search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட் ஆலை"

    • ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனு.
    • காற்று மாசு குறித்த புகாரில் உண்மை இல்லை.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் காப்பர் கழிவுகளை தாங்கள் நீக்குவதாகவும், அதற்கான செலவுகளை மட்டும் ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெறப்படும் என தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், ஆலை தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முழுக்க முழுக்க விதிமீறல்கள் நடந்துள்ளன என்று ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த நடவடிக்கை சரியானது என தமிழக அரசு வாதம் செய்துள்ளது.

    ஆனால், காற்று மாசு குறித்த புகாரில் உண்மை இல்லை என வேதாந்தா நிறுவனம் தரப்பு வாதம் செய்துள்ளது.

    • சிபிஐயின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சிபிஐயின் இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
    • ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே குற்றவாளி என சிபிஐ-யின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்தது.

    மதுரை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் (மே.2018) போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 15 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தார்கள்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியது.

    துப்பாக்கி சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்தீபன், தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சிபிஐக்கு புகார் மனு அனுப்பினார். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதன் அடிப்படையில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், சிபிஐ விசாரணையை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.

    சிபிஐயின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சிபிஐயின் இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். கொலைகள் மற்றும் குற்றசெயல்களில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் வருவாய் அலுவலர் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மதுரையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ச்சுனன் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கினார் நீதிபதி சண்முகையா. அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு படுகொலைகள் வழக்கில், ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே குற்றவாளி என சிபிஐ-யின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்தது.

    மீண்டும் இந்த வழக்கில் புலன் விசாரணை செய்து ஆறு மாதத்திற்குள் புதிய இறுதியறிக்கையை தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி உள்ளது.
    • தாமதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆணையிடக் கோரி அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 'ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி உள்ளது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் அனுமதிக்க முடியாது' என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசின் இந்நிலைப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும் என்.எல்.சிக்கும் பொருந்தும். எனவே, இனியும் தாமதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடிப்படையான விதிமுறைகளை கூட அந்நிறுவனம் பின்பற்றியது இல்லை.
    • வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி தமிழக அரசு சீல் வைத்தது.

    இந்நிலையில் ஸ்டெர் லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தியும், ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற அனுமதி வழங்க வேண்டும், ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து, ஆலையில் இருந்து கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வழக்கில், அதனை தமிழக அரசே அகற்றும் எனவும், அதற்கான செலவுகளை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்தது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் மேற்பார்வையில் சப்-கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில பல்வேறு வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் முதல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்த பணிகள் சி.சி.டி.வி. கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு லாரிகள் மூலம் ஆலையில் இருந்து பாதுகாப்புடன் அகற்றப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் 1.65 மில்லியன் மெட்ரிக் டன் ஜிப்சம் கழிவுகள் இருந்தது. இதுவரை அவற்றில் 45 ஆயிரம் மெட்ரிக் ஜிப்சம் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து கழிவுகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாரத்திற்கு ஒருமுறை எவ்வளவு ஜிம்சங்கள் ஆலையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது என்பதை கண்காணிப்பு குழு கண்காணித்து வருகிறது.

    இதற்கிடையே ஆலையை மூடியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய அரசாணைகள், ஆவணங்கள் மற்றும் குறுகிய எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

    மேலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய 2 நாட்களில் விசாரித்து முடிக்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

    இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எழுத்துப்பூர்வமாக 25 பக்க அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

    அதில், கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி உள்ளது. அடிப்படையான விதிமுறைகளை கூட அந்நிறுவனம் பின்பற்றியது இல்லை.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது. எனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தை செயல்பட அனுமதிக்க இயலாது.

    எனவே வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. எனவும் தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா , தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் கனிமொழி எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களின் நினைவுகளை மனதில் ஏந்தி அஞ்சலி செலுத்துகிறோம்.

    எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாத்திமா அன்னை ஆலயம் அருகே பொதுமக்கள் திரண்டு உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ந்தேதி போராட்டம் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் சிலர் நேற்று முத்துநகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. எனினும் சமூகவலைத்தளங்களில் அங்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும் என வதந்தி பரவியதால் முத்துநகர் கடற்கரையில் பூங்கா நேற்று மூடப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அதே போன்று பீச் ரோடு முழுவதும் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் கலவர தடுப்பு வாகனங்கள், தீயணைப்புதுறை வாகனங்கள், அதிவிரைவு படையினர், ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    எனினும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடைபெறும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    துப்பாக்கி சூட்டின் 5-வது ஆண்டு நினைவு தினமான இன்று போராட்டம் நடைபெற்ற பகுதியான குமாரரெட்டியாபுரத்தில் உயிரிழந்த 13 பேரின் உருவப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பாத்திமா அன்னை ஆலயம் அருகே பொதுமக்கள் திரண்டு உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், மடத்தூர், பாத்திமா நகர், தொம்மையா கோவில் தெரு, பூபாலராயபுரம், லயன்ஸ் டவுன், முத்தையாபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உறவினர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நினைவு நாளையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்தியராஜ், ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் என தூத்துக்குடி மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த 2,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    • இன்றைய கவர்னர் தமிழ்நாட்டின் சாபக்கேடு என வைகோ கூறியுள்ளார்.
    • இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது ஆணவத்தின் உச்சமாகும். வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகார திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார் கவர்னர்.

    ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் கொடும் சொற்களை வீசியிருக்கிறார். அதே வெளிநாடுகளிலிருந்து கவர்னர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள்.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறார்கள். நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்து விட்டன. சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்திவைத்தாலே நிராகரிப்பதாகி விடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். இன்றைய கவர்னர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் பெய்து வரும் மழையால் இயந்திரங்கள், உபகரணங்கள் உள்ள இடங்களில் நீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  இயந்திரங்கள், உபகரணங்களை சீர் செய்ய, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    தூத்துக்குடியில் பெய்து வரும் மழையால் இயந்திரங்கள் துருப்பிடிக்கும் நிலையில் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 
    ஸ்டெர்லைட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்புக்காக 1,600 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #Sterlite #Judgement #SupremeCourt
    தூத்துக்குடி :

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டு, ஆலை மூடப்பட்டது.

    இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை அமல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது. இந்த மனு மற்றும் அரசின் மேல்முறையீடு மனு ஆகியவை சேர்த்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கடந்த வாரம் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

    பாதுகாப்பு பணிக்காக தூத்துக்குடிக்கு வந்துள்ள வெளிமாவட்ட போலீசாரை படத்தில் காணலாம்.

    இந்த நிலையில் தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.

    இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் உச்சகட்ட பரபரப்பு காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து நகரில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் முரளிரம்பா (தூத்துக்குடி), அருண்சக்திகுமார் (நெல்லை), நெல்லை மாநகர துணை ஆணையர் சுகுணாசிங் ஆகியோர் தலைமையில் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதற்காக நேற்று மாலை முதல் நெல்லை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, மதுரை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த போலீசார் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் நேற்று மாலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து சிப்காட், கலெக்டர் அலுவலகம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அவர்கள் நேற்று இரவு முதல் பாதுகாப்பு பணியை தொடங்கினர். அதே போன்று தூத்துக்குடி நகருக்குள் வரக்கூடிய அனைத்து சாலைகளிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடத்துவதற்கான பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் தூத்துக்குடி நகர் முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தெரிகிறது. #Sterlite #Judgement #SupremeCourt 
    ஸ்டைர்லைட் ஆலை திறப்புக்கு யார் காரணம்? என விவாதிக்க தயார் என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், ஒருநாள் அல்ல ஆண்டு முழுவதும் விவாதிக்க தயார் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். #Sterlite #DJayaKumar #MKStalin
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டதாக சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க நானும், திமுக எம்எல்ஏக்களும் தயாராக உள்ளோம். முதல்வர் தயாராக உள்ளாரா என்பதை தெரிவிக்கட்டும்” என கூறியிருந்தார்.

    மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்தால், சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக பங்கேற்க தயார்” எனவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், இது தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம் என்பது குறித்து, வருடம் முழுவதும் விவாதிக்க தயாராக உள்ளோம். ஸ்டாலின் தயாராக உள்ளாரா?. சட்டப்பேரவைக்கு வந்து திமுக பேசட்டும். அவர்களது துரோகத்தை நாங்கள் கூறுகிறோம்” என்றார்.

    மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மூடியதுதான், அரசாணை எங்கே போனாலும் செல்லும். ஐநா சபைக்கே சென்றாலும் இனி ஆலையை திறக்க முடியாது” என ஜெயக்குமார் கூறினார்.
    ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட் தரப்பில் முன்வைக்கப்படும் சட்டரீதியான எதிர்ப்புக்களை எதிர்கொண்டு இந்த ஆணையை உறுதி செய்ய வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. மேலும், ஆலையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு, மக்கள் வலிமையின் இன்னுமோர் பேருதாரணம். அனைத்து அரசியல் கட்சிகளும் சிரம் தாழ்த்தி ஏற்க வேண்டிய பாடம். களத்தில் பலியான தியாகிகளை போற்றுவதோடு இல்லாமல் பாடமும் கற்கவேண்டும்

    தமிழக அரசியலின் புதிய பொழிப்புரையை தூத்துக்குடி எழுதிவிட்டது. தமிழகமே அதைப்பின்பற்றி இழந்த அரசியல்மாண்பை மீட்டெடுக்கவேண்டும். அரசியல்வாதிகளின் தேவைக்கான காரணத்தை, புதிய பாடமாக கற்றுத் தந்துள்ளது. இப்போராட்டம். இக்கல்வி கற்று, மக்கள் நீதி மய்யம் பள்ளியாய் மாறி வீதி தோறும் இச்செய்தியை பரப்பும்.

    தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். வெறும் சாட்சிகளாக , திணிக்கப்பட்ட செய்திகளின் கைதிகளாக இனி தமிழர் இயங்கமாட்டார்கள். நாம் விரும்பும் மாற்றமாக மாறத் துவங்கிவிட்டோம்

    சரியான நேரத்தில் மக்களின் போராட்டத்தைப் புரிந்து கொண்டு அரசு செயல்பட்டிருந்தால் தேவையற்ற உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். ஸ்டெர்லைட் தரப்பில் முன்வைக்கப்படும் சட்டரீதியான எதிர்ப்புக்களை அரசு எதிர்கொண்டு இந்த ஆணையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமான ஒன்று என ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. #SterliteShut
    பெங்களூர்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. மேலும், ஆலையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை குறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது துரதிர்ஷ்டவசமான முடிவு. 22 ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மையுடன் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் நடத்தி வந்தோம். தமிழக அரசின் அரசாணையை படித்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.

    என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×