தொடர் விடுமுறை - குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
- குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இன்று காலை முதலே கணிசமாக அதிகரித்து காணப்பட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்போது பள்ளிகளுக்கு தேர்வு கால விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏராளமானோர் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கும் வருகை தந்து தங்களது குடும்பத்தினருடன் ஆனந்த குளியல் இட்டு வருகின்றனர்.
தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலகட்டமும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முன்னதாக குற்றால அருவிகளில் புனித நீராட அதிக அளவில் வருவதால் குற்றாலமானது ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தாலும், சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தாலும் களை கட்டி உள்ளது.
தற்போது மழைப் பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. எனினும் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.