செய்திகள்
ஸ்மிருதி இரானி

கற்பழிப்பு சம்பவங்களை அரசியல் ஆயுதமாக ராகுல் பயன்படுத்துகிறார் - தேர்தல் கமிஷனில் பாஜக புகார்

Published On 2019-12-13 14:30 GMT   |   Update On 2019-12-13 14:52 GMT
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கற்பழிப்பு சம்பவங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறார் என தேர்தல் கமிஷனிடம் பாஜக பெண் எம்.பிக்கள் புகார் அளித்துள்ளனர்.
புதுடெல்லி:

ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் நாட்டை உயர்த்தப் போவதாக மோடி தெரிவித்திருந்தார். ஆனால், இன்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் கற்பழிப்புகளால் ‘ரேப் இன் இந்தியா’ என்று சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என பேசியிருந்தார்.
 
இந்த விவகாரம் பாராளுமன்ற மக்களவையில் இன்று மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியது.

இந்தியப் பெண்களை எல்லாம் இழிவுப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட மோசமான கருத்தை தெரிவித்த ராகுல் காந்தி இதற்காக மக்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இப்படிப்பட்ட உறுப்பினர் இந்த அவையில் அமருவதற்கே அருகதையற்றவர் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மத்திய மந்திரியான ஸ்மிருதி இரானி தலைமையிலான பாஜக பெண் எம்.பி.க்கள் இன்று தேர்தல் கமிஷன் அலுவலகம் சென்று புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கற்பழிப்பு சம்பவங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை ராகுல் மீறி வருகிறார். அவர் தெரிவித்த கருத்து இந்திய பெண்களின் மனதை கடுமையாக காயப்படுத்தி உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News