செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மவுனம் காப்பது ஏன்? - ராகுல் காந்தி

Published On 2018-04-13 11:17 GMT   |   Update On 2018-04-13 11:17 GMT
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிவரும் நிலையில் பிரதமர் மோடியின் மவுனம் ஏற்புடையது அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Rahulgandhi
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரர்களால் கற்பழிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்மீது நடவடிக்கை எடுக்ககோரி முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தை போலீஸ் காவலின்போது மரணமடைந்தார்.

இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த கொடுமைகளுக்கு மத்திய - மாநில அரசுகள் உரிய முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு வேளையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு நடத்திய மெழுகுவர்த்தி பேரணி இச்சம்பவங்களின் பக்கம் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.


இந்நிலையில், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிவரும் நிலையில் பிரதமர் மோடியின் மவுனம் ஏற்புடையது அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெருகிவரும் நிலையில் திரு. பிரதமர் அவர்களே! உங்களது மவுனத்தை ஏற்றுகொள்ள முடியாது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கற்பழிப்பு மற்றும் கொலை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிப்பது ஏன்? என்பதை தெரிந்துகொள்ள இந்தியா காத்திருக்கிறது’ என தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். #RahulGandhi #Modi
Tags:    

Similar News