search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கேரளாவில் மீண்டும் கனமழை- 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

    சபரிமலை ஐய்யப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்திலும் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளதால் அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

    இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தம் உருவாகி உள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    இதன்காரணமாக கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இன்று முதல் 25-ந்தேதி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோல மலையோர மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    நாளையும், நாளை மறுநாளும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்டங்களுக்கும் அரசு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சபரிமலை கோவில்


    சபரிமலை ஐய்யப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்திலும் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளதால் அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

    மண்டல பூஜை தொடங்கிய முதல் நாளிலேயே பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். இப்போது மீண்டும் அங்கு பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டிருப்பதால் சபரிமலை செல்லும் பக்தர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே ரெயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து கொல்லம்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- திருவனந்தபுரம், திருவனந்தபுரம்- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சில ரெயில்கள் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது போல் கேரளாவில் இருந்து ஆந்திராவுக்குச் செல்லும் சில ரெயில்களும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.


    Next Story
    ×