செய்ய முடியாது. புத்தர், பசவண்ணர், குவெம்பு அம்பேத்கர், நாராயணகுரு ஆகிய மகான்களுக்கு அநியாயம் ஏற்பட்டுள்ளது. மறைந்த சிவக்குமார சுவாமி, பாலகங்காதரநாத சுவாமி உள்ளிட்டோருக்கு அவமானம் ஏற்படும்போது, லிங்காயத், ஒக்கலிகர் சங்கங்கள் குரல் எழுப்ப வேண்டும். ஆனால் அந்த சங்கங்கள் மவுனமாக உள்ளன.
பிரதமர் மோடி கர்நாடகம் வருகிறார். மைசூருவில் நடைபெறும் யோகா தின விழாவில் கலந்து கொள்கிறார். இதனால் அவர் செல்லும் பாதையில் உள்ள கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் பயங்கரவாதிகளா? கர்நாடக மாணவர்களிடம் வன்முறை கலாச்சாரம் கிடையாது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் 17 வயது இளம் இளைஞர்களை 4 ஆண்டுகளுக்கு வீரர்களாக பயன்படுத்தி கொண்டு பின்னர் வெளியே அனுப்புகிறார்கள்.
அவர்கள் காவலாளிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமா? இது ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அவமானம். இதை நியாயப்படுத்தும் மந்திரிகள் தங்களின் குழந்தைகளை ராணுவத்தில் சேர்ப்பார்களா? அவர்களின் குழந்தைகள் டாக்டர்கள், என்ஜினீயர்கள் ஆக வேண்டும். ஏழைகளின் குழந்தைகள் காவலாளிகள் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டுமா? இந்த அக்னிபாத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இளைஞர்கள் நமது பலம். கர்நாடகம் வரும் பிரதமர் மோடி பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் குறித்து பதிலளிக்க வேண்டும்."
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
சட்டசபை இடைத்தேர்தல் முடிவு குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிந்தகியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், ஹனகல் தொகுதியில் பா.ஜனதாவும் வெற்றி பெற்றது. அந்த தொகுதிகளுக்கு தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் சிந்தகியில் பா.ஜனதாவும், ஹனகல் தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா வெற்றி பெற்ற தொகுதியை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.
கடந்த சட்டசபை தேர்தலில் சிந்தகியில் காங்கிரசுக்கு 3-வது இடம் தான் கிடைத்தது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. கர்நாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம்.
மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பா.ஜனதா ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் அனைவரும் கோபத்தில் உள்ளனர். அதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவே சாட்சி. ஹனகல் தொகுதியில் சீனிவாஸ் மானே கடந்த முறை 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த முறை அவர் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசு உள்ளது. அத்துடன் ஹனகல் தொகுதி முதல்-மந்திரியின் சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது. அனைத்து வகையிலும் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் இருந்தது. பா.ஜனதா ஆட்சியில் உள்ள எங்களின் நண்பர்கள் பைகளில் பணத்தை நிரப்பி கொண்டு சென்று வாக்காளர்களுக்கு வினியோகம் செய்தனர். ஆனாலும் ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி பதவி மீது ஆசை இல்லை என்று சொல்வதற்கு நான் சன்னியாசி அல்ல. எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன். அதன் முடிவை இறைவன் பார்த்துக்கொள்வார். கடந்த ஆண்டு என்னுடைய பிறந்தநாளன்று சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது.

பா.ஜனதாவினர் என்னை இலக்காக வைத்து செயல்படுகிறார்கள். அவர்கள் தங்களின் வேலையை செய்கிறார்கள். இதை தவறு என்று நான் சொல்லமாட்டேன். மாங்காய் பழமானால் மட்டுமே, அதை கல்லால் அடித்து விழவைக்க முடியும்.
சித்தராமையா பற்றி எச்.விஸ்வநாத் கூறிய கருத்தால், கூட்டணியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. ராகுல் காந்தியின் வழிகாட்டுதல்படி நானும், சித்தராமையாவும் செயல்படுகிறோம். மீண்டும் முதல்-மந்திரியாவேன் என்று எடியூரப்பா சொல்கிறார். அதுபோல் ஒன்றும் நடைபெறாது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
சென்னை:
மேகதாது அணை பிரச்சினை பற்றி “தந்தி டி.வி.” சார்பில் கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி சிவக்குமாருடன் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- கர்நாடகாவிற்கு மேகதாது அணை ஏன் தேவை?
பதில்:- இது கர்நாடகாவுக்கு அல்ல. காவேரி இந்த நாட்டின் நதி. இந்த வருடம், கொடுக்க வேண்டிய 177 டி.எம்.சியை தாண்டி, கிட்டத்தட்ட 450 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளது. நாங்களும் பயன்படுத்த முடியவில்லை, தமிழ்நாடும் பயன்படுத்த முடியவில்லை. வீணாக கடலுக்கு சென்றுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு தான் அதிகம் உதவும். தமிழக விவசாயிகளை பாதுகாக்கவும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவும் தான் இந்த அணை கட்டப்படுகிறது.
கேள்வி:- தற்போது கபினி, ஹாரங்கி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் காவிரி ஆணைய கட்டுப்பாட்டில் வருகிறது. நீங்கள் கட்டும் புதிய அணையும் அதன் கட்டுப்பாட்டில் வருமா?
பதில்:- ஆம், நிச்சயமாக. அது அவர்கள் கடமை.

கேள்வி:- கர்நாடகாவில் புதிய அணைகள் கட்டப்படும் போதெல்லாம், தமிழக விவசாயிகளுக்கு அச்சம் ஏற்படுகிறது. விவசாயம் செய்யப்படும் பகுதிகளின் பரப்பளவு குறைந்து விடும் என்ற கவலை எழுகிறது. இப்போது மறுபடியும் ஒரு புதிய அணை பற்றி நீங்கள் பேசும்போது, இந்த அச்சம் மீண்டும் ஏற்படுகிறது.
பதில்:- இல்லை. இதை பற்றி கவலை தேவையில்லை. தமிழகத்திற்கு இந்த அணை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த அணை தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும்.
கேள்வி:- மேகதாது திட்ட வரைவு நகலில், பெங்களூர் நகருக்கு 5 டி.எம்.சி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 டி.எம்.சி எடுத்து கொண்டிருக்கும்போது, இந்த 5 டி.எம்.சி கூடுதலாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதா?
பதில்:- இல்லை அப்படி எடுக்க முடியாது. ஏற்கனவே என்ன ஒதுக்கப்பட்டுள்ளதோ அதைதான் எடுக்க முடியும்.
கேள்வி:- அப்போது இந்த 5 டி.எம்.சி என்பது ஒதுக்கப்பட்ட 14 டி.எம்.சி நீரின் ஒரு பகுதி தானே ?
பதில்:- ஆம், இது அனுமதிக்கப்பட்ட நீரின் ஒரு பகுதி தான்.
கேள்வி:- உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுங்கள் என்று சொன்னபோதெல்லாம் அதை கேட்க கூடாது என்று தீர்மானம் போட்டீர்கள்... இப்போது உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று சொல்வது முரணாக இல்லையா?
பதில்:- ஆதரவு இல்லை. எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நினைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #MekedatuDam #DKShivakumar
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு முதல்கட்ட அனுமதி வழங்கியதை அடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கர்நாடக அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது.
இதில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, போக்குவரத்து துறை மந்திரி டி.சி.தம்மண்ணா, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா, முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள் பசவராஜ் பொம்மை, எச்.கே.பட்டீல் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மேகதாது திட்டம் உள்பட கர்நாடக நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“மேகதாது திட்டம் உள்பட கர்நாடகத்தில் நிறைவேற்றப்பட உள்ள பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முக்கியமாக மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை அந்த மாநில அரசு கூட்டியுள்ளது. இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண நாங்கள் விரும்புகிறோம்.
நான் நாளை(அதாவது இன்று) மேகதாதுவுக்கு நேரில் சென்று அணை கட்ட உள்ள இடத்தை பார்வையிட உள்ளேன். என்னுடன் ஊடகத்தினரையும் அழைத்து செல்கிறேன். நீர்ப்பாசனத்திற்காக நாங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தவில்லை. குடிநீர் பயன்பாடு மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்வது தான் இ்தன் நோக்கம். மேகதாது பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் இல்லை.
தமிழகம் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று நான் தமிழகத்தை கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற விவரங்களை தருகிறோம்.

எங்களின் சட்ட நிபுணர் குழுவினர், தமிழகத்தை தொடர்பு கொண்டு பேசுவார்கள். இந்த திட்டம் தமிழகத்திற்கு உதவும். எங்களுக்கு இதில் இருந்து மின்சாரம் கிடைக்கும். அந்த நீரை நாங்கள் எடுத்துக்கொள்ள மாட்டோம். இது எங்கள் மாநிலத்தின் உரிமை. இந்த திட்டத்தை எங்களின் சுயநலத்திற்காக மட்டும் செயல்படுத்தவில்லை.
புதிய அணை கட்டுவதால் சுமார் 5 ஆயிரம் எக்டேர் நிலம் நீரில் மூழ்கும். இதில் பெரும்பகுதி வனப்பகுதியாக இருக்கிறது. நடப்பு ஆண்டில் 395 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளோம். 64 டி.எம்.சி. நீரை தேக்கும் அளவுக்கு புதிய அணை கட்டப்படுகிறது. இந்த அணை நீரை நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தவே மாட்டோம்.
கர்நாடக எல்லைக்குள் எங்கள் நிலத்தில் தான் அணை கட்டுகிறோம். நிலம், இதற்கு செலவிடப்படும் நிதி அனைத்தும் கர்நாடகத்திற்கு சொந்தமானது. வேறு எந்த மாநிலம் மீதும் கர்நாடகத்திற்கு விரோதம் இல்லை. அதனால் தமிழகம் ஆதங்கப்பட வேண்டியது இல்லை.
இந்த விஷயத்தில் கர்நாடகம் அரசியல் செய்யவில்லை. இதுகுறித்து முழு விவரங்களையும் தமிழகத்திற்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்த விஷயத்தில் மக்களுக்கு நல்லது செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
இந்த விஷயத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்கு தமிழகம் தயாராக இல்லை என்று அந்த மாநில அமைச்சர் சண்முகம் கூறி இருக்கிறார். எங்களுடன் பேச முடியாது என்று சொன்னால் எப்படி?. நாங்கள் தமிழகத்துடன் தகராறு செய்ய மாட்டோம். இரு மாநிலத்தினரும் சகோதரர்கள். காவிரி நீர் கர்நாடகத்தில் இருந்து தான் தமிழகத்திற்கு செல்ல வேண்டும்.
மகதாயி நதி நீரை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறியுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரை பயன்படுத்திக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணா நடுவர் மன்ற தீர்ப்பு விஷயத்தில் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த தடை ஆணையை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி சட்ட நிபுணர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.”
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார். #MekedatuDam #KarnatakaMinister