செய்திகள்

நான்காண்டுகள் இல்லாத உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை - விழி பிதுங்கும் பொதுமக்கள்

Published On 2018-04-22 06:24 GMT   |   Update On 2018-04-22 06:24 GMT
மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்று நான்காண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக கூறி பிரச்சாரம் செய்து கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வும் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக எண்ணெய் நிறுவனங்கள் விலை குறைப்பு நடவடிக்கையை எடுத்தபோது கலால் வரியை அரசு உயர்த்திக்கொண்டது. கண் துடைப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லிட்டருக்கு ரூ.2 கலால் வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று பெட்ரோல் விலை ரூ.74.40 ஆகவும், டீசல் விலை ரூ.65.65 ஆகவும் உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் பெட்ரோல் விலை ரூ.76.06 ஆக இருந்தது. அதற்கு பின்னர் தற்போது பெட்ரோல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால், வாட் வரியை குறைத்தால் கடும் வருவாய் இழப்பை சந்திக்க வேண்டும் என்பதால் மாநில அரசுகள் தயங்குகின்றன. பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. #TamilNews
Tags:    

Similar News