செய்திகள்

ராமர் கோவிலை விரைவில் கட்ட வேண்டும் - அமித் ஷா வலியுறுத்தல்

Published On 2019-02-02 12:49 GMT   |   Update On 2019-02-02 13:18 GMT
அயோத்தியில் ராமர் கோவிலை விரைவில் கட்ட வேண்டும் என பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று வலியுறுத்தியுள்ளார். #Ramtemple #AmitShah
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்று பேசினார்.

ஆரம்ப காலத்தில் பா.ஜ.க.வில் ஒரு சாதாரண தொண்டனாக இருந்தபோது டேராடூன் நகருக்கு வந்திருந்ததை தனது பேச்சுக்கு இடையே இன்று நினைவுகூர்ந்த அமித் ஷா, ஜனநாயகத்தை கடைபிடிக்கும் பா.ஜ.க.வில் மட்டும்தான் என்னைப்போல் போஸ்ட்டர் ஒட்டியவர்கள் கட்சியின் தேசிய தலைவராகவும், டீக்கடை வைத்திருந்தவரின் மகன் இந்த நாட்டின் பிரதமராகவும் வர முடியும் என்று குறிப்பிட்டார்.

உத்தரபிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் தற்போது நடந்துவரும் கும்பமேளா விழா பற்றி குறிப்பிட்ட அவர், ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு எப்போதுமே தெளிவாக இருந்து வந்துள்ளது. ராமர் கோவில் விரைவாக கட்டப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

ஆனால், அயோத்தி நிலம் பிரச்சனை தொடர்பாக முஸ்லிம்களுக்காக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் (கபில் சிபல்) இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடாதவாறு இழுத்தடித்தார்.

நாங்கள் தெரிவிப்பதைப்போல் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் ராகுல் காந்தி தனது கருத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா? என்பதை நீங்கள் கேட்க வேண்டும்’ என்றார்.

‘வறுமை, ஊழல், நோய்கள் ஆகியவற்றை ஒழிக்க மோடி அரசு பாடுபட்டு வருவதால் சந்திரபாபு நாயுடு, தேவேகவுடா போன்றவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்துகொண்டு இப்போது கூட்டணி அமைக்கிறார்கள்.

மத்தியில் ஆட்சி செய்துவரும் மோடி அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக உத்தரபிரதேசத்தில் அத்தை மாயாவதியும், மருமகன் அகிலேஷ் யாதவும் இப்போது கை கோர்த்திருக்கிறார்கள். 

மத்தியில் திறமையான ஆட்சி மீண்டும் அமைவதற்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் மோடியை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். உத்தரகாண்டில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர வேண்டும்’ எனவும் அமித் ஷா கூறினார்.  #Ramtemple #AmitShah     
Tags:    

Similar News