search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EC"

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது.
    • தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுகிறது என அக்கட்சி புகார் அளித்துள்ளது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் வரும் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், தி.மு.க.வினரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுகிறது என இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள புகாரில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் நண்பர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. இந்த சட்டவிரோத செயலில் மத்திய அரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன என நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • முதல்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே ரூ.4 ஆயிரத்து 650 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள நகை, பணம், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • கடந்த 75 ஆண்டுகால மக்களவை தேர்தல் வரலாற்றில், இவ்வளவு பொருட்கள் பிடிபடுவது இதுவே முதல்முறை ஆகும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல், வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகள், அன்றைய தினம் வாக்குப்பதிவை சந்திக்கின்றன.

    கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

    அத்துடன், வாக்காளர்களுக்கு நகை, பணம், இலவச பொருட்கள், மதுபானம் உள்ளிட்ட பொருட்களை கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.

    இதுவரை பிடிபட்ட பொருட்கள் பற்றிய புள்ளி விவரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

    இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்கட்ட தேர்தல் 19-ந் தேதிதான் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே ரூ.4 ஆயிரத்து 650 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள நகை, பணம், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது ரூ.3 ஆயிரத்து 475 கோடி மதிப்புள்ள பொருட்கள்தான் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது, ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அதைவிட அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பிடிபட்டவற்றில், போதைப்பொருட்கள் மற்றும் போதை மருந்துகள் மட்டும் ரூ.2 ஆயிரத்து 69 கோடி மதிப்புடையவை. அவை மொத்த மதிப்பில் 45 சதவீதம் ஆகும். அவற்றை பிடிக்க தேர்தல் கமிஷன் சிறப்பு கவனம் செலுத்தியது.

    ரொக்கப்பணம் மட்டும் ரூ.395 கோடி பிடிபட்டுள்ளது. மதுபானங்களின் மதிப்பு ரூ.489 கோடி ஆகும்.

    மாநிலவாரியாக பார்த்தால், ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் ரூ.778 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பிடிபட்டுள்ளன.

    தேர்தல் கமிஷன் கண்காணிப்பில், கடந்த மார்ச் 1-ந் தேதியில் இருந்து நாள்தோறும் ரூ.100 கோடி மதிப்புடைய பொருட்கள் பிடிபட்டு வருகின்றன.

    இதற்கு முறையான திட்டமிடல், அரசு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு, தொழில்நுட்ப உதவி ஆகியவைதான் காரணங்கள் ஆகும்.

    தேர்தல் பிரசாரத்திலும், தேர்தல் விதிமுறைகளை மீறியதிலும் அரசியல்வாதிகளுக்கு உதவியாக செயல்பட்ட 106 அரசு ஊழியர்கள் மீதும் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

    கடந்த 75 ஆண்டுகால மக்களவை தேர்தல் வரலாற்றில், இவ்வளவு பொருட்கள் பிடிபடுவது இதுவே முதல்முறை ஆகும். லஞ்ச வினியோகம் இல்லாமல், நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் உறுதிப்பாட்டை இது உணர்த்துகிறது.

    ஹெலிகாப்டர்களில் சோதனை நடத்தப்படுவது புதிதல்ல. அதனால், விமான தளங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தளங்களை உன்னிப்பாக கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    வான்மார்க்கமாக பணம், இலவச பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுக்க இச்சோதனைகள் நடத்தப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறிப்பாக பெண்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
    • பெண் வாக்காளர்கள் தங்களின் நெருக்கடியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்கி தங்கள் குடும்பத்தினருடன் வாக்களிக்க அழைப்பிதழ் அனுப்பப்படும்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 27-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது.

    இந்த நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் சதவீதத்தை அதிகரிக்க மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்கு இடையேயான வித்தியாசம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் 13,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை இலக்காகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. பெண் வாக்காளர்கள் தங்களின் நெருக்கடியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்கி தங்கள் குடும்பத்தினருடன் வாக்களிக்கவும், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும் அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும்" என்றார்.

    • அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக சமீபத்தில் டெல்லி மாநகராட்சி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
    • விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றவரின் ஒப்புதலுக்கு பிறகே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மூலம் விளம்பரம் செய்து வருகிறார்கள்.

    ஆனால் இந்த விளம்பர பொருட்களில் அவற்றை அச்சிட்ட அச்சகத்தின் பெயரோ, வெளியீட்டாளரின் பெயரோ இடம்பெறுவதில்லை என்று புகார்கள் எழுந்தன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் கமிஷனிடம் இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதுபற்றி தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களை அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் பெயர் இல்லாமல் வெளியிட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 127ஏ பிரிவு தடை விதிக்கிறது. ஆகவே, அந்த விவரங்கள் இடம்பெற வேண்டும்.

    அப்போதுதான் தேர்தல் பிரசாரத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முடியும். தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்த முடியும். பேனரில் உள்ள கருத்துகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருந்தால், அதற்கான பொறுப்பை சுமத்த முடியும்.

    அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக சமீபத்தில் டெல்லி மாநகராட்சி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஒரு வேட்பாளர் அல்லது கட்சிக்கு ஆதரவாக விளம்பரம் வெளியிடலாம். ஆனால் பிற வேட்பாளருக்கு எதிராக விளம்பரம் வெளியிட தடை உள்ளது.

    விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றவரின் ஒப்புதலுக்கு பிறகே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும். அரசு செலவில், ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஆதரவான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணைய மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு, கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணைய மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சந்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு, கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாநிலங்களை சேர்ந்த 8 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 12 போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியானது. அவர்கள் தங்களது இளைய அதிகாரியிடம் உடனடியாக பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மாற்றப்பட்டவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்க, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும் அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
    • ஜம்மு காஷ்மீரின் முக்கிய தலைவரான குலாம் நபி ஆசாத் அனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஸ்ரீநகர்:

    பாராளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீரில் 3வது கட்டமாக மே 7-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அங்கு முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் , 2022-ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி ஜனநாயக முற்போக்கு விடுதலை என்ற கட்சியை தொடங்கினார்.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் குலாம் நபி ஆசாத் ரஜோரி மாவட்டம் அனந்தநாக் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.

    • விவிபாட் இயந்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியது.
    • இ.வி.எம் இயந்திர குறைபாடுகளை சரிசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.

    சென்னை:

    விவிபாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை மே 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

    இந்நிலையில், இ.வி.எம் இயந்திரத்தில் உள்ள சில குறைபாடுகளை சரிசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக, தி.மு.க. செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்களின் புகாரை யாரும் அலட்சியப்படுத்த கூடாது.
    • அரசியல் கட்சியினரின் வாகனங்கள் அனைத்தையும் கண்டிப்பாக சோதனையிட வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். வேட்பாளருடன் கட்சி நிர்வாகிகளும், தோழமை கட்சியினரும் உடன் சென்று வாக்கு கேட்டு வருகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் 2 வார காலமே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் வாக்குச்சாவடி ஏஜெண்டுகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்று உள்ளன.

    இதனால் பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

     இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் இன்று தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் வருமான வரித்துறை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜி.எஸ்.டி, கலால் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள மாநில செலவினப் பார்வையாளர்களும் பங்கேற்றனர்.

    தமிழ்நாட்டில் இதுவரை 109 கோடிக்கு மேல் பணம், நகை, பொருட்கள் பிடிபட்டு உள்ள நிலையில் பணப்பட்டு வாடாவை தடுக்க சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பறக்கும் படையினர் ஒரே இடத்தில் நின்று சோதனையில் ஈடுபடாமல் பல பகுதிகளுக்கும் சென்று சோதனையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    சிவிஜில் செயலி மூலம் பொதுமக்களிடம் இருந்து 1822 புகார்கள் வந்துள்ளதால் அவ்வாறு பெறப்படும் புகாரின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

    பொதுமக்களின் புகாரை யாரும் அலட்சியப்படுத்த கூடாது. இந்த புகாரின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என்று சத்யபிரதா சாகு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அரசியல் கட்சியினரின் வாகனங்கள் அனைத்தையும் கண்டிப்பாக சோதனையிட வேண்டும். எந்த வாகனமும் அதில் விதிவிலக்கல்ல என்றும் அவர் கூறினார்.

    இதனால் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனையும் தீவிரம் அடைந்துள்ளது.

    • ரேண்டம் அடிப்படையில் ஒரு தொகுதியில் ஐந்து வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
    • அனைத்து விவிபாட் ரசீதுகளும் எண்ணப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

    சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கு EVMs இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்யும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரியாது. இதனால் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள விவிபாட் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரம் செயல்படுத்தப்பட்டது.

    வாக்களிக்கும் ஒரு நபர் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்பதை ஒரு ரசீது மூலம் இந்த இயந்திரம் காட்டும். ஆனால் இந்த இயந்திரம் காட்டப்படும் ரசீது வாக்காளர்களுக்கு காட்டப்பட்ட பின் அவர்களிடம் வழங்கப்படாது. ஒரு பாக்ஸில் சேகரிக்கப்படும்.

    தேவைப்பட்டால் இந்த ரீதுகள் ஒரு தொகுதிக்கு ஐந்து வாக்குச்சாவடிகள் என்ற அடிப்படையில் ரேண்டம் முறையில் எண்ணப்படும்.

    ஆனால், இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஏவிஎம் இயந்திரம் 100% நம்பகத்தன்மை கொண்டது. அதனால் 100 சதவீதம் எண்ணப்பட வேண்டியதில்லை என தேர்தல் ஆணைய தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் விவிபாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கோவாய் மற்றும் சந்தீப் மேக்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி விசாரணையை மே 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இது தொடர்பாக இந்தியா கூட்டணி தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை சந்தித்து வலியுறுத்த நேரம் கேட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது முக்கியமான முதல்படி. தேர்தலுக்கு முன்னதாக இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால் அது பயனுள்ளதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து தேர்தல் பிரசாரம் செய்ததாக 1,000 புகார்கள் வந்துள்ளன.
    • 89 சதவீத புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த 16-ந் தேதி வெளியிட்டது. அன்று முதலே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

    இந்த விதிகள் தீவிரமாக பின்பற்றப்படும் என கூறிய தேர்தல் கமிஷன், நடத்தை விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 'சி-விஜில்' என்ற செல்போன் செயலியை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த செயலி மூலமாக பொதுமக்கள் புகார்களை வழங்கலாம் என்றும் அறிவித்தது.

    அதன்படி இந்த செயலி வழியாக தொடர்ந்து புகார்கள் வருவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அந்தவகையில் இதுவரை 79 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதாக தேர்தல் கமிஷன் நேற்று கூறியுள்ளது.

    இதில் 58,500-க்கு (73 சதவீதம்) அதிகமான புகார்கள் சட்ட விரோதமான பதாகைகள் மற்றும் பேனர்கள் தொடர்பானவை ஆகும்.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மது வினியோகம் தொடர்பாக 1,400-க்கு மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. சுமார் 3 சதவீத (2,454) புகார்கள் சொத்துகளை சேதப்படுத்தியது சம்பந்தப்பட்டவை ஆகும்.

    துப்பாக்கியை காட்டுதல் மற்றும் மிரட்டல் தொடர்பாக 535 புகார்கள் வந்துள்ள நிலையில், அவற்றில் 529 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து தேர்தல் பிரசாரம் செய்ததாக 1,000 புகார்கள் வந்துள்ளன.

    இதுவரை வந்துள்ள 79 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்களில் 99 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன. இதில் 89 சதவீத புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்பட்டு இருக்கிறது.

    இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

    • 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடக்கிறது.
    • வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களில் வெளியிடவும் தடை.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.

    மேலும் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலும் இந்த தேர்தலுடன் நடக்கிறது. இதைப்போல 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடக்கிறது.

    இந்த நாட்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தவோ, வெளியிடவோ தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. குறிப்பாக முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19-ந் தேதி காலை 7 மணி முதல் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1-ந்தேதி மாலை 6.30 மணி வரை இந்த கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதைப்போல வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை.

    திருச்சி:

    தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்பு மனு தாக்கலுக்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படியும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும் 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ம.தி.மு.க.வுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இது தொடர்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவு காலை 11 மணிக்கு கிடைக்கப் பெற்ற பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு தேர்தல் ஆணையத்தில் 188 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதில் பம்பரம் சின்னம் இல்லை. அதேபோன்று திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அதில் ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை. நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதற்கிடையே இன்று தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு இல்லை என ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்கு மெயில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான இறுதி முடிவு இன்று மாலைக்குள் வெளியாகும் என தெரியவருகிறது.

    ×