என் மலர்
நீங்கள் தேடியது "கோயில் கருவறை"
- மகா காலனின் முன்னிலையில் அனைவரும் சமம்; எவரும் விஐபி கிடையாது
- அனைவருக்கும் நுழைவதற்கு முழுமையான தடை அல்லது அனைவருக்கும் சமமான அணுகல்
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி ஸ்ரீ மகா காலேஸ்வரர் கோயிலில் நடைமுறையில் உள்ள விஐபி தரிசனத்திற்கு எதிரான மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்து, சமீபத்தில் மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு.
"மகா காலனின் முன்னிலையில் அனைவரும் சமம்; எவரும் விஐபி கிடையாது" என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, கோயிலுக்குள் யார் எப்போது நுழைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வாயிற்காவலராக நீதிமன்றம் செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் கோயில் சன்னதிக்குள் நுழைவது மற்றும் வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்துவது என்பது கோயில் நிர்வாகம் மற்றும் மாநில அதிகாரிகளின் நிர்வாக ரீதியான முடிவே தவிர, அது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது அல்ல என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். தொடர்ந்து மதம் சார்ந்த சடங்குகளில் நீதிமன்றம் தலையிடுவது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும் என நீதிமன்றம் எச்சரித்தது.
அப்போது பேசிய தலைமை நீதிபதி,
கோயில் நிர்வாகத்தில் நீதித்துறை தலையீட்டிற்கு வரம்புகள் உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். விஐபி நுழைவு அனுமதிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. நாங்கள் நீதித்துறை சார்ந்த பிரச்சினையில் இருக்கிறோம்.
சட்டப்பிரிவு 14 (சமத்துவ உரிமை) கருவறைக்குள் பொருந்தும் என்று நாம் கருதினால், மக்கள் சட்டப்பிரிவு 19 (பேச்சுரிமை) போன்ற பிற உரிமைகளையும் கோருவார்கள். முதலில், வேறொருவர் உள்ளே செல்வதால் எனக்கும் உள்ளே செல்ல உரிமை உண்டு என்பீர்கள்; பிறகு, எனக்குப் பேச்சுரிமை இருப்பதால் இங்கேயே அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்க எனக்கு உரிமை உண்டு என்பீர்கள். அதன் பிறகு அனைத்து அடிப்படை உரிமைகளும் கருவறைக்குள் கோரப்படும்," என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
உஜ்ஜைனி மகாகாலேஸ்வரர் கோயிலின் கருவறைக்குள் விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து தர்பன் அவஸ்தி என்பவர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், "VIP" என்பது எந்தச் சட்டத்திலோ அல்லது விதியிலோ வரையறுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக கோயில் நிர்வாகக் குழு மற்றும் ஆட்சியர் செயல்படுத்தும் நிர்வாக விருப்புரிமை சார்ந்த விஷயம் என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மனுதாரர் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள்;
"கருவறைக்குள் நுழைவதைப் பொறுத்தவரை, ஒவ்வொரு குடிமகனும் சமமாக நடத்தப்பட வேண்டும். "VIP அந்தஸ்து என்ற பெயரில் குடிமக்களுக்கு இடையே பாகுபாடு காட்ட முடியாது.
ஒரு நபர் 'கர்ப்பகிரகத்திற்குள்'நுழைகிறார் என்றால், அது பெரும்பாலும் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையால் மட்டுமே நடக்கிறது. ஒரு சாதாரண பக்தருக்கும் தெய்வத்திற்கு தண்ணீர் வழங்கும் அதே உரிமை இருக்கவேண்டும். அனைவருக்கும் நுழைவதற்கு முழுமையான தடை அல்லது அனைவருக்கும் சமமான அணுகல் இருக்க வேண்டும்" என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்தார்.






