search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்ச நீதிமன்றம்"

    • சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
    • பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் அம்மாநிலத்தில் அவ்வாறு எந்த ஊழலும் நடைபெறவில்லை என நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

    இது தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சத்தீஸ்கரில் எவ்வித மதுபான ஊழலும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. இதே கருத்தைதான் காங்கிரசும் முன்வைத்தது. இல்லாத ஒரு ஊழலை இருப்பதாக தெரிவித்து, யார் கொடுத்த அழுத்தத்தால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது?

    அமலாக்கத்துறையை பாஜக அரசு தவறாக பயன் படுத்தியிருக்கிறது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பே உறுதிப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து பாஜக பொய்களை மட்டுமே பரப்புகிறது என்பது தெளிவாகியுள்ளது பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • ஒவ்வொரு மற்றும் அனைத்து சொத்துகளையும் முற்றிலுமாக தெரிந்து கொள்ள வாக்களார்களுக்கு முழு உரிமை கிடையாது.
    • வேட்பாளர்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் தங்களுடைய அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துகள், தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை சொத்துக்களை மறைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் பதவி பறிபோகும் நிலை ஏற்படும்.

    மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்ற பின் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது தொடர்பான வழக்குகளை எதிர்கொண்ட சம்பவங்களும் உண்டு.

    வேட்பாளர்களின் பிரமாண பத்திரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கூறியதாவது:-

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒவ்வொரு மற்றும் அனைத்து சொத்துகளையும் முற்றிலுமாக தெரிந்து கொள்ள வாக்களார்களுக்கு முழு உரிமை கிடையாது.

    கணிசமான மதிப்பு அல்லது ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்காத பட்சத்தில், வேட்பாளர்கள் தங்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒவ்வொரு அசையும் சொத்துகளையும் வெளியிட வேண்டியதில்லை.

    பொருத்தமற்றது என கருதும் விசயங்களை பொது அலுவலகத்தில் தெரிவிக்காத வகையில் வேட்பாளர்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு.

    இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதரசா சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக என கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
    • மதரசாவில் படிக்கும் 17 லட்சம் மாணவர்கள் மற்றும் 10,000 ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது

    2004-ம் ஆண்டு முதல் உத்தர பிரதேசத்தில் மதரசா எனப்படும் இஸ்லாமிய மதக் கல்வியை கற்றுத் தரும் பள்ளிகளுக்கு என, உ.பி., மதரசா கல்வி வாரிய சட்டம் அமலில் உள்ளது.

    இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக இருப்பதாகவும், மதரசா வாரியத்தை மத்திய, மாநில சிறுபான்மையின நலத்துறை நிர்வகிப்பதும் தவறு என்றும் கூறி, அன்சுமான் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விவேக் சவுத்ரி மற்றும் சுபாஷ் வித்யார்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, உத்தர பிரதேச மதரசா கல்வி வாரிய சட்டம் 2004, அரசியலமைப்புக்கு எதிரானது. அத்துடன் இது மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுகிற வகையில் உள்ளது என்று கூறி அந்த சட்டத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் மார்ச் 22 அன்று ரத்து செய்து உத்தரவிட்டது.

    மேலும், தற்போது மதரசாக்களில் கல்வி பயிலும் மாணவர்களை, வழக்கமான கல்வி நிறுவனங்களில் சேர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி மதரசாவில் படிக்கும் 17 லட்சம் மாணவர்கள் மற்றும் 10,000 ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, மதரசா கல்விச் சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

    அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது மத்திய அரசு, உத்தரபிரதேச அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • சென்னை மற்றும் தென்மாவட்டங்கள் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்படைந்தன.
    • மத்திய அரசு நிவாரண நிதி தர மறுப்பதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

    கடந்த ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் எதிர்பாராத வகையில் மழை கொட்டித்தீர்த்தது. தாமிரபரணி ஆற்றில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றின் கரையோர கிராமங்கள் மிகப்பெரிய அளவில் பாதித்தன.

    தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் வடிய பல நாட்கள் ஆகின. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிப்பு குறித்து விரிவாக கடிதம் எழுதி சுமார் 30 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரணம் கேட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை.

    தற்போது மக்களவை தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின்போது வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட தரவில்லை என மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    நேற்று வேலூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது இது தொடர்பாக மத்திய அரசு மீது வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பதஞ்சலி விளம்பரத்தை நிறுத்த உத்தரவிட்டும், விளம்பரப்படுத்தியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
    • நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் யோகா குரு ராம்தேவ் இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரத்தை விளம்பரப்படுத்திய வழக்கில், உச்சநீதிமன்றம் உடனடியாக விளம்பரத்தை நிறுத்த உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து விளம்பரம் செய்யப்பட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்வதோடு, நேரில் ஆஜராக வேண்டும் என யோகா குரு ராம்தேவ், பதஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோருக்கு உச்சநீதிமன்றத்தில் உத்தரவிட்டது.

    ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் யோகா குரு ராம்தேவ் இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    இந்த வழக்கை ஹீமா கோலி மற்றும் ஆசாதுதீன் அமானுல்லா தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

    இன்று ராம்தேவ் நேரில் ஆஜரான நிலையில், பிரமாண பத்திரம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். அத்துடன் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார் என தெரிவித்தனர்.

    அத்துடன் இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த வாரம் ஏப்ரல் 10-ந்தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவி்டனர்.

    ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளனர். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். இதன் அடிப்படையில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் மத்திய அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது என ஏற்கனவே நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதன் அருகில் ஞானவாபி மசூதி இருக்கிறது
    • அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதன் அருகில் ஞானவாபி மசூதி இருக்கிறது. அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வாரணாசி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் சில மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரித்த வாரணாசி கோர்ட்டு, மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு உத்தரவிட்டது.

    கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. ஆனால், அது நீரூற்று பகுதி என்றும் தொழுகைக்கு வருபவர்கள் கை, கால் கழுவுவதற்காக அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது என்றும் மசூதி நிர்வாகம் தெரிவித்தது.

    ஞானவாபி மசூதி வளாகத்தில் தரைகீழ் தளத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி வாரணாசி மாவட்ட கோர்ட்டு கடந்த 31-ந்தேதி உத்தரவிட்டது.

    வாரணாசி கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெ ஹமியா மசூதி குழு அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

    நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் இந்த அப்பீல் மனுவை விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு கடந்த 15-ந்தேதி நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    இந்த வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. மசூதி கமிஷன் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் தொடர்ந்து பூஜை மற்றும் வழிபாடு செய்ய அனுமதி வழங்கி அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, 'ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு தொடர்பாக மசூதி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

    • அச்சுறுத்தலில் நீதித்துறை- அரசியல் மற்றும் தொழில்ரீதியான அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை பாதுகாத்தல் தலைப்பில் கடிதம்.
    • காங்கிரஸ் தனது சுயநல ஆதாயங்களுக்காக மற்றவர்களிடம்தான் அர்ப்பணிப்பு உணர்வை வெட்கமின்றி எதிர்பார்க்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு நாடு முழுவதும் இருந்து 600 வக்கீல்கள் ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அதில் சில சுயநல நபர்கள் அரசியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும், எப்படி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் தலையிட முயற்சிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், வக்கீல்கள் கடிதத்தை பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அத்துடன், தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    மற்றவர்களை மிரட்டுவதும், கொடுமைப்படுத்துவதும் பழைய காங்கிரஸ் கலாசாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பு, அர்ப்பணிப்பு உணர்வுள்ள நீதித்துறை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது.

    ஆனால், தனது சுயநல ஆதாயங்களுக்காக மற்றவர்களிடம்தான் அர்ப்பணிப்பு உணர்வை வெட்கமின்றி எதிர்பார்க்கிறது. மற்றபடி நாடு மீதான அர்ப்பணிப்பு உணர்வில் இருந்து நழுவிக்கொள்கிறது.

    எனவே, 140 கோடி இந்தியர்களும் அக்கட்சியை நிராகரித்ததில் ஆச்சரியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக,

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு 'அச்சுறுத்தலில் நீதித்துறை- அரசியல் மற்றும் தொழில்ரீதியான அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை பாதுகாத்தல்' என்ற தலைப்பில் 600 வக்கீல்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

    அதில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, பார் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மனன்குமார் மிஸ்ரா, பிங்கி ஆனந்த், அதிஷ் அகர்வாலா, சேத்தன் மிட்டல் உள்பட 600 வக்கீல்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

    கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    2018-2019 ஆண்டு காலகட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்போது சில சுயநல சக்திகள் கோர்ட்டுகள் மீது செல்வாக்கு செலுத்தவும், அழுத்தம் தரவும் முயன்றனர். தவறான கட்டுக்கதைகளை பரப்ப முயன்றனர்.

    அதேபோல், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் இத்தகைய சுயநல சக்திகள் தங்களது அச்சுறுத்தல் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். அரசியல் வழக்குகளில் குறிப்பாக ஊழல் வழக்குகளில் அரசியல் பிரபலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அவர்களது நிர்பந்த நடவடிக்கைகள் வெளிப்படையாக தெரிகிறது. இத்தகைய தந்திரங்கள் நமது கோர்ட்டுகளை பாதிப்பதுடன், நமது ஜனநாயக கோட்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.

    இந்த வக்கீல்கள், தங்கள் வழக்குகளை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முயற்சிக்கின்றனர். நீதிபதிகள் யார் என்று தெரிந்துகொண்டு அவர்கள் எப்படி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்புகிறார்கள்.

    இவர்கள் பகலில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக வாதிடுகிறார்கள். இரவில், ஊடகம் மூலமாக நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறார்கள்.

    கடந்த காலம்தான் கோர்ட்டுகளின் பொற்காலம் என்றும், தற்போது அதற்கு முரணான நிலைமை காணப்படுவதாகவும் தவறான தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள். அதன்மூலம், தங்களது அரசியல் ஆதாயத்துக்காக கோர்ட்டுகளை சங்கடத்துக்கு உள்ளாக்குகிறார்கள். மேலும், பொதுமக்களுக்கு கோர்ட்டுகள் மீதுள்ள நம்பிக்கையை அசைத்து பார்க்கும் வகையில் அவர்களது கருத்துகள் இருக்கின்றன.

    அத்துடன், நம் நாட்டு கோர்ட்டுகளை சட்டத்தின் ஆட்சி நடக்காத நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு கீழே இறங்குகிறார்கள். சாதகமான தீர்ப்பு என்றால் அதை புகழ்வதும், எதிரான தீர்ப்பு என்றால் அதை அவமதிப்பதுமாக இருக்கின்றனர்.

    ஆகவே, சுப்ரீம் கோர்ட்டு வலிமையாக நிற்க வேண்டும். இத்தகைய தாக்குதல்களில் இருந்து கோர்ட்டுகளை பாதுகாக்க வேண்டும்.

    மவுனமாக இருப்பதோ, எதுவும் செய்யாமல் இருப்பதோ இந்த நபர்களுக்கு கூடுதல் வலிமை அளிப்பதாக ஆகிவிடும். கண்ணியமான மவுனம் காக்க வேண்டிய நேரம் இதுவல்ல. கடந்த சில ஆண்டுகளாக, இம்முயற்சிகள் நடந்து வருகின்றன. அதுவும் அடிக்கடி நடக்கின்றன. தலைமை நீதிபதியின் தலைமை, கடினமான தருணங்களில் மிகவும் முக்கியம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.
    • கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்திருந்தார்.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.

    டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் விசாரணைக்கு ஆஜரானால் கைது செய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர்.

    இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்தார். 

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.

    அமலாக்கத்துறை சார்ந்த வழக்குகளை வழக்கமாக விசாரிக்கும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பேலா திவேதி அமர்வுதான் இந்த வழக்கையும் விசாரிக்க இருந்த நிலையில், கெஜ்ரிவால் மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.

    இதே அமர்வு, கடந்த பிப்ரவரியில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், இம்மாதம் பி.ஆர்.எஸ் தலைவர் கவிதா கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மறுத்தது. மேலும், உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி.
    • ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவைல அளிக்கும் விதமாக இருப்பதாக கருத்து.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தது.

    ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவைல அளிக்கும் விதமாக இருப்பதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து இருந்தார்.

    24 மணி நேரத்திற்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால், தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    ஆளுநருக்கு காலக்கெடு விடுக்கப்பட நிலையில், இன்று காலை 9 மணிக்கு திமுக எம்எல்ஏ பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு.
    • உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆர்.என். ரவி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் போல நடந்து கொள்வதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையில் செயல்படுகிற பா.ஜ.க.வின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக ஆளுநராக ஆர்.என்.வி நியமிக்கப்பட்டது முதற்கொண்டு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார். கடந்த காலங்களில் தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு.

    ஆனால், அரசமைப்புச் சட்ட உறுப்பு 163(1)-ன்படி அமைச்சரவையின் ஆலோசனையோ, அறிவுரையோ இன்றி தன்னிச்சையாக ஆளுநர் செயல்பட முடியாது என்று தெளிவாக கூறுகிறது. இதில் அவருக்குள்ள விருப்புரிமை மிகமிக குறைவானதே ஆகும். இந்நிலையில் தமிழக சட்டப்போவை நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் முடக்கி வருகிறார். இது அப்பட்டமான தமிழக விரோத செயலாகும்.

    சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்றில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துக் கடந்த 11 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி நீடிக்கிறார் என்று சட்டப்பேரவை சபாநாயகர் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார். இதனடிப்படையில் ஆளுநர், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு "உச்சநீதிமன்றம் அவரை நிரபராதி என்று தீர்ப்பு வழங்கவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்கின்றன. எனவே, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது" என்று ஆளுநர் பதில் கூறியிருந்தார். ஆளுநரின் இந்த செயல் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் கொந்தளிக்க செய்தது. அரசமைப்புச் சட்டப்படி ஓர் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆர்.என். ரவி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் போல நடந்து கொள்வதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பிறகு பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க சட்டரீதியாக தடை எதும் இல்லாத நிலையில் தி.மு.க. மீது ஆளுநருக்கு உள்ள வன்மத்துடன் , வேண்டுமென்றே பதவி பிரமாணம் செய்து வைக்காமல் சண்டித்தனம் செய்து வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இந்நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பதை மறுக்கும் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.இதன்படி உறுப்பு 154, உட்பிரிவு 1-ஐ ஆளுநர் அப்பட்டமாக மீறுவதாக முறையிடப்பட்டது. முதல்வர் பரிந்துரைத்த பின்பும் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்து வருவது சட்டவிரோதம் என கூறப்பட்டது.

    இதனை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், "உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று அவர் எப்படி கூற முடியும்? இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநருக்கு நாளை வரை அவகாசம் வழங்குகிறோம். இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆளுநருக்கு எதிராக கடுமையான கேள்விக் கணைகளை எழுப்பி எச்சரித்திருக்கிறது.

    இதற்குப் பிறகும் பொன்முடி அமைச்சராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை என்றால் ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை தூக்கி எறிகிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது.

    எனவே, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையிலும் செயல்படுகிற பா.ஜ.க.யின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என் ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். இதனை பா.ஜ.க. அரசு செயல்படுத்தவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும்
    • தகவல் தொழில்நுட்ப திருத்த சட்டம் 2023-க்கு எதிரான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது

    மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

    மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும். அந்த தகவல் தவறு என அறிவித்து விட்டால் அந்தப் பதிவை சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்கள் உடனடியாக நீக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அவற்றின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு (FactCheck Unit) அமைக்கும் அரசாணையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2023-க்கு எதிரான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான இச்சட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (DYFI), காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி ஆகியோர் ஆகியோரின் மனுக்களும் அடங்கும்.

    இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஏப்ரல் 8-ம் தேதிக்குள் ஒன்றிய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×