search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது- மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
    X

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது- மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #SupremeCourt #SterliteCopperPlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி 18-ந்தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

    அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கும்படி மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.



    இதற்கிடையே, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க போதிய நேரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பதால், இயந்திரங்களை பழுதுபார்த்து பராமரிப்பதற்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அதனை மீறி விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். #SupremeCourt #SterliteCopperPlant 
    Next Story
    ×