செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது: ஜெய்ராம் ரமேஷ்

Published On 2018-05-27 20:29 GMT   |   Update On 2018-05-27 20:29 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறினார். #SterlitePlant #JairamRamesh #GrantingClearance
புதுடெல்லி:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் போராடி வருகின்றனர். 100-வது நாள் போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியாயினர்.

இந்த நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அப்போதைய சுற்றுச் சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ், ஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

இதை மறுத்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இதில் எந்த உண்மையும் இல்லை என்பதை அது தொடர்பான தகவல்களே கூறும். சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகா மந்திரியாக நான் 2009-ம் ஆண்டு மே மாதம் 31-ந்தேதி நியமிக்கப்பட்டேன். ஆனால் ஸ்டெர்லைட் ஆலை 3 சுற்று அனுமதிகளை 2007 மார்ச் 30, 2007 ஆகஸ்டு 9 மற்றும் 2009 ஜனவரி 1 ஆகிய நாட்களில் பெற்றுள்ளது. எனவே இந்த அனுமதிகள் எல்லாமே நான் சுற்றுச்சூழல் மந்திரியாக பதவி ஏற்பதற்கு முன்பாக வழங்கப்பட்டவை.

மேலும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் 2010 மார்ச் 10 மற்றும் 2010 ஆகஸ்டு 11 ஆகிய நாட்களில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறேன். அமைச்சகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட அலுவல்பூர்வ தகவல்களின் அடிப்படையில் இதை தெரிவித்து இருக்கிறேன். எந்த நேரத்திலும் நான் நாடாளுமன்றத்தை தவறாக நடத்தியதில்லை.

ஆனாலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு நான் சுற்றுச் சூழல் அனுமதி வழங்கியதாக தொடர்ந்து தவறான செய்திகள் வெளிவருவதால் பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதால் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #SterlitePlant #JairamRamesh #GrantingClearance
Tags:    

Similar News