செய்திகள்
மெகபூபா

சிறப்பு அந்தஸ்து ரத்து- மெகபூபா கடும் கண்டனம்

Published On 2019-08-05 07:59 GMT   |   Update On 2019-08-05 07:59 GMT
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு இன்று அதிரடியாக ரத்து செய்ததற்கு மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு இன்று அதிரடியாக ரத்து செய்ததற்கு அம் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-

இந்திய ஜனநாயகத்தில் இன்று கறுப்பு நாள். காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதை காஷ்மீர் மாநில மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சட்டப்பிரிவு 370-யை ஒரு மசோதா மூலம் நீக்கி இருப்பது சட்ட விரோதமானது. ஜனநாயக நெறி அற்றது. இதன் மூலம் காஷ்மீர் மாநிலத்தை அபாயகரமான சூழ்நிலைக்கு மத்திய அரசு தள்ளி உள்ளது.

காஷ்மீர் மாநில மக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்ய போவதாக பாரதீய ஜனதா கட்சி தேர்தலின்போது வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால் அந்த வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநில மக்களை மத்திய அரசு ஏமாற்றி உள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் பாரதீய ஜனதாவின் திட்டம், எண்ணம் போன்றவை தெள்ளத்தெளிவாக வெளி உலகத்துக்கு தெரிந்து விட்டன. இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் தான் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வந்தனர். அதை இன்றைய நடவடிக்கை மூலம் மத்திய அரசு சீர்குலைத்துள்ளது.

காஷ்மீர் மாநில மக்களை அவர்களது சொந்த மண்ணிலேயே அதிகாரம் இல்லாதவர்களாக ஆக்கும் நடவடிக்கைகள் இன்று தொடங்கி உள்ளது. மத்திய அரசின் செயல்பாட்டால் முஸ்லிம்கள் இனி காஷ்மீரில் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்படுவார்கள்.

இந்த அபாயத்தை நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு மெகபூபா கூறினார். 

Tags:    

Similar News