செய்திகள்

கங்கை நதியில் மூழ்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிதி: முதல் மந்திரி நிதிஷ்குமார்

Published On 2017-11-06 00:35 GMT   |   Update On 2017-11-06 00:35 GMT
பீகார் மாநிலத்தின் கங்கை நதியில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பாட்னா:

பீகார் மாநிலத்தின் கங்கை நதியில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள மாஸ்டனா காட் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதிக்கு நேற்று சிறுவர்கள், பெண்கள் உள்பட சுற்றுலா பயணிகள் 11 பேர் வந்தனர்.

கங்கை நதிக்கரையில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக கால் இடறி நதியில் விழுந்தான். அவனை காப்பாற்றுவதற்காக அவனுடன் வந்திருந்த அனைவரும் நதியில் குதித்தனர். துரதிருஷ்டவசமாக அவர்களில் 9 பேர் நீரில் மூழ்கி உயிர் இழந்தனர். மற்ற 2 பேரை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கங்கை நதியில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நிதிஷ்குமார் கூறுகையில், கங்கை நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலியானது கேட்டு மனவேதனை அடைந்துள்ளேன். அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News