செய்திகள்
டிகே சிவக்குமார்

பாஜக எம்எல்ஏ மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த டிகே சிவக்குமார்

Published On 2019-08-05 02:33 GMT   |   Update On 2019-08-05 02:33 GMT
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வான எத்னாலிடம் ரூ.204 கோடி கேட்டு முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் டி.கே.சிவக்குமார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

அப்போது கணக்கில் வராத பல கோடி ரூபாயை டி.கே.சிவக்குமார் வீட்டில் இருந்து அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றிருந்தனர். இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார் மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் வழக்குகள் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 23-ந் தேதி விஜயாப்புரா மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான எத்னால் நிருபர்களிடம் பேசுகையில், “டி.கே.சிவக்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறையில் வழக்குகள் பதிவாகி உள்ளது. அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் மற்றும் மத்திய மந்திரிகளிடம் உதவி செய்யும்படி டி.கே.சிவக்குமார் கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக அவர்களுக்கு டி.கே.சிவக்குமார் அழுத்தமும் கொடுத்தார்.



அவ்வாறு அந்த வழக்குகளில் இருந்து அவரை விடுவித்தால், அதற்கு பிரதிபலனாக கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன் என்று மத்திய மந்திரிகளிடம் டி.கே.சிவக்குமார் கூறி இருந்தார்,“ என்றார். டி.கே.சிவக்குமார் மீது எத்னால் எம்.எல்.ஏ. கூறிய குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதே இந்த குற்றச்சாட்டை டி.கே.சிவக்குமார் மறுத்திருந்தார்.

இந்த நிலையில், தன் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பா.ஜனதா எம்.எல்.ஏ.வான எத்னால் கூறி இருப்பதாகவும், இதனால் காங்கிரஸ் கட்சியில் மட்டும் அல்லாமல், மாநில மக்களிடையே தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் கூறி ராமநகர் மாவட்ட கோர்ட்டில் எத்னால் எம்.எல்.ஏ.விடம் ரூ.204 கோடி கேட்டு டி.கே.சிவக்குமார் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். அத்துடன் டி.கே.சிவக்குமார் தொடர்ந்துள்ள வழக்கின் மீதான விசாரணை அடுத்த மாதம்(செப்டம்பர்) 18-ந் தேதி நடைபெற உள்ளது.
Tags:    

Similar News