செய்திகள்

நிதி நெருக்கடியால் கட்சி அலுவலகத்தை வாடகைக்கு விடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Published On 2018-02-11 09:37 GMT   |   Update On 2018-02-11 09:37 GMT
மின்சார பில், முழுநேர ஊழியர்களுக்கு ஊதியம் ஆகிய செலவுகளுக்கு பணம் இல்லாத காரணத்தால் மேற்கு வங்காளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை அலுவலக கட்டிடம் வாடகைக்கு விடப்படுள்ளது. #CPIM
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் 33 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2011-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரசே வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

இந்நிலையில், புர்பா பர்தாமன் மாவட்டத்தில் உள்ள கவுஷ்கரா பகுதியில் அமைந்துள்ள லோக்கல் கமிட்டி அலுவலக கட்டிடத்தை வாடகைக்கு விட மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. 1999-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டிடம் மூன்று மாடிகளை கொண்டது. மூன்று அறைகள், இரண்டு மீட்டிங் ஹால், சமையலரை மற்றும் இரத வசதிகளை உள்ளடக்கியதாக உள்ளது.

இந்த பகுதி கட்சி கமிட்டியில் உள்ள 422 உறுப்பினர்களின் ஒப்புதலோடு கட்சி அலுவலகம் வாடகைக்கு விடப்படுகிறது. மின்சார பில், முழுநேர ஊழியர்களுக்கான ஊதியம் ஆகிய செலவுகளை சமாளிக்க முடியாததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கமிட்டி செயலாளர் நாராயன் சந்திர கோஷ் தெரிவித்துள்ளார்.

போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்று அந்த கட்டிடத்தில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வாடகை கட்சிக்கு கிடைக்கும். இந்த தொகையை கொண்டு கட்சிப் பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்த கோஷ், இனி லோக்கல் கமிட்டி, மண்டல கமிட்டி அலுவலகம் உள்ள கவுஷ்கரா பகுதியில் செயல்பட தொடங்கும் என்று கூறியுள்ளார்.

கேரளா மற்றும் திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இக்கட்சியில் லெவி முறை உள்ளது. தொண்டர்கள் தங்களது ஊதியத்தை கட்சிக்கு அளித்து விடுவர், அவர்களுக்கு கட்சி மாதம் தோறும் ஒரு தொகை வழங்கும்.

ஆனால், மேற்கண்ட கவுஷ்கரா பகுதியில் கட்சி தொண்டர்கள் பெரும்பாலும் தினக்கூலிகளாக இருப்பதால் இம்முறை கடைப்பிடிக்க முடியவில்லை என கட்சியினர் கூறுகின்றனர். #CPIM #TamilNews
Tags:    

Similar News