என் மலர்tooltip icon

    இந்தியா

    தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கொல்லம்-இடுக்கி மாவட்டத்தில் முகாம்
    X

    தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கொல்லம்-இடுக்கி மாவட்டத்தில் முகாம்

    • கேரள மாநில மின்சார வாரியத்தின் கீழ் உள்ள அணைகளின நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • வருகிற 3-ந்தேதி வரை வெவ்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த மாதமே தொடங்கிவிட்டது. இதை யடுத்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதன் காரணமாக பல இடங்களில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்துவிட்டன.

    மாநிலம் முழுவதும் இயல்பை விட அதிக ளவு மழை பெய்து இருக்கிறது. வழக்கமாக எதிர்பார்க்கப்படும் மழையளவு 69.6 மில்லிமீட்டர் மழையாகும். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் 395.5மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்குவதற்காக 50-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு 1,900பேர் தங்கியிருக்கின்றனர்.

    கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கேரள மாநில மின்சார வாரியத்தின் கீழ் உள்ள அணைகளின நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 16 முக்கிய அணைகளின் மொத்த நீர் இருப்பு 40 சதவீதமாக இருக்கிறது. அனைத்து அணைகளின் நீர் இருப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறிய அளவிலான 12 அணைகளில் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் நாளை வரை தீவிரத்தன்மை கொண்ட மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்றும் பல மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வருகிற 3-ந்தேதி வரை வெவ்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் நிலச்சரிவும், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. முக்கியமாக தமிழகத்தில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இருந்து ஒரு குழு கேரளா சென்றிருக்கும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர்.

    அவர்கள் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களுடன் கொல்லம் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் முகாமிட்டு தயார் நிலையில் இருக்கின்றனர்.

    Next Story
    ×