search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா கனமழை"

    • கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.

    இதற்கிடையே, கேரளாவின் தென் மாவட்டங்களில் வரும் புதன்கிழமை வரை கனமழை பெய்யும். அதன்பின், வட மாவட்டங்களில் மழை தீவிரமடையும். 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 2 மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது வானிலை மையம்.

    மேலும், மாநில அரசு சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போய் உள்ளார். கனமழை காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    • கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ வேகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குறிப்பாக கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ வேகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

    ஆற்றங்கரைகள், கடலோரப் பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    சில நாட்களில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணைய சர்வதேச நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #MullaiPeriyarDam
    புதுடெல்லி:

    கடந்த மாதம் கேரளாவில் கனமழை பெய்ததை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு அணையின் நீர் மட்டத்தை குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    மேலும், அணை பலவீனமாக இருப்பதாக மீண்டும் கூறியுள்ள கேரள அரசு, நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இவ்வழக்கில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டதும் வெள்ள சேதம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறியிருந்தது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 139.99 அடியாக பராமரிக்கலாம் என துணைக்குழு பரிந்துரைத்ததன் அடிப்படையில் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் எனவும், அணையின் நீர்மட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இன்று மீண்டும் மனு விசாரிக்கப்பட்ட நிலையில், மனுவில் சர்வதேச நிபுணர் குழுவை கொண்டு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்துவது குறித்து தேசிய பேரிடர் அணைகள் பாதுகாப்பு துணைக்குழு முடிவெடுக்கும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
    சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை சாத்தியமற்றது என தேவசம் போர்டு தலைவர் கூறியுள்ளார். #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பம்பா உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சேதத்தைக் கணக்கில்  எடுத்துக்கொண்டு, நவம்பர் மாதம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தைக்  கட்டுப்படுத்தவும், ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கவும் கேரள காவல்துறை மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

    நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்கக் கோரியும், காவல் துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு  அறிமுகப்படுத்தி இருக்கும் "விர்ச்சுவல் கியூ" மூலமாகப் பக்தர்களின் பதிவைக்  கணக்கிடவும்  காவல்துறை வலியுறுத்தியது.

    இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திருவாங்கூர் தேவஸ்தானத்தின் தலைவர் பத்மகுமார், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சபரிமலையில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உண்டாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

    ஆன்லைன் தரிசன பதிவு முறை குறித்து பல்வேறு புகார்கள் வருவதால், அந்த முறை நீக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கமான முறையிலேயே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 

    திருப்பதியை போல சபரிமலையிலும் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மகரவிளக்கு சமயங்களில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு வருகின்றனர். இதனை, 40 ஆயிரமாக எப்படி குறைக்க முடியும் என பத்மகுமார் கூறினார். 

    வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பம்பை - திருவேணி பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். 
    கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் வெள்ள நீர் சூழ்ந்திருந்த நிலையில், தற்போது 15 நாட்களுக்கு பின்னர் இன்று விமானங்கள் இயக்கப்பட உள்ளன. #KeralaFloods #KochiAirport
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 1924-ம் ஆண்டுக்குப் பிறகு கேரளத்தை தாக்கிய இந்த வெள்ளப்பேரிடரால் சுமார் 370 பேர் தங்கள் உயிரை இழந்தனர். 80,000 பேர் காப்பாற்றப்பட்டனர். 5,645 நிவாரண முகாம்களில் சுமார் 2,23,000 பேர் தங்கவைக்கப்பட்டனர். மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

    மேலும் 200 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. 80,000 கிலோ மீட்டர் அளவுக்கான சாலைகள் பாதிக்கப்பட்டது. இடுக்கி மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள சாலைகள் மிகக் கடுமையாக சேதமடைந்தன.

    இடுக்கி, முல்லை பெரியாறு அணைகள் திறக்கப்பட்டதாலும், கனமழையினாலும் தண்ணீர் தேங்கியதால் கொச்சின் விமான நிலையம் 15 நாட்களாக மூடப்பட்டிருந்தது. இதனால் ரூ.220 கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
    மேலும் கொச்சின் வரும் விமானங்கள் திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கோயமுத்தூர் போன்ற வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. விமான ஓடு பாதை, விமான நிலையத்தில் உள்ள கடைகள், டாக்ஸிகள் நிறுத்துமிடம் போன்றவையும் பாதிக்கப்பட்டன.

    இந்த பாதிப்புகளால் மக்களின் அன்றாடம் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், மாநில வருவாயில் 10 சதவீதம் பங்களிக்கும் சுற்றுலா துறையிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தின. மேலும் சாலை, விமானம் என 2 வகை போக்குவரத்துகள் முடங்கிய நிலையில் வர்த்தகக் கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறுவதிலும் சிக்கல்கள் எழுந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 20 முதல் வர்த்தக விமானங்கள் மட்டும் செயல்பட துவங்கியது.

    இந்நிலையில் 15 நாட்களாக மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று திறக்கப்பட உள்ளது. பிற்பகலில் முதல் விமானம் தரையிறங்க உள்ளது. 
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #KeralaFlood #ITReturn
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இந்த மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக அம்மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கேரளாவை சேர்ந்த மாத சம்பளம் பெறுவோர் மற்றும் வருமான வரி செலுத்த தகுதி உடையோர் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் அதாவது அடுத்த மாதம் 15-ம் தேதி வரை அவகாசம் வழங்கி மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

    கேரளாவுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அம்மாநில போலீசார் விசாரணை நடத்தினர். #Kerala #Seeman
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வரலாறு காணாத அளவு பெய்த மழையினால் 14 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு கேரளா திரும்பி வரும் நிலையில், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு உதவும் விதமாக பல்வேறு அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் மற்றும் மாநில அரசுகள் உதவி செய்து வருகின்றன.

    இந்நிலையில் கேரள மக்களுக்கு உதவி புரியும் வகையில் 30ற்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நாம் தமிழர் கட்சியினர் கோட்டயம் மாவட்டம் சென்றனர். சங்கனாச்சேரி பகுதியில் வெள்ள நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்க முற்பட்ட போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த பதாகைகள் இருந்ததால் சர்ச்சை உருவாகியது.

    இதனால் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக சீமான் மற்றும் அவருடன் சென்ற நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் விசாரணைக்காக கோட்டயம் மாவட்டக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர் .

    பல மணி நேர விசாரணைக்குப் பின்பு நாம் தமிழர் கட்சியினர் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு போலீசார் அனுமதி அளித்தார்கள். விசாரணைக்குப் பின்பு சீமான்தமிழகம் திரும்பினார்.
    கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தேவைப்பட்டால் உதவி செய்ய தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். #ImranKhan #Pakistan #KeralaFlood
    இஸ்லாமாபாத்:

    கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 20 ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் அடைந்துள்ளது. 

    இந்நிலையில், இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பாக பிராத்தனை தெரிவிக்கொள்கிறேன். மேலும் எந்த வகையான உதவியையும் பாகிஸ்தான் செய்ய தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
    தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை 2016-ன் படி வெளிநாட்டில் இருந்து வரும் நிதியுதவியை ஏற்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். #KeralaFlood #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணமாக ஐக்கிய அமீரக அரசு ரூ.700 கோடி தருவதாக கூறியது. ஆனால், பேரிடர் சமையத்தில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதில்லை என மத்திய அரசு கொள்கை முடிவு வைத்துள்ளதாக கூறப்பட்டு ஐக்கிய அமீரகத்தின் நிதியுதவியை ஏற்க மறுப்பதாக தகவல்கள் வெளியானது.

    இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஆகஸ்ட் 26-ம் தேதி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும்.

    2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதியை ஏற்றுக் கொள்ளலாம். எனினும், இது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது. முடிவெடுக்கும் போது பார்க்கலாம் என கூறினார்.
    கேரளா மழை வெள்ளத்திற்கு ஐக்கிய அமீரகம் 700 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ள நிலையில், குஜராத் பூகம்பத்துக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் உதவியுள்ளது நினைவு கூறத்தக்கது. #keralaFlood
    புதுடெல்லி:

    கேரளாவில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழை மாநிலத்தையே புரட்டிப்போட்டது. 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், பொதுமக்கள் என பல தரப்பில் இருந்தும் கேரளாவுக்கு நிதியுதவி குவிந்து வருகிறது.

    இந்நிலையில், கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி வழங்கப்படும் என ஐக்கிய அமீரக அரசு அறிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர்களின் பங்கு ஐக்கிய அமீரத்தின் வளர்ச்சியில் இருப்பதால் அவர்களின் துக்கத்தில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம் என அமீரக இளவரசர் குறிப்பிட்டிருந்தார்.

    எனினும், சர்வதேச உதவியை எதிர்நோக்கக்கூடாது அது இந்தியா மீதான மதிப்பை சீர் குலைக்கும் என பல வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதற்கு முன்னதாக கடந்த 2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் இந்தியா சர்வதேச உதவிகளை பெற்றுள்ளது. 

    மத்திய வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் உள்ள தகவலின் படி குஜராதில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து, சுமார் 109 நாடுகள் நேரடியாக உதவி செய்துள்ளன. நிதியுதவி, நிவாரணப்பொருட்கள், உணவுப்பொருட்கள், கூடாரம், அடிப்படை தளவாடங்கள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளது.

    அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா உள்ளிட்ட வல்லரசுகள் முதல் ஷிசெல்ஸ், நேபாள் ஆகிய குட்டி நாடுகள் வரை குஜராத்துக்கு உதவிக்கரம் கொடுத்துள்ளது. வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அமீரகம், ஏமன், சிரியா ஆகிய நாடுகளும் கனிசமான உதவியை அளித்துள்ளன.

    109 நாடுகள் போக, சர்வதேச அமைப்புகள், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் குஜராத்துக்கு நிவாரணம் அனுப்பியுள்ளது. குஜராத் பூகம்பம் ஏற்பட்ட போது அங்கு முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
    பாதைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. #KeralaFlood #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஒட்டுமொத்த மாநிலமும் கடுமையான பேரழிவை சந்தித்தது. 10 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இந்த பேரழிவால் சுமார் 250-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர்.

    கேரளாவில் ஓடும் பல ஆறுகளில் இன்னும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், ஓணம் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஓணம் பண்டிகையை ஒட்டி வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடை திறக்கபட உள்ளது.

    எனினும், பம்பை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதாலும், சபரிமலைக்கு செல்லும் மலைப்பாதையில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பாதைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால், பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என சபரிமலை தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. 
    கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவர் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். #KeralaFlood #MKStalin #DMK
    சென்னை:

    திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி இதுவரை 357 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இயற்கை பேரிடர் அம்மாநில உட்கட்டமைப்புக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்நிலையில் கேரள மாநில மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் திமுகவின் சார்பில் ஏற்கெனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர கேரள மாநில கட்சி நிர்வாகிகளும், இங்குள்ள கட்சி தோழர்களும் நிவாரண உதவிகளையும், பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக, கேரளாவில் நிகழ்ந்துள்ள இந்த மிகக் கடுமையான பேரிடரால் அம்மாநில மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற நேரத்தில், அம்மாநில சீரமைப்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக அளிப்பார்கள்'' என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    ×