செய்திகள்

மிரட்டும் தொனியில் பேசுகிறார் என இந்நாள் பிரதமர் மீது முன்னாள் பிரதமர் ஜனாதிபதியிடம் புகார்

Published On 2018-05-14 10:10 GMT   |   Update On 2018-05-14 10:10 GMT
காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சியின் தலைவர்களை பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். #ManmohanSingh #PMModi
புதுடெல்லி:

உன்னாவ் மற்றும் கத்துவா பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து நாட்டில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், பிரதமர் மோடி மவுனம் காத்ததை விமர்சித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “நீங்கள் எனக்கு அளித்த அறிவுரைகளை பின்பற்றி தற்போது வாய்திறந்து பேசுங்கள்” என மன்மோகன் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வாரம் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் பேசும் போது, காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்து மோடி பேசியிருந்தார். குறிப்பாக நாட்டின் முதல் பிரதமர் நேரு, பகத்சிங் உள்ளிட்டவர்களை சிறையில் சென்று சந்திக்கவில்லை என கூறினார். ஆனால், அது பொய்யான குற்றசாட்டு என பல வரலாற்று ஆசிரியர்கள் பதிலடி கொடுத்திருந்தனர்.


இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்களை மிரட்டும் தொனியில் பேசுகிறார். இது பிரதமர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தகுதியானது அல்ல” என அதில் மன்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கண்ட புகார் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமரிடம் கேட்டறிய வேண்டும் என மன்மோகன் சிங் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். #ManmohanSingh #PMModi
Tags:    

Similar News