செய்திகள்

கேரளாவுக்கு உணவு, உடைகளை விட தொழில்நுட்ப உதவியே அதிகம் தேவை - மத்திய மந்திரி

Published On 2018-08-21 02:30 GMT   |   Update On 2018-08-21 02:30 GMT
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உணவு, உடைகளை விட தொழில்நுட்ப உதவியே அதிகம் தேவைப்படுவதாக அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaFloodRelief
திருவனந்தபுரம்:

கடந்த நூறாண்டில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. நிதியுதவிகளும், உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

கேரளாவில் ஏற்பட்ட பெரும்பாதிப்பை அதிதீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய சுற்றுலாத் துறை இணை மந்திரி ஏ.ஜே.அல்போன்ஸ் தற்போதைய நிலையில், கேரளாவுக்கு உணவோ, உடையோ போதுமான அளவில் உள்ளது என்றும், தற்போது கேரளாவில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுனர்கள் தான் தேவை என்றும் கூறியுள்ளார்.



இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

மழை வெள்ளத்தால், கேரளாவில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசிப்பிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. அவற்றை சரிசெய்ய தங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், பிளம்பர்கள் மற்றும் தச்சர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர். எனவே உணவு, உடை உள்ளிட்ட தேவைகள் தற்போது போதுமான அளவில் உள்ளது என்றும், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொழில்நுட்ப உதவி இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார். #KeralaFloods #KeralaFloodRelief #SaveKerala 

Tags:    

Similar News