செய்திகள்

நடுவானில் விமானம் பறந்தபோது மூச்சு திணறல்: 80 வயது பயணியை காப்பாற்றிய டாக்டர்கள்

Published On 2017-11-21 06:32 GMT   |   Update On 2017-11-21 06:32 GMT
டெல்லியில் இருந்து இங்கிலாந்துக்கு பறந்த விமானத்தில் நடுவானில் மூச்சு திணறலால் அவதிப்பட்ட 80 வயது பயணியை காப்பாற்றிய டாக்டர்களுக்கு விமானிகள் பாராட்டு தெரிவித்தனர்.
புதுடெல்லி:

டெல்லியில் இருந்து இங்கிலாந்து பர்மிங்காம் நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 80 வயது முதியவர் ஒருவரும் பயணம் செய்தார். அவர் இருதய நோயாளி ஆவார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது அந்த முதியவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் சுய நினைவு இன்றி இருக்கையில் அமர்ந்து அவதிப்பட்டார்.

இதுகுறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த முதியவரை காப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். உடனடியாக விமானத்தை திருப்பி தரை இறக்க முடிவு செய்தனர். மேலும் அந்த நோயாளிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க விமானத்தில் டாக்டர்கள் யாராவது இருந்தால் உதவி செய்யுங்கள் என மைக்கில் அறிவிப்பு செய்தனர்.

நல்லவேளையாக அந்த விமானத்தில் 3 டாக்டர்கள், 3 நர்சுகள் இருந்தனர். இந்த அறிவிப்பை கேட்டதும் அந்த டாக்டர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்ட முதியவரை காப்பாற்றும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர். தக்க நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்ததால் அந்த முதியவர் அபாய கட்டத்தில் இருந்து மீட்கப்பட்டார்.

விமானம் தரை இறக்கப்படுவதும் தடுக்கப்பட்டது. மேலும் விமானம் இங்கிலாந்து பர்மிங்காம் நகருக்கு உரிய நேரத்தில் சென்றடைந்தது. அங்கு பத்திரமாக முதியவர் கொண்டு செல்லப்பட்டார்.



விமானத்தில் நடுவானில் டாக்டர்களின் உரிய முதலுதவி சிகிச்சையால்தான் அந்த முதியவர் உயிர் பிழைத்தார். இதுகுறித்து ஏர் இந்தியா விமானத்தின் பைலட்டுகள் டாக்டர்களுக்கு பாராட்டு, நன்றி தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

அதில் உரிய நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்டு நடுவானில் ஒரு பயணியின் உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

விமானம் திரும்பி சென்று தரை இறக்காமல் தடுக்கப்பட்டதற்கு டாக்டர்கள் குழுவை சேர்ந்த டாக்டர் பால், குனீஷ் தயாள், டாக்டர் ராகுல்குமார், டாக்டர் சந்திரா, வி.என்.சேருவு ஆகியோருக்கு பாராட்டு, நன்றி என விமானத்தின் பைலட் கமாண்டர் நிவேதிதா பாசின் அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News