செய்திகள்

நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை

Published On 2017-12-13 02:35 GMT   |   Update On 2017-12-13 02:35 GMT
நகைக்கடை கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூர்:

சென்னை கொளத்தூர் ஸ்ரீநகர் அனெக்ஸ் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 37). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 15 வருடங்களாக சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

நகைக்கடைக்கு மேல் ஒரு கடை உள்ளது. அந்த கடையின் தளத்தில் அதாவது நகைக்கடையின் கூரையில் துளையிட்டுள்ளனர். கடந்த மாதம் 16-ம் தேதி மதியம் அதன் வழியாக உள்ளே இறங்கிய நபர்கள், நகைக்களையில் இருந்த தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அதன் வழியாக மாடியில் உள்ள கடைக்கு சென்று உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். விசாரணையில், அந்த கடையை சமீபத்தில் ராஜேஷ் என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது.

அவரையும் அவரது கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் நகைகளுடன் சாதாரணமாக நடந்து செல்லும் சி.சி.டி.வி பதிவு வெளியாகி இருந்தது.

இந்த கொள்ளை தொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைதாகிய நிலையில், மேலும், சிலர் ராஜஸ்தானுக்கு தப்பியுள்ளதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் இன்று காலை கொள்ளையர்களை சுற்றி வளைத்த தனிப்படையினர் அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டுள்ளனர். இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து, தமிழக காவல் துறையின் உயரதிகாரிகள் அடங்கிய குழு ராஜஸ்தான் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News