செய்திகள்

முத்தலாக் மசோதா மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்கும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி

Published On 2019-06-26 10:38 GMT   |   Update On 2019-06-26 10:38 GMT
மக்களவையில் முத்தலாக் மசோதா மீதான விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பை டிஆர்எஸ் கட்சி புறக்கணிக்கலாம் என தெரிகிறது.
புதுடெல்லி:

முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதா, நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. இதனால் முத்தலாக் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 

இதற்கிடையே மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்து, மக்களவை கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆனது. இதனால் நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில், முத்தலாக் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்நிலையில் முத்தலாக் மசோதா மீதான வாக்கெடுப்பில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) பங்கேற்காது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். 

‘கடந்த ஆண்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்துவிட்டு, வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த முறையும் அதே போன்று வாக்கெடுப்பில் இருந்து விலகலாம். மசோதாவை எதிர்த்தாலும் சில பிரச்சனைகள் உருவாகும், ஆதரித்தாலும் சில பிரச்சினைகள் உருவாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News