செய்திகள்

புனே அருகே நதிகள் இணைப்பு பணியில் பயங்கர விபத்து: கிரேன் விழுந்து 8 தொழிலாளர்கள் பலி

Published On 2017-11-21 02:06 GMT   |   Update On 2017-11-21 02:06 GMT
புனே அருகே நதிகள் இணைப்பு திட்ட பணியின் போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் கிரேன் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புனே:

மராட்டியத்தில் உள்ள பீமா மற்றும் நிரா நதிகளை இணைக்கும் திட்டம் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நதிகள் இணைப்பு திட்டத்தின் கீழ் புனேயை அடுத்த இந்தாப்பூர் பகுதியில் உள்ள அகேலே கிராம பகுதியில் பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். நேற்று மாலை 6 மணியளவில் வழக்கம் போல பணிகள் முடிந்தன. இதையடுத்து சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். கட்டுமான பணிக்காக தளவாட பொருட்களை தூக்கிக்கொண்டு வரும் ராட்சத கிரேன் ஒன்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் திடீரென கிரேனை தாங்கி பிடித்து இருக்கும் இரும்பு கம்பி அறுந்தது. இதன் காரணமாக கண் இமைக்கும் நேரத்தில் கிரேன் 250 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது அமுக்கியது.

இந்த கோர விபத்தில் கிரேனுக்கு அடியில் சிக்கிய தொழிலாளர்கள் உடல் நசுங்கினார்கள். மேலும் சிலர் படுகாயம் அடைந்து வேதனையில் துடித்தனர்.

இதை பார்த்து மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அறுந்து விழுந்த கிரேனை சுற்றி அலறியபடி அங்கும், இங்குமாக ஓடினார்கள். விபத்து பற்றி போலீஸ் மற்றும் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிரேனுக்கு அடியில் இருந்து 7 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களில் சிலரது உடல்கள் சிதைந்து போய் இருந்தன.

போலீசார் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

கிரேன் அறுந்து விழுந்து 8 பேர் பலியான துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பிக்வன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News