தமிழ்நாடு

கார் குண்டுவெடிப்பு வழக்கு: ஐ.எஸ். ஆதரவாளரை கைது செய்ததால் கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்த்த சதி

Published On 2024-04-28 09:56 GMT   |   Update On 2024-04-28 09:56 GMT
  • குற்றப்பத்திரிகையில் கோவையில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கைதான உமர் பாரூக் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்துள்ளார்.

கோவை:

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் காரில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார். தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் கூட்டத்தில் கார் குண்டை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த சதியில் சிக்கி ஜமேஷா முபின் பலியானார். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் (தேசிய புலனாய்வு முகமை) விசாரித்து வருகிறார்கள்.

இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் முபின் மற்றும் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய ஆதரவாளரான உமர்பாரூக்கின் நெருங்கிய கூட்டாளியான கோவை போத்தனூர் திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த தாஹா நசீர் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்திருந்தனர். 14-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட தாஹாநசீருக்கு எதிராக பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த குற்றப்பத்திரிகையில் கோவையில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவர் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரை ஜெயிலில் அடைத்ததற்கு பழிவாங்கும் நோக்கில் கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டமிட்டு இருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக கார் குண்டு முன்கூட்டியே வெடித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதான உமர் பாரூக் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்துள்ளார். அவருடன் தாஹாநசீரும் இணைந்து சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். குண்டுவெடிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கூட முபின் வீட்டுக்கு தாஹாநசீர் சென்று சதிச்செயலுக்கு திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் நாட்டின் அமைதியை சீர்குலைத்து, ஒருமைப்பாட்டுக்கும், மத நல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைக்கும் நோக்கில் இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பலமுறை கோவையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கிடைக்கும் தகவல்களை கொண்டு அடுத்தடுத்து குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர். குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மொத்தம் 3 முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News