செய்திகள்

ஜேசுதாஸ் குரலில் ஹரிவராசனம் பாடலை மீண்டும் ஒலிப்பதிவு செய்ய தேவசம் போர்டு முடிவு

Published On 2017-11-20 08:13 GMT   |   Update On 2017-11-20 08:18 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை சாத்தும் போது ஒலிக்கப்படும் ஹரிவராசனம் பாடலை மறு ஒலிப்பதிவு செய்யவும், வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக தேவசம் போர்டின் புதிய தலைவர் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐய்யப்பன் கோவில் தேசவசம் போர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சமீபத்தில் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், சில திருத்தங்களோடு ஹரிவராசனம் பாடலை மீண்டும் ஒலிப்பதிவு செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது.

‘ஹரிவராசனம்’ பாடல் வரிகளில் ‘ஹரிவராசனம் ஸ்வாமி விஸ்வமோகனம்’ என்பதுபோல ஒவ்வொரு வார்த்தைக்கு நடுவிலும் ‘ஸ்வாமி’ என்ற சொல் இடம்பெறும். ஆனால், ஜேசுதாஸின் குரலில் சன்னிதானத்தில் ஒலிக்கும் பாடலில் ‘ஸ்வாமி’ என்பது இடம்பெறவில்லை. எனவே, ‘ஸ்வாமி’ என்பதையும் சேர்த்து ஜேசுதாஸ் குரலில் மீண்டும் ஒலிப்பதிவு செய்ய இருப்பதாக தேவசம் போர்டின் தலைவராக ஒரு வாரம் முன்பு பொறுப்பேற்றுள்ளர் பத்மகுமார் கூறியுள்ளார்.

மேலும், பாட்டின் நடுவில் ‘அரிவிமர்த்தனம்’ என்று யேசுதாஸ் சேர்த்துப் பாடியிருப்பார். ‘அரி’ என்றால் எதிரிகள். ‘விமர்த்தனம்’ என்றால் அழிப்பது. எனவே, இது தனித்தனி வார்த்தைகளாகத்தான் வரவேண்டும். இதையும் திருத்த முடிவு செய்துள்ளோம். தற்போது அமெரிக்காவில் உள்ள ஜேசுதாஸிடம் இது தொடர்பாக பேசியுள்ளதாகவும், வரும் 30-ம் தேதி எர்ணாகுளத்தில் ஒரு திருமணத்துக்காக வரும் அவர் பாடலை பாட இருப்பதாகவும் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

மகரவிளக்குக்கு முன்பு இப்பணி முடிந்துவிடும் என நம்புவதாகவும், ஜேசுதாஸை சன்னிதானத்துக்கே அழைத்துவந்து பாடச் செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சபரிமலையில் இனி வி.ஐ.பி தரிசனத்திற்கு இடமில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News