செய்திகள்

போலி ஆடியோவை குமாரசாமி வெளியிட்டுள்ளார்: பா.ஜனதா குற்றச்சாட்டு

Published On 2019-02-10 01:51 GMT   |   Update On 2019-02-10 01:51 GMT
எம்.எல்.ஏ.வின் மகனுடன் எடியூரப்பா பேசுவது போன்ற போலி ஆடியோவை குமாரசாமி வெளியிட்டுள்ளார் என்று பா.ஜனதா குற்றச்சாட்டு கூறியுள்ளது. #Kumaraswamy #BJP
பெங்களூரு :

பெங்களூருவில் பா.ஜனதா செய்தி தொடர்பாளரான அஸ்வத் நாராயணா எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வின் மகனுடன் பேரம் பேசுவது தொடர்பாக ஒரு ஆடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோ போலியானது. குமாரசாமி சினிமா தயாரிப்பாளராக இருந்து அரசியலுக்கு வந்ததால், எந்த விதமான வீடியோ, ஆடியோவை தயாரிப்பதில் கைதேர்ந்தவர். அதனால் தான் எடியூரப்பா பேசுவது போன்ற ஆடியோவை போலியாக தயாரித்து வெளியிட்டுள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களை திருப்திப்படுத்தவே இந்த போலி ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

எடியூரப்பா மீது மாநில மக்களிடையே தவறான தகவல்களை குமாரசாமி பரப்பி வருகிறார். இதற்கு முன்பு எடியூரப்பா பேசுவது போல 2 ஆடியோவை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உக்ரப்பா வெளியிட்டு இருந்தார். அது போலியானது என்று தெரியவந்தது. தற்போது மற்றொரு போலி ஆடியோவை எடியூரப்பாவுக்கு எதிராக வெளியிட்டுள்ளனர்.

ஜனதாதளம்(எஸ்) கட்சியில் சூட்கேசு கலாசாரம் இருப்பதாக தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவே கூறி இருக்கிறார். அதனால் சட்டசபை தேர்தல், எம்.எல்.சி. தேர்தல், டெல்லி மேல்-சபை தேர்தல் நடந்தால், அந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சீட் வழங்க குமாரசாமியும், தேவேகவுடாவும் பணம் பெற்று வருகின்றனர். சீட் கேட்பவர்களிடம் பணம் வாங்க கடையை விரித்து வைத்து 2 பேரும் காத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எடியூரப்பாவை பற்றி பேச தகுதி இல்லை.

பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி.யிடம் முதல்-மந்திரி குமாரசாமி ரூ.25 கோடி பேரம் பேசும் ஆடியோ உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #BJP
Tags:    

Similar News