search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "announces"

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு 15-ந் தேதி (சனிக்கிழமை) புதிய தூய்மை திட்டம் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva
    புதுடெல்லி

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ந் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



    இதன் தொடர்ச்சியாக புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கிவைக்கிறார்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி பிறந்த 150-வது ஆண்டை அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி நாம் தொடங்குகிறோம். பாபுவின் (காந்தியடிகள்) கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும், வரலாற்று சிறப்பு மிக்க தூய்மை இந்தியா திட்டமும் அன்றைய தினத்தில் 4-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அனைவரையும் நான் வணங்குகிறேன்.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 15-ந் தேதி காலை 9.30 மணியளவில் தூய்மையே உண்மையான சேவை என்ற திட்டத்தை நாம் தொடங்குகிறோம். அன்றைய தினம், தூய்மை இந்தியா திட்டத்தில் அயராது உழைத்து வரும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.

    இந்த திட்டத்தில் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதுவே மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.  #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva 
    ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி செவிலியர்களுக்கு மதிப்பூதியத்தை உயர்த்தி பிரதமர் மோடி அறிவித்தார். #Modi #Incentives #Asha #Anganwadi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு முழுவதும் உள்ள மத்திய சுகாதார பணியாளர்களான ஆஷா, அங்கன்வாடி, ஏ.எம்.என். (துணை செவிலியர்கள்) ஊழியர்கள் ஒரு லட்சம் பேருடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    ஆஷா பணியாளர்களின் வழக்கமான ஊக்கத்தொகை உயர்த்தப்படும். அதோடு ஆஷா பணியாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பிரதமரின் இலவச காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். அதேபோல அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியமும் அதிகரிக்கப்படும்.

    அதன்படி இதுவரை மாதம் ரூ.3 ஆயிரம் பெற்றுவந்தவர்களுக்கு இனி ரூ.4,500 கிடைக் கும். அதேபோல மாதம் ரூ.2,200 பெற்றவர்களுக்கு இனி ரூ.3,500 கிடைக்கும். அங்கன்வாடி உதவியாளர்களின் மதிப்பூதியமும் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,250 ஆக உயர்த்தப்படும். இந்த உயர்வுகள் அடுத்த மாதம் முதல் அமல் படுத்தப்படும்.

    அதுமட்டுமின்றி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களில் ஐ.சி.டி.எஸ். அப்ளிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ.250 முதல் ரூ.500 வரை அவர்களது செயல்திறனுக்கு ஏற்ப வழங்கப்படும்.

    ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார பயனாளிகள் தான் தேசத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலமில்லாத அஸ்திவாரத்தின் மீது வலுவான கட்டிடத்தை கட்டமுடியாது. அதேபோல தான் நாட்டின் குழந்தைகள் பலமில்லாதவர்களாக இருந்தால் நாட்டின் முன்னேற்றமும் குறையும்.

    3 கோடி குழந்தைகள் மற்றும் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தரமான, சுகாதாரமான மகப்பேறு மற்றும் போதுமான ஊட்டச்சத்து ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    ஒவ்வொரு மகப்பேறுக்கு பின்னரும் ஆஷா பணியாளர்கள் அந்த குழந்தைகளை 42 நாட்களில் 6 முறை நேரில் பார்த்துவந்தனர். இனி 15 மாதங்களில் 11 முறை அவர்கள் குழந்தைகளை நேரில் சென்று கவனிப்பார்கள். குழந்தைகளின் வாழ்க்கையில் முதல் ஆயிரம் நாட்கள் மிகவும் முக்கியம். உங்கள் அர்ப்பணிப்பு சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  #Modi #Incentives #Asha #Anganwadi 
    ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஆக்கி அணியில் இடம் பிடித்துள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வீராங்கனைகள் ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார். #NaveenPatnaik #AsianGames2018
    புவனேஸ்வரம்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஆக்கி அணியில் இடம் பிடித்து இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வீராங்கனைகள் சுனிதா லக்ரா, நமிதா தோப்போ, நிலிமா மின்ஸ், தீப் கிரேஸ் எக்கா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று அறிவித்தார்.



    இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டியில் ஹெப்டத்லான் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த வீராங்கனை ஸ்வப்னா பர்மன் வீட்டுக்கு மத்திய மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியா நேற்று சென்று அவரது பெற்றோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் ஸ்வப்னாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.   #NaveenPatnaik #AsianGames2018
    சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ. 8,500 கோடியிலான திட்டத்துக்கும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
    புதுடெல்லி:

    சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ. 8,500 கோடியிலான திட்டத்துக்கும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    நாடு முழுவதும் சர்க்கரை ஆலைகள் நெருக்கடியில் உள்ளன. சர்க்கரைக்கான தேவையை விட உற்பத்தி அளவு அதிகரித்து உள்ளதால், சர்க்கரை ஆலைகள் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.9 வரை இழப்பை சந்திக்கின்றன.

    சர்க்கரை விலையில் ஏற்பட்டு உள்ள சரிவு காரணமாக கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.20 ஆயிரம் கோடிக்கு அதிகமாக பாக்கி வைத்து உள்ளன.

    இந்த பிரச்சினைகளில் இருந்து சர்க்கரை ஆலைகள் மீண்டு வருகிற வகையில் சர்க்கரை இறக்குமதி மீதான வரியை 100 சதவீத அளவுக்கு மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஏற்றுமதி வரியை ரத்து செய்தது. சர்க்கரை ஆலைகள் 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யுமாறு மத்திய அரசு கூறி உள்ளது.

    இந்தநிலையில், சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்டி, மறுவாழ்வு வழங்குகிற வகையில் ரூ.8 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு தீட்டி உள்ளது.

    இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய மத்திய மந்திரிசபை வழங்கியது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி வசதி கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ரூ.4 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * சர்க்கரை ஆலைகளில் புதிதாக எத்தனால் உற்பத்தி வசதியை ஏற்படுத்தவும், இருக்கிற வசதியை விரிவுபடுத்தவும் வழங்குகிற கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்யும் வகைக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கப்படுகிறது.

    * கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய பாக்கி தொகையை செலுத்த உதவும் வகையில் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளவும் மத்திய மந்திரிசபை தீர்மானித்தது. இதன்படி சர்க்கரை உற்பத்தி அடிப்படையில் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்கு ரூ.1,540 கோடி ஒதுக்கப்படும்.

    * சர்க்கரை கையிருப்பை அதிகளவில் வைத்திருப்பதற்காக ரூ.1,200 கோடி வழங்கப்படும்.

    சர்க்கரையில் இருந்து எடுக்கப்படுகிற எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து வாகனங்களை இயக்க முடியும். எத்தனால் கலந்தால் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    அஞ்சல் துறையில் பணியாற்றி வருகிற ஜி.டி.எஸ். என்று அழைக்கப்படுகிற கிராமப்புற தபால் அலுவலக ஊழியர்களின் சம்பளம், அலவன்சுகள் உயர்த்தப்படுகின்றன. கிராமப்புற தபால் அலுவலக ஊழியர்கள் கிளை அஞ்சல் அதிகாரி, உதவி கிளை அஞ்சல் அதிகாரி என்று இரு பிரிவின்கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

    இவர்களது சம்பளம், அலவன்ஸ் உயர்த்துவதால் மத்திய அரசுக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.1,257 கோடியே 75 லட்சம் செலவு பிடிக்கும். இதன்மூலம் 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் பலன் அடைவர்.

    நலிவு அடைந்த, நஷ்டத்தில் இயங்குகிற அரசு நிறுவனங்களை குறித்த காலத்தில் மூடுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    விண்வெளித்துறையில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டங்களை தொடர்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதற்கு ரூ.6 ஆயிரத்து 131 கோடி நிதி ஒதுக்கீடு தேவைப்படும்.

    நாடு முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்குகிற 3 லட்சம் தெரு விளக்குகளை அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது. 
    கர்நாடக முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தது பற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், “அதிகாரம், பணம், ஊழல் அல்ல, மக்களின் விருப்பம்தான் நிறைவேறும்” என்று குறிப்பிட்டார். #rahulgandhi #karnatakaassembly
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமலேயே முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்து விட்டார்.
    இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவில் எல்லாவற்றையும் அதிகாரம் சாதித்து விடாது; பணம் சாதித்து விடாது; ஊழல் சாதித்து விடாது. மக்களின் விருப்பம்தான் நிறைவேறும் என்று பாரதீய ஜனதா கட்சி காட்டி இருக்கிறது என்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார்.



    கர்நாடக சட்டசபையில், சபை அலுவல்கள் முடிந்தபோது, பதவி விலகிய முதல்-மந்திரி எடியூரப்பா, தற்காலிக சபாநாயகர் போப்பையா உள்ளிட்ட பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேசிய கீதத்துக்கு மரியாதை தரவில்லை என்று ராகுல் காந்தி சாடினார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., பிரதமர் மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு நாட்டின் எந்த ஒரு அமைப்பின் மீதும் மரியாதை கிடையாது. இதேபோன்றுதான் காவிக்கட்சி கர்நாடகம், கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் அவர்கள் மக்கள் தீர்ப்பை மதிக்கவில்லை” என்று கூறினார்.

    தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா பதவி விலக வேண்டும். அதுதான் நல்லது.

    கர்நாடகத்தில் ஆட்சியை தக்கவைப்பதற்கு எம்.எல்.ஏ.க்களை வாங்குவதற்கு பிரதமர் மோடி அங்கீகாரம் வழங்கி இருக்கிறார். ஊழலை எதிர்த்து போரிடுவதாக சொல்கிற அவர், ஊழல்வாதியாக இருக்கிறார்.

    இந்தியாவை விட, சுப்ரீம் கோர்ட்டை விட மோடி பெரியவர் அல்ல. கர்நாடகத்தில் நடந்த நிகழ்வு மூலம், பாரதீய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நம்புவோம்.

    பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக மற்ற எதிர்க்கட்சிகளுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #rahulgandhi #karnatakaassembly
    ×