செய்திகள்

பிரதமர் பதவி - ராகுல் கருத்துக்கு சிவசேனா ஆதரவு

Published On 2018-05-10 04:57 GMT   |   Update On 2018-05-10 04:57 GMT
2019-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்றால் பிரதமர் ஆவேன் என்ற ராகுல்காந்தி கருத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. #RahulGandhi #ShivSena
மும்பை:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டியில் 2019-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் பிரதமர் ஆவேன் என்றார்.

அவரது கருத்தை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். பிரதமர் ஆவேன் என்று ஆணவத்தில் சொல்கிறார், இதன்மூலம் கட்சியின் மூத்த தலைவர்களை அவர் மதிக்கவில்லை என்று மோடி கூறினார்.

இதற்கிடையே ராகுல் காந்தி கருத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. இதுபற்றி சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கூறியதாவது:-

ஜனநாயகத்தில் பிரதமராக யாரும் ஆசைப் படலாம். அதுபோல்தான் ராகுல்காந்தியும் சொல்லி இருக்கிறார். அதுபற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. ராகுல்காந்தியை விமர்சிப்பவர்கள் அவரை தேர்தலில் தோற்கடிக்கட்டும். அதற்கு பதிலாக விமர்சிப்பது கூடாது.


2014-ல் இருந்த சில நிலைமைகளால் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. ஆனால் இப்போதும் காங்கிரஸ் நாட்டில் மிகப்பெரிய கட்சியாக விளங்குகிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமரை தேர்வு செய்வார்கள். சரத் பவார் கூட பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர்.

இதேபோல் மோடி, அருண் ஜெட்லி, அத்வானி ஆகியோருக்கும் பிரதமராவதற்கு தகுதி இருக்கிறது. மராட்டியத்தில் பால்கார் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசில் இருந்து இறக்குமதி செய்துதான் பா.ஜனதா தனது வேட்பாளராக நிறுத்தியது.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இது பா.ஜனதா வெற்றி பெற்ற தொகுதி என்று கூறுகிறார். ஆனால் காங்கிரசில் இருந்து வந்தவரை வேட்பாளராக நிறுத்தியதால் அந்த தொகுதி ஒருபோதும் பா.ஜனதாவுக்கு உரியது அல்ல என்பது தெளிவாகிறது. சிவசேனா இந்த தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #RahulGandhi #ShivSena #Modi
Tags:    

Similar News