செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா ரூ.30 கோடி பேரம்- சித்தராமையா குற்றச்சாட்டு

Published On 2018-12-31 05:05 GMT   |   Update On 2018-12-31 05:05 GMT
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை லஞ்சம் வழங்க பேரம் நடப்பதாக சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். #siddaramaiah #congress #bjp

பெங்களூரு:

கர்நாடகாவில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா எதிர்க்கட்சியாக உள்ளது.

சமீபத்தில் மந்திசபை விரிவு செய்யப்பட்டது. அதில் மந்திரி பதவியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோலி நீக்கப்பட்டார். அதனால் அதிருப்தி அடைந்த அவர் திடீரென மாயமாகிவிட்டார். அவர் பா.ஜனதாவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். டுவிட்டரிலும் செய்தி வெளியிட்டுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. போதிய மெஜாரிட்டி இல்லாததால் அக் கட்சியால் ஆட்சிஅமைக்க முடியவில்லை. தற்போது காங்கிரஸ்- மதசார்பறற ஜனதா தளம் ஆட்சி நடைபெறுகிறது.

இந்த ஆட்சியை கவிழ்த்து விட்டு பா.ஜனதா ஆட்சி அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரம் நடக்கிறது.

எங்கள் (காங்கிரஸ்) எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை லஞ்சம் வழங்க பேரம் பேசப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கையில் பி.எஸ். எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்திக்க எடியூரப்பா டெல்லி சென்றுள்ளார். பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் இத்தகைய நடவடிக்கை மூலம் ஊழலில் பா.ஜனதா ஈடுபடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது ரமேஷ் ஜார்கிகோலி இன்னும் வந்து சேரவில்லை. அவர் டெல்லியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார்.

அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோலி கட்சியை விட்டு வெளியேறமாட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருக்கு கட்சி பல பதவிகளை வழங்கியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக எங்களுடன் அவர் பணியாற்றி வருகிறார். எனவே கட்சிக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் அவர் நடந்து கொள்ள மாட்டார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சித்தராமையாவின் குற்றச்சாட்டை பா.ஜனதா திட்டவட்டமாக மறுத்துள்ளது. தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீதே சித்தராமையாவுக்கு நம்பிக்கை இல்லை.

பா.ஜனதா பெரிய தொகை கொடுத்து குதிரை பேரம் பேசினால் அது குறித்து அவர் போலீசில் புகார் அளிக்கலாமே என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் எஸ்.பிரகாஷ் தெரிவித்து இருக்கிறார்.  #siddaramaiah #congress #bjp

Tags:    

Similar News