செய்திகள்
வைகோ

தேசத்துரோக வழக்கில் சிறை தண்டனையை எதிர்த்து வைகோ அப்பீல்

Published On 2019-07-13 03:47 GMT   |   Update On 2019-07-18 09:37 GMT
தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு, பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், வைகோ மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், “தேசத்துரோக வழக்கில் எனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு சட்ட விரோதமானது. சிறப்பு நீதிமன்றம் சட்டப்படி தீர்ப்பு வழங்காமல் தனக்குத் தெரிந்த விஷயங்களை வைத்து தீர்ப்பு அளித்துள்ளது. எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முழுமையான ஆதாரம் மற்றும் சாட்சி இல்லாத நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே எனக்கு வழங்கப்பட்டுள்ள ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடையும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என கூறி உள்ளார்.

வைகோவின் மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News