தமிழ்நாடு

சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன்.

பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த பல்லடம் சாமியார்- ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாகவும் புகார்

Published On 2024-05-10 05:58 GMT   |   Update On 2024-05-10 05:58 GMT
  • நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
  • சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார்.

திருப்பூர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 39 வயது பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கி அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தனது கணவன்-மகனுடன் சேர்ந்து வாழ விரும்பினார். இதற்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

அப்போது யூ டியூப்பில் பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜூன் கிருஷ்ணன் என்ற சாமியார் மாந்திரீகம் மூலம் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வீடியோ க்களை பார்த்துள்ளார். இதையடுத்து கணவரை தன்னுடன் சேர்த்து வைப்பதற்காக சாமியார் அர்ஜூன் கிருஷ்ணனின் வராகி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமியாரிடம் நடந்த விவரத்தை கூறியதுடன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

அப்போது கணவன் மற்றும் மகனை சேர்த்து வைப்பதற்கான பரிகாரங்கள் செய்ய முன்பணமாக ரூ.10 ஆயிரம் கட்டுமாறு அர்ஜூன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் ரூ.10ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார். கட்டிய சிறிது நாட்களுக்கு பின் பரிகாரம் செய்ய அதிக செலவாகும். ரூ.1.50 லட்சம் கொடுத்தால்தான் பரிகார பூஜைகளை ஆரம்பிக்க முடியும் என சாமியார் தெரிவித்துள்ளார்.

கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் அந்த பெண் தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி பணத்தை சாமியாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு சாமியார் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அர்ஜூன் கிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற நிலையில் அந்த பெண்ணை , சாமியார் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் மேற்கண்ட விவரங்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி 50 பெண்களிடம் பணம் பெற்று சாமியார் ஏமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாமியாரை கைது செய்து விசாரித்தால் இந்த சம்பவத்தில் மேலும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Tags:    

Similar News