செய்திகள்

சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு

Published On 2019-01-19 02:40 GMT   |   Update On 2019-01-19 02:40 GMT
கர்நாடகாவில், ஆட்சியை தக்க வைக்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு, ஆபத்து நீடிக்கிறது. #OperationLotus #CLP #KarnatakaPolitics #Congress
பெங்களூரு:

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்.,கூட்டணி ஆட்சி நடக்கிறது. அமைச்சரவை விஸ்தரிப்புக்கு பின், காங்கிரசில் அதிகரித்த அதிருப்தி, இன்னும் ஓயவில்லை.

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, ரமேஷ் ஜார்கிஹோளி, தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லி சென்றிருந்தார். பா.ஜ., மேலிட தலைவர்களை சந்திக்க முயற்சித்தார். இதற்கிடையில், கார்ப்பரேஷன் மற்றும் வாரிய நியமனத்துக்கு பின், காங்கிரசில் சில, எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் கொதித்தனர். இவர்கள், ரமேஷ் ஜார்கிஹோளி கோஷ்டியில் இணைந்தனர். சிலர், அதிருப்தி கொடியேந்தி, மஹாராஷ்டிர மாநிலம், மும்பைக்கு பறந்தனர்.

இந்த அதிருப்தியை சாதகமாக்கி, கர்நாடகாவில் ஆட்சியமைக்க, பா.ஜனதா தலைவர்கள், களமிறங்கியதாக தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.

இந்த பரபரப்பான நிலையில், காங், எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு கூட்டம், சித்தராமையா தலைமையில் பெங்களூரில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக வந்ததால், கூட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில், 76 எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். நாகேந்திரா, மகேஷ் கமடள்ளி, உமேஷ் ஜாதவ், ரமேஷ் ஜார்கிஹோளி வரவில்லை.



கூட்டத்தின் முடிவில், மேலிட தலைவர்கள் கூறியதாவது:

பா.ஜ.,வின்,ஆப்பரேஷன் தாமரை' முயற்சி இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சில நாட்கள் கட்டாயமாக சொகுசு விடுதியில் தங்க வேண்டும். எந்த விளக்கமும் தேவையில்லை. வீட்டுக்கு செல்ல வாய்ப்பு அளிக்க முடியாது. தொலைபேசி மூலம் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, விடுதிக்கு செல்லும் விஷயத்தை கூறி, உங்களுக்கு தேவையான பொருட்களை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதையடுத்து, காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பிடதியில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து நீடிக்கிறது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், கடும் கலக்கத்தில் உள்ளனர்.  #OperationLotus #CLP #KarnatakaPolitics #Congress 
Tags:    

Similar News