செய்திகள்
சோனியா காந்தி

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு?- சோனியா காந்தி அவசர ஆலோசனை

Published On 2019-11-02 01:57 GMT   |   Update On 2019-11-02 01:57 GMT
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா தீவிரம் காட்டி உள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தினார்.
மும்பை :

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 161 இடங்களை கைப்பற்றிய இரு கட்சிகளும் உடனடியாக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும், மந்திரி பதவிகளை சரிசமமாக பிரித்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஏற்கனவே அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார். அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் பாரதீய ஜனதாவை வலியுறுத்தினார்.

ஆனால் சிவசேனாவுக்கு ஆட்சியில் சமபங்கு வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை என்று பா.ஜனதாவை சேர்ந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்றுடன் 9 நாட்கள் முடிந்தபோதிலும், புதிய அரசு அமையும் விவகாரம் ‘கிணற்றில் போட்ட கல்’ போல உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டசபையின் பதவி காலம் வருகிற 9-ந் தேதி முடிவதால், அதற்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும்.

இந்த நிலையில் சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக கடந்த 30-ந் தேதி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நானே முதல்-மந்தியாக இருப்பேன் என்றும், சிவசேனாவுடன் விரைவில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அப்போது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் முதல்-மந்திரி பதவி கேட்டு சிவசேனா தொடர்ந்து பிடிவாதம் காட்டுவதால், பாரதீய ஜனதா தலைவர்களும் அந்த கட்சியுடன் பேச்சவார்த்தை நடத்தாமல் தாமதம் செய்து வருகின்றனர். இதனால் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைதில் சந்தேகம் எழுந்து உள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் ஏற்கனவே கூறப்பட்டு வந்ததை போல தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சி செய்து வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை திடீரென சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், சிவசேனா நினைத்தால் நிலையான அரசை அமைக்க தேவையான மெஜாரிட்டியை பெற முடியும் என்று பாரதீய ஜனதாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.



இந்த பரபரப்பான சூழ்நிலையில் உத்தவ் தாக்கரேயும், சரத்பவாரும் மாற்று ஆட்சி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை நடத்திய தகவல் வெளிச்சத்தக்கு வந்து உள்ளது. அதாவது சரத்பவாரை சஞ்சய் ராவத் சந்தித்தபோது அவரது போன் மூலம் சரத்பவார்- உத்தவ் தாக்கரே ஆகிய இரு தலைவர்களும் உரையாடி உள்ளனர்.

சிவசேனா தனித்து ஆட்சியமைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது அல்லது சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க, அதற்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது போன்ற அம்சங்கள் குறித்து இரு கட்சி தலைவர்களும் ஆலோசித்து உள்ளனர்.

இது தொடர்பாக சரத்பவார் உடனடியாக மாநில காங்கிரஸ் தலைவர்களை அழைத்து பேசினார். மாநில காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் மேலிட தலைவர்களை தொடர்பு கொண்டு சிவசேனாவின் திட்டத்தை எடுத்து கூறினர்.

பாரதீய ஜனதாவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க இது சிறந்த முடிவு என்று காங்கிரஸ் மேலிட தலைவர்களும் பச்சை கொடி காட்டினர். இந்த விஷயத்தில் சோனியா காந்தியின் ஒப்புதலை பெற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட், முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே ஆகியோர் டெல்லி விரைந்தனர். இரவில் அவர்கள் சோனியா காந்தியை சந்தித்து பேசினர்.

அப்போது சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தியதாக தெரியவந்தது.

இந்த சந்திப்புக்கு பிறகு பாலசாகேப் தோரட் கூறுகையில், ’மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்த பிறகு நடைபெறும் அசாதாரண சூழலை சோனியா காந்தியிடம் தெரிவித்தோம். ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கும் திட்டம் பற்றி பேசவில்லை. இந்த விஷயத்தில் உரிய நேரம் வரும்போது, சோனியா காந்தி முடிவு எடுப்பார்‘ என்றார்.

இதற்கிடையே சரத்பவார் வருகிற 4-ந் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், அப்போது சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து அவர் சோனியா காந்தியிடம் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வசம் 54 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசிடம் 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இந்த கட்சிகள் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மராட்டியத்தில் பாரதீய ஜனதா அல்லாத மாற்று அரசு அமைய வாய்ப்பு உள்ளது. 
Tags:    

Similar News