செய்திகள்

சபரிமலையில் பெண்கள் அனுமதியை எதிர்த்து கேரளா சிவசேனா தற்கொலை போராட்டம்

Published On 2018-10-13 09:38 GMT   |   Update On 2018-10-13 09:38 GMT
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை எதிர்க்கும் வகையில், பம்பை ஆற்றில் தற்கொலை போராட்டம் நடத்தப் போவதாக கேரளா சிவசேனா அறிவித்துள்ளது. #Sabarimala #KeralaSivsena
திருவனந்தபுரம்:

பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
 
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை ஐயப்பன் கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று பக்தர்கள் கருத்து தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பந்தளம் ராஜகுடும்பம், கோவில் தந்திரிகள், ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 10-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மறு சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. மேலும் தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகு வழக்கமான வழக்குகளுடன் சேர்த்து சீராய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என்றும் இதற்காக தீர்ப்பை நிறுத்தி வைக்க இயலாது என்றும் கூறிவிட்டது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கைகளை கேரள அரசு தொடங்கியது. இது ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து அவர்கள், மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதித்தனர்.



வரும் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட இருக்கிறது. அப்போது பெண் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைந்துவிட வாய்ப்பு இருப்பதாக கருதிய பக்தர்கள் அதனை தடுக்க போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை எதிர்க்கும் வகையில், பம்பை ஆற்றில் தற்கொலை போராட்டம் நடத்தப் போவதாக கேரளா சிவசேனா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கேரளா சிவசேனாவை சேர்ந்த பெரிங்கமலா அஜி கூறுகையில், வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் எங்கள் பெண் உறுப்பினர்கள் பம்பை ஆற்றில் முற்றுகையிடுவர். எந்த பெண்ணாவது சபரிமலையில் நுழைந்தால் எங்கள் உறுப்பினர்கள் ஆற்றில் விழுந்து  தற்கொலை செய்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். #Sabarimala #KeralaSivsena
Tags:    

Similar News