ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்கிரசின் நிலைப்பாடு- செல்வப்பெருந்தகை
- சிலர் கூட்டணி பற்றி மாற்றுக்கருத்துக்களை கூறுவது அவர்கள் சொந்தக் கருத்து.
- கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ் காலத்தில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இது சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என்பதை விட இந்திய இறையாண்மை மீதான தாக்குதல் ஆகும். இதன் தாக்கம் லண்டன், கனடா ஆகிய நாடுகளில் உள்பட வெளிநாடுகளில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
வங்காள தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் பாதுகாப்புக்கும் பிரதமர் மோடிதான் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தமிழகத்திற்கு ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் வர இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த கட்சியும் எங்களை நசுக்க எல்லாம் முடியாது. பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடைசி நேரத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் காங்கிரசுக்கு சிக்கல்கள் உருவானது.
அதனால்தான் முன்கூட்டியே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். காங்கிரசை பலப்படுத்த ஆட்சி, அதிகாரம் அவசியம் என்பதை காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்து உள்ளார்.
எங்கள் குழுவின் தலைவர் அவர்தான். தமிழக காங்கிரசுக்கும் அந்த நிலைப்பாடுதான். எங்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். சிலர் கூட்டணி பற்றி மாற்றுக்கருத்துக்களை கூறுவது அவர்கள் சொந்தக் கருத்து. அதேபோல்தான் திருச்சி வேலுசாமி கூறி இருப்பதும் அவரது கருத்துதான். காங்கிரசின் கருத்து அல்ல.
கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளது. மீதி வாக்குறுதிகளையும் எஞ்சிய காலத்தில் நிறைவேற்றி விடும். ஆசிரியர்கள், நர்சுகள் போராட்டத்திலும் அவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் என்றார்.
பேட்டியின் போது முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமி, மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், சுமதி அன்பரசு, தாம்பரம் நாராயணன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ராம்மோகன், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார், மாவட்ட தலைவர் முத்தழகன், டி. என்.அசோகன், புத்தநேசன், ஜி.தமிழ் செல்வன் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. யசோதாவின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள்.